டாஸ்மாக் ஊழியர்களுக்கு, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு ஏற்புடையதாக இல்லை என்று தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கூறியுள்ளது. சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே. திருச்செல்வன், விடுத்துள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு சட்டமன்றத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ. 500, ரூ. 400, ரூ. 300 என்ற அடிப்படையில் ஊதிய உயர்வு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களுக்கு இதற்கு முன் திமுக ஆட்சிக்காலத்தில் 3 முறையும், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 5 முறையும் ஊதியஉயர்வு அளித்தும் அவர்களது அதிகப்பட்ச ஊதியமே ரூ.7 ஆயிரமாகத்தான் உள்ளது. 13 ஆண்டு காலமாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களைப் பணி வரன் முறைப்படுத்தி, அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென்று சம்மேளனம் தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஆனால், இதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ளாமல் பெயரளவிற்கு ஊதிய உயர்வை அளித்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு மீண்டும் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கொண்டு வருகிறது.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்- ஆட்சி பொறுப்பேற்றதும் மதுவிலக்கை அமலாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைகுறைத்தும், 500 கடைகளை மூடியும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி விற்பனை நேரம் 2 மணி நேரம் குறைக்கப்ப ட்டது. 500 கடைகள் மூடப்பட்டன. ஆனால், மூடிய கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தொடர் பணி வழங்குவது குறித்து தெளிவான திட்டமிடுதல் செய்யப்படவில்லை. இதனால் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உரிய தொடர் பணி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட நிரந்தர காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் அவர்களை சம்பந்தப்பட்ட கடைகளில் கூடுதல் ஊழியர்களாகவோ அல்லது பறக்கும்படை, ரிசர்வ், சர்பிளஸ் பணிகளில் ஈடுபடுத்தவோ நடவடிக்கை எடுக்காமல் காத்திருப்போர் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு பொருத்தமான பணி வழங்குவது குறித்தோ, அல்லது வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் நிரப்புவது குறித்தோ, அரசு அறிவிப்பில் எதுவும் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது.

மேலும் தமிழக முதல்வர் அறிவித்த படிப்படியான மதுவிலக்கு அமலாக்கம் குறித்து அரசு தரப்பில் வெளிப்படையான செயல்திட்டத்தை அறிவிக்காமல், டாஸ்மாக் கடைகள் மூடுகிறோம் என்பதை கண்துடைப்பு நடவடிக்கையாகவே மக்கள் எடுத்துக்கொள்வார்கள். இதில் அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி ஊழியர்கள் மத்தியில் பணி பாதுகாப்பு குறித்து ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கிடவும், பிரச்சனைக்குரிய கடைகள் மூடப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் தமிழக முதல்வர் முன்வர வேண்டும். அதேபோல டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, முறையான நிர்வாக நடவடிக்கை களை உறுதி செய்தால் இன்னும் சில நூறு கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் சிஐடியு சம்மேளனம் வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.