மதுரை மாவட்டம், உலைப்பட்டி ஒடுக்கப்படட சமூக குழந்தைகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வழக்கை (POCSO)திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர்கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்திலுள்ள உலைப்பட்டி கிராமத்து ஒடுக்கப்பட்ட சமூகத்து சிறுவர்கள் த.முருகதாஸ்,கு.வல்லரசு, அ.ஜெயப்பிரகாஷ் ஆகிய 5ம் வகுப்பு மாணவர்கள் மீதும், ரா.சங்கீதா என்கிற 5-ம் வகுப்பு மாணவியின் மீதும், பி.சுந்தரபாண்டி என்கிற 4ம் வகுப்பு மாணவன் மீதும் உசிலம்பட்டி காவல்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன்மற்றும் ஏழுமலை ஆய்வாளர் செல்வம் ஆகியோர் சட்டவிரோதமாக பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்து குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளோடு ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தை காரணமாக்கி மேற்படி 5 சிறார்கள் மீதும் குற்ற எண் 81/16-ன் 341, 324, 294 (பி), 506(11), ஐ.பி.சி. மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு சட்டம் (POCSO) பிரிவுகள் 9(1)(M), 10, 11(1), 12 ஆகிய 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் தாக்குதலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள உசிலம்பட்டி டி.எஸ்.பி.யின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஐ.நா.வின் குழந்தைகள் உரிமை பிரகடனமும், இளம் சிறார்கள் திருத்த நீதிச் சட்டமும் குழந்தைகளின் வயது வரம்பு 18என்கிறது, தகவல் உரிமைச்சட்டம் கூட இந்த வயது வரம்பை 14 என்கிறது. ஆனால் இக்குழந்தைகளின் வயதோ 9 தான்.

எனவே, இந்த பொய் வழக்கு ஒடுக்கப்பட்ட சமூக குழந்தைகள் மீதான காவல்துறையின் திட்டமிட்ட தாக்குதலே என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றம் சாட்டுகிறது. மேலும் தமிழக அரசு தலையிட்டு இவ்வழக்கை திரும்பப் பெறுவதுடன்,சட்ட விரோதமாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறைஅதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.”