குஜராத்தின் உனா நகரில் செத்த மாட்டின் தோலை உரித்து (மாட்டின் உரிமையாளர் அழைப்பின்பேரில்) எடுத்துச்சென்ற தலித் இளைஞர்களை கட்டிவைத்து அடித்தது பசு பாதுகாப்பு குண்டர் படை. இந்த சம்பவம் குஜராத்தில் தலித்துகளை எழுச்சியடைய வைத்ததோடு, அது போராட்டமாக உருவெடுத்தது. மத்தியில் பாஜக ஆட்சிக்குப் பிறகு, பசு மாட்டின் அரசியலில் தலித்துகளும் சிறுபான்மையினரும் தொடர்ந்து தாக்கப்பட்டுக்கொண்டிருந்த சூழலில், குஜராத் தலித்துகளின் போராட்டம் பிரதமர் மோடியை பேசவைத்தது.

தலித்துகளை அடிப்பதை விட்டுவிட்டு தன்னை அடியுங்கள் என்றார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிலர் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொன்னார். இந்திய ஊடகங்கள் பாராட்டித்தள்ளிய சூழலில் மோடி பேசி, ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், பசு பாதுகாப்பு குண்டர்படை இரண்டு தலித் சகோதரர்களை உடைகளை அகற்றி கட்டி வைத்து அடித்துள்ளது.

ஆந்திர பிரதேசம் அமலாபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாட்டின் தோலை உரிக்க, அதன் உரிமையாளர், தலித் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மொகாதி எலிசா, லாசாரை அழைத்திருக்கிறார். அவர்கள் வந்து மாட்டின் தோலை உரித்துக்கொண்டிருந்தபோது அங்கே வந்த குண்டர்கள் அவர்களை தென்னை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.