கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன்
கௌதம சித்தார்த்தன்

கடந்த வெள்ளிக்கிழமை ரோஜா முத்தையா நூலகவளாகத்தில் Gandhi and politics of visual representation என்ற தலைப்பில் ஆய்வாளர் வினய்லால் உரை நிகழ்த்தினார். கணினிக் காட்சியில் காந்தி என்னும் பிம்பத்தை – அவரது சிலைகள், புகைப்படங்கள், கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், ஓவியங்கள் போன்ற பல்வேறு ஆவணங்களை – ஒளிப்படக் காட்சிகளாக முன்வைத்து காந்தியின் அரசியல் பரிமாணங்களைப் பேசினார் ஆய்வாளர். காந்தியின் பிம்பமானது, மேலைநாடுகளின் ஊடகங்களில் எவ்வாறெல்லாம் பதிவாகி இருக்கிறது என்பதை விளக்கும் சொற்சித்திரமாக அது மாறியது.

லாஸ் ஏஞ்செல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிய அமெரிக்க வரலாறு சார் துறையின் பேராசிரியரான அவரது உரை முழுக்க ஒருவித மேலோட்டமான தன்மையுடனேயே நகர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு புகைப்படத்தை முன்வைக்கும்போது அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட சூழல், அந்தப் புகைப்படத்தின் விளக்கம் பற்றியெல்லாம் பேசுவதென்பது, தற்போதைய நுண்ணரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறாது. மாறாக, அந்தப் புகைப்படத்தின் சட்டகங்களுக்குள் புலனாகாமல் மறைந்திருக்கும் அரசியலைத்தான் அவர் முன்வைத்திருக்க வேண்டும்.

பல்வேறு புகைப்படங்களை இந்தவிதமாக முன்வைத்துத் தாண்டிச் செல்கிறார்.

ஒருஇடத்தில், காந்தியின் ஒரு மேற்கோளை ( ‘Be the change that you wish to see in the world.’) முன்வைத்து, இது காந்தி சொன்னது என்பதற்கான ஆதாரம் எங்கும் இல்லை என்றும், ஆனால், இது காந்தியின் மேற்கோள் என்று பெரும்பான்மையான இடங்களில் புழக்கத்திலிருக்கிறது என்றும் சொன்னவர், இந்த மேற்கோளின் தன்மை காந்தியின் பார்வையை ஒத்திருப்பதால் நாம் அதை ஏற்றுக் கொண்டு வரவேற்கலாம் என்று பொத்தாம்பொதுவாகப் பேசினார்.

இந்தப் பார்வை என்பது பொதுப்புத்தி சார்ந்த அரசியலின் பார்வை. ஒரு கருத்தியலைக் கட்டமைக்கும்போது அது எந்த பிம்பத்தின் வழியாக வெளிப்படுகிறதோ அதற்கேற்ப அதன்நிறம் மாறுபடுகிறது. புகழ்பெற்ற பண்டைய ரோமன் கவியான ஆவிட் – ன் கவிதைவரியான End doesn’t justify the means (உன் இலக்கு என்பது நீ செயல்படுத்தும் முறையை நியாயப்படுத்தாது) என்பது காந்தியின் புகழ்மிக்க மேற்கோள்களில் ஒன்று. இது அவர் வழியாக வெளிவரும்பொழுது ஒரு நிறமும், வேறு ஒரு அரசியல் ஆளுமை வழியாக வரும்பொழுது வேறு ஒரு கருத்தும் உருவாகும் என்பதை எளிமையாக அவதானிக்கலாம். இத எதிர்பார்வையான புகழ்மிக்க சிந்தனையாளரான மாக்கியவல்லி சொல்லும், End justify means (இலக்கு உங்கள் வழிமுறையை நியாயப்படுத்தும்) என்கிற கருத்தியலையும் இங்கு அவதானிக்கலாம்.

ஆக, ஒரு பிம்பத்திற்காக, மேற்கோள்கள் எவ்வாறெல்லாம் வடிவமைக்கப்படுகின்றன என்பதையும், காலப்போக்கில் அந்த மேற்கோள்கள் குறிப்பிட்ட பிம்பத்தின் கருத்தியல்களாக மாற்றம்பெறும் அரசியலையும் ஆய்வாளர் சுட்டாமல் நகர்ந்தது என்பதை பெரும் நுண்ணரசியலாகக் கருதவேண்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, உத்தம்சிங்கின் சிலை பற்றிய செய்தியைப் போகிற போக்கில் சொல்லிவிட்டு நகர்கிறார். அவரது உருவச்சிலையை காட்டி, ‘இவர் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?’ என்று பார்வையாளர்களைக் கேட்க, ஒருவராலும் சொல்லமுடியாமல் விழி பிதுங்குகின்றனர். ஆக வெகுஜனமக்களால் மட்டுமல்லாது, அறிவுஜீவிமக்களாலும் அதிகம் அறியப்படாதவர் என்பதை அச்சூழல் உணர்த்தியது.

