விழுப்புரத்தைச் சேர்ந்த நவீனா என்ற பெண்ணை செந்தில் என்பவர் தீயிட்டு கொளுத்தி, தன்னையும் கொளுத்திக்கொண்டார். செந்தில் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். நவீனா, தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்தார். சில மாதங்களுக்கு முன் செந்தில்(தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்), வேறு சாதி பெண்ணை காதலித்த காரணத்தால் அவர்களுடைய வீட்டினர் தண்டவாளத்தில் வீசி, கால் கைகளை துண்டித்தனர் என்று புகார் அளித்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் ஊடகங்களில் விவாதங்களும் நடந்தன.

இந்த சம்பவம் நடக்கவில்லை என்றும் செந்தில் பொய் சொல்கிறார் என்றும் அ. மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு அறிக்கை தந்தது. இந்நிலையில் செந்தில், நவீனாவை காதலிக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் இதன் விளைவாக தானும் தீவைத்துக் கொண்டு, நவீனாவையும் கொளுத்தியதாகவும் ஊடகங்கள் சொல்கின்றன.

தனிப்பட்ட செந்தில் என்ற நபரின் இந்தக் குற்றங்களுக்கு விவாதம் நடத்தியவர்கள், அதில் பங்கேற்றவர்கள், தலித் அமைப்புகள் என அனைவரையும் குற்றவாளிகளாக்கி வருகின்றன சில அமைப்புகள். தொடர்புடையவர்கள் எதேச்சையாக நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த பிறகும்கூட..குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இத்தகைய பதிவுகள் அதிகமாக எழுதப்படுகின்றன. இவர்கள், ஒரு படி மேலே போய் ‘கருத்து சித்திரம்’ வரைக்கும் போய்விட்டனர். முகப்பில் உள்ள படம் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.