ப்ரேமா ரேவதி 

வெடவெடத்த தேகமும் வயதான காலத்திலும் ஒரு நிமிர்வும் ஒளிரும் விழிகளுமாய் அவரை அவரது வீட்டில் பார்த்தது நினைவில் ஆடுகிறது. சென்னையில் இருந்தாலும் மனம் நாகையில் அலைகிறது. ஒரு வரலாற்று திருப்புமுனையின் சாட்சியங்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டு சென்றுகொண்டிருக்கின்றனர்.

கீழ்வெண்மணியின் நாயகர்களுள் ஒருவர் தோழர் ஏ.ஜி.கே. அவருடைய போராட்ட சகாவான மீ.கல்யாணசுந்தரமும் சென்ற சில ஆண்டுகளில் சென்றுவிட்டார்.

தோழர் மைதிலி சிவராமனோடு அவர்கள் இருவரையும் சந்தித்ததும் உரையாடியதும் பின் வெண்மணிக்கு சென்றதும் மறக்கமுடியாத அனுபவம்.

ஏ.ஜி.கேயின் புத்தகம் ஒரு வரலாற்றுப் பெட்டகம். ஆனால் அவரை ஆய்வு ரீதியாக விரிவான பேட்டி ஒன்றை எடுக்காமல் போன குற்றவுணர்ச்சி என்னை தின்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள் யாரேனும் அவரைப் பற்றி முழுமையான தரவுகளையும் அனுபவங்களையும் பதிவு செய்திருக்கின்றனரா தெரியவில்லை.

வெண்மணியை கோஷமாகவும் உணர்ச்சிகர போராட்ட நினைவாகவும் பார்க்கும் அதே நேரத்தில் அதன் எல்லா விவரங்களையும் தொகுத்து கல்விப்புலத்திலும் அரசியல் புலத்திலும் வைக்கும் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. ஏராளமான நூல்கள் அரசியல் செயல்பாட்டாளர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. செந்நெல், கீழைத்தீ எனும் முக்கியமான இரு நாவல்களும் வெளிவந்திருக்கின்றன. எனினும் இன்னமும் எழுதப்பட வெண்மணியின் வரலாற்றில் நிறைய இருக்கிறது என ஏ.ஜி.கேயின் நினைவுக் குறிப்புகள் நூலைப் படித்தபோது தெரிந்தது.

அருவமான செந்துகில் ஒன்று கைவிரல்களில் இருந்து நழுவிவிட்டது போல உணர்கிறேன். ஒரு போராளியின் மிடுக்கோடுதான் அவர் வாழ்ந்தார், அந்த மிடுக்கோடுதான் அவர் சென்றிருப்பார்! செவ்வணக்கம் செவ்வணக்கம் செவ்வணக்கம் தோழரே!

ப்ரேமா ரேவதி, செயற்பாட்டாளர்; எழுத்தாளர்.