ராஜஸ்தானில் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பசு பாதுகாப்பு கொட்டகைகளில் இரண்டு வாரங்களில் 500க்கும் மேற்பட்ட மாடுகள் பட்டினியால் மடிந்திருக்கின்றன.

’ஹிங்கோனியா’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் இந்த பசு பாதுகாப்பு மையத்தில் பணிபுரியும் 250 பணியாளர்கள் சம்பளப் பிரச்சினை காரணமாக மாடுகளை பராமரிக்கும் பணியை ஒரு மாத காலமாக செய்யவில்லை என்று என் டி டீவி செய்தி  வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தேங்கிப்போன கழிவுகளுடன் மாடுகள் கட்டிய இடத்திலேயே இருந்திருக்கின்றன. மழை காரணமாக சேர்ந்துகொண்ட சகதியும் புதைக்குழி போன்ற மாடுகளை சூழ்ந்துள்ளது.

தன்னார்வலர்கள் சேர்ந்து இந்தக் கொட்டகைகளை சுத்தம் செய்ய சென்றபோது மாடுகள் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.  இரண்டு நாட்களில் 90 இறந்த மாடுகளை அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த பசு பாதுகாப்பு கொட்டகையில் எட்டாயிரம் மாடுகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அரசாங்க மருத்துவர் இந்த மாடுகள் பட்டினியால்தான் இறந்திருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

“பணியாளர்கள் மே மாதத்திலிருந்து சம்பளம் தரவில்லை என்பதால் சென்றுவிட்டார்கள். அவர்கள் இல்லாமல் எப்படி பிரச்சினையை தீர்க்க முடியும்?” என்கிறார் இந்த மையத்தின் இயக்குநரான சிங் தேவால். இந்த மையம் வருடத்துக்கு ரூ. 20 கோடி இதற்கென ஒதுக்கீடு பெற்றுள்ளது.

அம்மாநில காங்கிரஸ் தலைமை “பசு பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?” என ஆளும் பாஜக அரசை விமர்சித்துள்ளது. மேலும் ராஜஸ்தான் அரசின் கண்டுகொள்ளாமையே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.