1919 ல் நடந்த சரித்திரப்பிரசித்தி பெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்வைக் கண்டு கொதித்தெழுந்த பகத்சிங்கைப் பற்றி அறிந்ததுபோல, உத்தம்சிங்கைப் பற்றி பெருமளவில் அறியவில்லை. இந்த நிகழ்வினால் ஆவேசமடைந்த அவர், இருபத்தியொரு வருடங்கள் கழித்து – 1941 ல் – இந்த நிகழ்வின் மூலகர்த்தாவான ஜெனரல் மைக்கேல் ஓ டயரை சுட்டுக் கொன்றார் என்பது வரலாறு. இந்த நிகழ்வுக்கு (Shooting in Caxton Hall) என்ற பெயரும் உண்டு. இந்தச் செயலை கடுமையாக எதிர்த்தார் காந்தி. an act of Insanity என்றார். பிரிட்டிஷ் அரசு, உத்தம்சிங்கைத் தூக்கிலிட்டது. ஆக மேற்கோள்கள் என்பவை மிகமுக்கியமான அரசிலை முன்வைப்பவை என்பதை ஆய்வாளர் ஒரு விமர்சனமாக வைக்காமல் மேலாட்டமாகவாவது சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால், மிக எளிதாக அந்தப்பகுதியை ஒரே எட்டில் கடந்து போனார். (இந்த வரலாற்றை, சஹீத் உத்தம்சிங் என்னும் இந்தித் திரைப்படம் சிற்சில புனைவு அம்சங்களோடு முன்வைத்திருக்கிறது.)

காந்தி சிலைகளின் பல்வேறுவிதமான தோற்றங்கள் கொண்ட படங்களை காட்சிரூபத்தில் முன்வைத்து, நிற்கும் காந்தி, நடக்கும் காந்தி, உட்கார்ந்திருக்கும் காந்தி, படித்துக் கொண்டிருக்கும் காந்தி என்று அவைகளின் போக்கைப் பேசினார். அதில் பல உருவங்களினிடையே தனித்து நிற்கும் காந்தியின் மேல்நோக்கிய பார்வை, progroவாக (முற்போக்கான) ஒளிர்கிறது என்றார். பின்னால் வரக்கூடியதை முன்னாலேயே அனுமானிக்கும் திறன் கொண்டவராக (foresight) அந்தப் படிமத்தை உணர்ச்சி பூர்வமாக விளக்கினார். அந்த விளக்கத்தினூடே குனிந்த பார்வை கொண்ட காந்தியின் சிலை காட்சிகள் வரும்பொழுது, அதற்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டை அவரால் விளக்கமுடியாமல் போனது.

அதேபோல, பல்வேறு காந்திகளைத் தரம் பிரித்தார். மார்க்சீயவாதிகளின் காந்தி, பெண்ணியவாதிகளின் காந்தி, தேசியவாதிகளின் காந்தி, முற்போக்குவாதிகளின் காந்தி, தலித்தியவாதிகளின் காந்தி.. என்றெல்லாம் பல்வேறு குறியீடுகளைக் கோடி காட்டிப் பேசினார். ஆனால், இவர்கள் எவ்வாறெல்லாம் காந்தி என்கிற பிம்பத்தைக் காட்சிப்படுத்தினார்கள் என்று விளக்காமல் வெறும் சொற்களை மட்டுமே உதிர்த்துவிட்டு மேலே நகர்ந்தார்.

இதன் தொடர்ச்சியாகத்தான் பார்வையாளர் கேள்வி நேரத்தில், பாரதிதாசன் என்னும் பார்வையாளர், ‘தலித்துகள், காந்தி என்கிற பிம்பத்தை எவ்வாறு காட்சிப்படுத்தினார்கள்?’ என்ற கேள்வியை முன்வைத்து, ‘பபிலியோ புத்தா’ என்னும் மலையாளத் திரைப்படத்தில் விளிம்புநிலைமக்கள் காந்திக்கு செருப்புமாலை போடுவது போன்ற காட்சிகள் வருகின்றன. இந்தக் காட்சிப்படுத்தல்களை எந்தவகையில் சேர்க்கலாம்?’ என்று கேட்டார்.

