கல்வி

“புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை”: கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் திங்கள் கிழமை (8-8-2016) அன்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள், அமைப்புகள் பங்கேற்கின்றன.

திமுக தலைவர் கருணாநிதி இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய கல்விக் கொள்கை தொடர்பான 200 பக்க அறிக்கையை அளித்துள்ளது.

5 பேர் கொண்ட இக்குழுவில் ஒருவர் மட்டுமே கல்வியாளர் என்பது கவனிக்கத்தக்கது. இக்குழு பரிந்துரைத்துள்ள பல அம்சங்கள் விவாதத்துக்கு உரியவை. பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது.

4-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி என்பதை அமல்படுத்தினால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியமற்று கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

உலகிலேயே கல்வியில் முதலிடத்தில் உள்ள பின்லாந்து நாட்டில் 7 வயதில் தான் கல்வி தொடங்குகிறது. 16 வயது வரை 9 ஆண்டுகளுக்கு தேர்வு இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்வது நலம்.

ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால் தொழில் பயிற்சிக்கு அனுப்பலாம் என்ற பரிந்துரையும் உள்ளது. மறைமுகமாக குலக் கல்வித் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பை பெற்றிடும் வகையில் தொழில் கல்வியை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதே நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.

கல்வி நிர்வாகப் பணிக்கு இந்திய கல்விப் பணித் தேர்வு வைக்க வேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளது. இதன்படி கல்வித் துறை இயக்குநர்களை மாநில அரசு நேரடியாக நியமிக்க முடியாது.

பிளஸ் 2 முடித்தவர்கள் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் பாடத் திட்டங்களை மாநில அரசுகள் திட்டமிட முடியாத நிலை ஏற்படும். இதன்மூலம் இந்தியாவின் அடிப்படை கூறான பன்முகம் சிதைவுறும்.

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதித்தால் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கும். வெளிநாடுகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்றால் அதுபோன்ற கல்வியை இந்தியாவிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் லைசென்ஸ் அல்லது சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுதி லைசென்ஸை புதுப்பித்துக் கொள்ள வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் பயிற்சி பெற வேண்டும் போன்ற பரிந்துரைகளை இக்குழு அளித்துள்ளது. இது ஆசிரியர்களிடம் ஒருவித இயந்திரத் தன்மையை தோற்றுவிப்பதோடு, காலப்போக்கில் சலிப்பு, விரக்தியை ஏற்படுத்தும்.

தற்போது வகுக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வெளிப்படைத் தன்மையோடும், ஜனநாயக அடிப்படையிலும் உருவாக்கப்படவில்லை. கடந்த 2015-ல் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சில விவாத தலைப்புகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் எதுவும் வரவில்லை. திரட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கருத்துக்களை தொகுத்து சுப்பிரமணியன் குழு அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையையும் மத்திய அரசு வெளியிட மறுக்கிறது. இவ்வாறு ரகசியாக கல்விக் கொள்கையை தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன? என பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியிருப்பதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை நவீன குலக்கல்வித் திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கல்விக் கொள்கையை வரையறுக்க கல்வியாளர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். அக்குழுவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த கல்வியாளர்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இக்குழு அறிக்கை நாட்டு மக்கள் முன்பு வைக்கப்பட்டு, மக்கள் கருத்து அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்தத் தீர்மானத்தில், கல்வியை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது. தமிழகத்துக்கு சிறிதும் பொருந்தாத இந்தப் பிரச்சினையை முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கையோடு கையாண்டு, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

“மாநில உரிமைகளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் எதிராகத்திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் மய்ய அரசின் முயற்சியை ஜனநாயக சக்திகள்அனைவரும் இணைந்துமுறியடிக்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.  வரும் ஆகஸ்ட் 8 அன்று மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து  திராவிடர்கழகம் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்திலும் விடுதலைச்சிறுத்தைகள் பெருந்திரளாகப் பங்கேற்கும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கத் திட்ட மிட்டு அதற்காக சில விவாதத் தலைப்புகளை 2015 ஜனவரியில் வெளியிட்டது. நாடு முழு வதும் 2.75 லட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், வலைதளம் மூலம் 29 ஆயி ரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும், அதைத் தொகுத்து அறிக்கை தருவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் அய்ஏஸ் அதிகாரி டிஎஸ்ஆர்சுப்ரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் 43 பக்கங்கள் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்தப் புதிய கல்விக் கொள்கை காவிமயமானதாகவே உள்ளது. இந்தப் புதிய கல்விக் கொள்கை சிறுபான்மைக் கல்விநிறு வனங்களின் இறையாண்மைக்கு பங்கம் விளை விக்கும் வகையில் அவற்றின் உரிமைகளைப் பறிக்கும்வகையில்அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தை அனைத்து நிலையிலும் கட்டாயமாக்குவதும் இதன் நோக்கமாகும். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பாசிச சங்பரிவார் சக்திகள் முன்னேடுக்கும் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே கல்வி, ஒரே பண்பாடு என்பதை நடைமுறைப்படுத்தவே இந்தப் புதிய கல்விக் கொள்கை.

குலக்கல்வியை ஊக்குவிப்பது, பன்னாட்டு நிறுவனங்கள் கல்வித் துறையில் முதலீடு செய்வது போன்ற அபாயகரமான முடிவுகளுடன் உள்ள இந்தப் புதிய கல்விக் கொள்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கும் மத்தியஅரசைக்கண்டித்து8.8.2016அன்றுசென்னையில் திராவிடர் கழகம் முன்னெடுக்கும் ஆர்ப் பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதோடுஅப்போராட்டத்திலும்பங்கேற் கும் என தெரிவித்துக் கொள்கிறேன். திரளான எண்ணிக்கையில் இப்போராட்டத்தில் பங்குகொள் ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s