அன்புசெல்வம்

அன்பு செல்வம்
அன்பு செல்வம்

இந்தியாவில் இது வரை எந்த பிரதமரும் சொல்லாத ஒன்றை இந்தியப் பிரதமர் மோடி தலித்துகளுக்காகத் துணிந்து சொல்லியிருக்கின்றார். “தலித்துகளைக் கொல்லாதீர்கள், என்னைச் சுடுங்கள் என்று”. அவரது அரசியல் துணிவுக்கு என் பாராட்டுக்கள். அவரது கூற்று உள்ளூர உண்மையென்றால் எதிர் காலத்தில் அவர் முழு நேர தலித் ஆதரவாளராக மாறவேண்டும், அதற்கான களப்பணிகளை செயலில் காட்ட வேண்டும், குஜராத்தில் மெவானிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

 • தெலுங்கானாவில் பேசிய பிரதமரின் இப்பேச்சில் தேர்தல் அரசியல் இருக்கலாம் அல்லது குஜராத்தில் எழுந்து வரும் தலித் எழுச்சியை முடக்க‌ முயற்சிக்கலாம் அல்லது நான் சொல்வதை சொல்கிறேன், நீங்கள் செய்வதை செய்யுங்கள் என்பதாகவும் இருக்கலாம்.

 • தலித்துகளுக்கு எதிரான பாஜக -வின் அரசியலில் மாறுபட்ட விமர்சனங்கள் உண்டு. தேவைப்படும் நேரத்தில் அதற்கான‌ எதிர்வினையை தலித்துகள் ஆற்றி வருகிறார்கள். வெறுப்பு அரசியலை மட்டுமே தலித்துகள் ஒருபோதும் செய்து கொண்டிருக்க விரும்புவதில்லை.

 • மோடியின் பேச்சுக்கு எதிராக தலித் அல்லாதவர்கள், தலித்துகளுக்கு எதிரானவர்கள், சிறுபாண்மையினர், திராவிடக் கட்சிகள், இடது சாரி தலைவர்கள் ஆற்றிய கொள்ளளவு எதிர்வினையை வழமையான‌ பாஜக – இந்து எதிர்ப்பு அரசியலாக மட்டும் பார்த்து விட முடியாது.

 • வடக்கே தலித் எழுச்சி உருவாகி வரும் இந்த நேரத்தில் பெரும்பாண்மை சாதியவாதிகளின் பிரஜையான இந்த நாட்டின் பிரதமர் பதற்றத்தை உருவாக்கும் தலித் ஆதரவு முழக்கத்தை பொசுக்கென‌ பொது வெளியில் சொல்லி விட்டாரே என்பது தான். ஏனெனில் தற்போது வடக்கே உருவாகி வரும் தலித் எழுச்சி தமிழகத்திலும் பரவினால் அது நாளை பெரும்பாண்மை பிரஜைகளான நமக்குப் பிரச்சனையாகக் கூடும் என்பது தான் மோடிக்கு எதிரான பலரது எதிர்வினை.

 • தமிழ்நாட்டில் எத்தனையோ தலித்துகள் கொல்லப்படுகிறார்கள், தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், தலித் குழந்தைகள் மீது அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன, சாதிய ஆணவக் கொலைகள் நடக்கின்றன, அம்பேத்கர் சிலைகள் அவமதிக்கப்படுகின்றன. இது போன்ற‌ சாதிய சதித்திட்டத்தின் அமைதியில் ஒரு சிறு சலனம் கூட ஏற்பட்டதில்லை.ஏற்படுத்தவும் முடியவில்லை.

 • ஒரு மருந்துக்குக் கூட தலித்துகளைக் கொல்லாதீர்கள் – என்னைக் கொல்லுங்கள், அம்பேத்கர் சிலைகளை அவமதிக்காதீர்கள் – எங்கள் தலைவரின் சிலைகளை அவமதியுங்கள், தலித் குடிசைகளைக் கொளுத்தாதீர்கள் – எங்கள் வீடுகளை இடியுங்கள் என்று மோடியை விமர்சிக்கும் என்னால் சொல்ல முடிவதில்லை? சுய சாதியை மறுத்துச் சொல்ல முடியாது என்பதும் தெரியும்.

 • அதாவது, குடிதாங்கியில் தலித் பிணத்தை நான் தான் தூக்குவேன் என அடம்பிடித்து இன்றைக்கு தலித் வீட்டு எழவில் அரசியல் செய்வதை வாடிக்கையாக‌க் கொண்டிருக்கும்போது – தலித்துகளுக்கு என் இதயத்தில் இடம் இருக்கும்போது . . .

 • நம் தலைவர்களான அம்பேத்கர் சொல்லியிருப்பார், பெரியார் சொல்லியிருப்பார், காரல் மார்க்ஸ் சொல்லியிருப்பார், ஏன் ஒரு காந்தி கூட சொல்லியிருப்பார், என சொல்வதற்கு வரலாற்றில் இடம் இருக்கிறது. ஆனால் போயும் போயும் ஒரு மோடி சொல்லி விட்டாரே ! அதுவும் பிரதமர் சொல்லிவிட்டாரே ! என்பது தான் இங்கு பிரச்சனை.

 • யார் யாரோ தலித்துகளுக்காக தலைவர்களாகும்போது ஒரு பிரதமர் மனம் மாறுவதில் என்ன பெரிய அரசியல் இருந்து விடப்போகிறது. பிரதமரின் இந்த கூற்று எதிர்காலத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்பாகலாம், பரிவாரங்களே கூட எதிர்க்கலாம். பின்னாளில் இதற்காக காந்தியைப்போல கொல்லப்பட‌லாம்.

 • விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த தலைவர்களை விட மீண்டும் இது போன்ற ஒரு அடிப்படைவாதி தான் இங்கு வரவேற்கப்படுகிறார். “நான் தலித்துகளுடன் அமர்ந்து சாப்பிட விரும்புகிறேன்” என சாகும் தருவாயில் ஆசைப்பட்ட ஒரு காந்தியைப் போல மாற்றத்துக்கான அரசியல் குறியீடாக நாளை வணங்கப்படுவார்.

 • மித‌வாதியாகிய, புரட்சிவாதியாகிய, முற்போக்குவாதியாகிய, பகுத்தறிவுவாதியாகிய நான் தலித்துகளின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொண்டே எத்தனை முறை வேண்டுமானாலும் சுய சாதியை விட்டுக் கொடுக்காமல் தலித்துகளைக் கொல்ல முடியும். அதற்கான பொதுவெளி இங்கிருக்கிறது. ஆனால் ஒருபோதும் “தலித்துகளைக் கொல்லாதீர்கள் ! என்னைச் சுடுங்கள் ! என வாய் தவறியும் சொல்ல மாட்டேன். நீங்கள் . . . !

கட்டுரையாளர் அன்புசெல்வம், எழுத்தாளர்; ஆய்வாளர்.

தொடர்புக்கு : anbuselvam6@gmail.com