தலித்தியம் ஒரு முக்கியமான பார்வை என்றும், அம்பேத்கர் கோட்டு போட்டதற்கும் காந்தி வேட்டி கட்டியதற்கும் இடையில் உள்ள பார்வைகளை தனது நண்பர்கள் ‘கபாலி’ படத்தில் வந்திருக்கும் வசனத்தை முன்வைத்து தன்னிடம் விவாதித்ததாகவும் பேசிவிட்டு, தனது உரை வேறு ஒரு பார்வையில் தயாரிக்கப்பட்டது என்றும், அடுத்தமுறை ஒரு காத்திரமான பார்வையுடன் அந்தக் கருத்தியலை முன்வைக்கிறேன் என்றும் முடித்துக் கொண்டார்.

தமிழ்மொழி அறியாதவரான அவர், ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வருகின்ற வசனத்தை ஞாபகம் வைத்து பதில் சொல்லுமளவிற்கு ஞானம் மிகுந்தவராக இருக்கும்போது, அம்பேத்கர் என்னும் வரலாற்று ஆளுமை குறித்தோ, தலித்துகள் காந்தியைக் காட்சிப்படுத்திய விபரத்தையோ விரிவாக முன்வைக்கவில்லை.

புபேன்கக்கரின் நவீன ஓவியங்களை முன்வைத்துப் பேசும் ஆய்வாளர், அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட 1990 களுக்கு முன்பு, எவ்வாறு தலித்தியவாதிகள் காந்தியைக் காட்சிப்படுத்தினார்கள்? அதன்பின்பு அந்தக் காட்சிகளின் நிறம் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை அந்தக்காலகட்டங்களில் வெளியான பல்வேறு நவீன ஓவியங்கள் மூலமாகவும் கருத்துப்படங்கள் மூலமாகவும் முன்வைத்திருக்கலாம்.

இந்த நிகழ்வில் முன்வைத்த புகைப்படங்களில் ஒன்றில் கூட அம்பேத்கரின் புகைப்படம் இல்லை என்பது அதிர்ச்சிகரமான விடுபடலாக மாறியிருக்கிறது. தேசத்தந்தை காந்தி பற்றிய ஒரு அரசியல் பார்வையை முன்வைக்கும்போது, அவரது சமகால அரசியல் தளத்தில் விளிம்புநிலைமக்களுக்கான குரலை பிரதிநிதித்துவப்படுத்திய மிகமிக முக்கியமான ஆளுமை அம்பேத்கர். காந்தியைப்பற்றிய முழுமையான அரசியல் கண்ணோட்டம் அம்பேத்கர் இல்லாமல் முழுமையடையாது என்பது காந்திய வரலாறு சார்ந்த தீர்க்கமான பார்வை. காட்சிப்படுத்தப்படும் காந்தியின் அரசியல் என்ற இந்த நிகழ்வில், இந்த காட்சிப்படுத்தப்படாத விடுபடல் என்பது திட்டமிட்ட விடுபடல் என்பது போன்ற பார்வைகளை முன்வைக்கிறது. கூடவே தமிழகத்தில் நிகழ்த்தும் இந்த உரையில் திராவிடத்தின் மிகமிக முக்கியமான ஆளுமை பெரியாரின் பிம்பம் விடுபட்டிருப்பது இந்தக்கருத்தை மேலும் வலுவாக்குகிறது.

இவர்கள் குறித்த காட்சிப்படுத்தல்கள் இல்லை என்று நான் சொல்லவருவது, பொதுப்புத்தி சார்ந்த பார்வையில் அல்ல. தனது தலைப்பிற்கேற்ப ஒரு ஆய்வு வசதிக்காக குறிப்பிட்ட புகைப்படங்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதாக ஆய்வாளர் சொல்லலாம். ஆனால், வரலாற்றின் பக்கங்களில் காந்திஜியின் பல பரிமாணங்களிலும் பங்கெடுத்துக் கொண்ட ஆளுமைகளை ஒரு வசதிக்காக மறைப்பதென்பது வரலாற்றைத் திரிப்பதாகும்.

இதுபோன்ற மேலோட்டமான பார்வைகளால் காந்தியின் அரசியல் பிம்பத்தை என்னவாகக் கட்டமைக்க நினைக்கிறார் இந்த ஆய்வாளர்?

கௌதம சித்தார்த்தன்எழுத்தாளர்; ஊடகவியலாளர்அண்மையில் வெளியான இவருடைய நூல்கள்: முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல், சங்க கால சாதி அரசியல், பச்சைப் பறவை. மூன்று நூல்களும் எதிர் வெளியீடுகள்.