ஈஷா யோகா மையத்தில், குழந்தைகளும், பெண்களும் வலுக்கட்டாயமாக துறவியாக்கப்படுவதாக அந்த மையத்தின் முன்னாள் ஊழியர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.  மகள்களை பிரிந்து வாடும் பேராசிரியர் காமராஜ் போன்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது இவற்றை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“நான் ஈஷா மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். எங்கள் ஊரில் மொத்தம் ரூ. 15 லட்சம் மரம் நடுவதற்கென்று வசூலித்து கொடுத்தேன். ஆனால், அந்த அளவுக்கு மரங்களை நடவே இல்லை. ஊர் மக்கள் கேட்க ஆரம்பித்தனர். ஈஷா மையத்தின் நடவடிக்கைகள் உவப்பாக இல்லை என்பதும் தெரியவந்தது. சத்குரு ஜக்கி வாசுதேவ் நட்ட செடிகளேகூட காப்பாற்றப்படவில்லை. இதெல்லாம் என்னை அங்கிருந்து வெளியேறவைத்தது” என்று சொல்லும் செந்தில், ஈஷா மையத்தில் இருப்பவர்கள் பலருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

சந்நியாசம் குறித்த கேள்விக்கு, “14 வயது குழந்தைகளுக்கெல்லாம் சந்நியாசம் தந்துவிடுகிறார்கள். குழந்தைகளின் விருப்பத்தையெல்லாம் அவர்கள் கேட்பதில்லை. பெற்றோர் ஒப்புதல் என்ற பெயரில் இது நடக்கிறது. இப்படி சந்நியாசம் தரப்படும் குழந்தைகளுக்கு இரண்டே வேளை உணவுதான். அதுவும் பத்திய உணவுதான் தரப்படும்.

யோகா செய்ய வரும்போதே, யாரிடம் பணம் இருக்கிறது; வேலை வாங்க முடியும் என்ற விவரங்களை யோகா ஆசிரியர்கள் எங்களுக்கு சொல்லி விடுவார்கள். எங்களைப் போன்ற ஒருங்கிணைப்பாளரின் வேலை அவர்களைப் பிந்தொடர்வதுதான்” என்கிறார்.

மன உளைச்சலில் பாதிக்கப்பட்டு வரும் செல்வந்தர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர்கள் வற்புறுத்தி தங்க வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசுபவர்களை வலுக்கட்டாயமாக தங்கவைத்து, அவர்கள் மூலம் பல்வேறு தரப்பினரை‌ தொடர்புகொண்டு மோசடி செய்யும் வேலைகள் நிகழ்ந்து வருதவாகவும் செந்தில் குறிப்பிட்டுள்ளார். ஈஷா யோகா மையத்தின் பல்வேறு கட்டடங்கள் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டினர் சிலர் சட்ட விரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஊழியர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.