உயர்சாதியினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்காக 10% இடஒதுக்கீடு அளிக்கும் குஜராத் பாஜக அரசின் அவசரச் சட்டத்தை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது. அவ்வாறான இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, படிட்தார் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தின் காரணமாக குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் கடந்த மே 1-ம் தேதியன்று அவசரச் சட்டம் ஒன்றை பிறபித்தார். அரசின் புதிய அவசரச் சட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்துக்கு குறைவாக ஆண்டு வருமானம் உடைய உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு உண்டு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, குஜராத்தில் ஏற்கெனவே இடஒதுக்கீடு பட்டியலில் இல்லாத- அதேநேரம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சத்திற்கு குறைவான வருவாய் உள்ள அனைவருக்கும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்பதுதான் இந்த அவசரச் சட்டத்தின் சாரம்.

ஆனால், இதை எதிர்த்து சமூக ஆர்வலரான ஜெயந்த் பாய் மனனி என்பவர், அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல், திடீரென இப்படி ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்து இருப்பது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குஜராத் அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் செல்லாது என்றும், அது ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது.

குஜராத்தில் உயர்சாதியினராக இருப்பவர்கள் இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டம், தற்போது நாட்டில் அமலில் இருக்கும் சமூகரீதியான இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரத்தால் தூண்டிவிடப்பட்ட ஒன்றே ஆகும். இப்போராட்டத்தை காரணம் காட்டி பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதன் மூலம் உயர்சாதியினரின் வாக்குகளை முழுமையாக கைப்பற்றிவிட முடியும் என கணக்கு போட்டது. ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் அந்தக் கணக்கை தகர்த்துள்ளது.