சு. இரவிக்குமார்

காலை 10.30 மணிக்கு மினிப்பிரியாவில் ஜோக்கர் முதல் நாள் முதல்காட்சி பார்த்தாச்சு! Mockery Cinemaவுக்கு முயன்றிருக்கிறார்கள். ராமசாமியின் நாடகம் போன்ற நாடகத்துக்குள் கொஞ்சம் சினிமா தூவியிருக்கிறார்கள். சாமானியனின் குரல், அரசியல், சமூக அவலம் என்று படம் முழுக்க மனப்பிறழ்வாளனின் முற்போக்குக் குரலை எழுப்ப முயல்கிறது. எழுத்தாளர்கக், நாடகக்காரர்கள் என்று பலரும் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். சுய வாழ்வில் காயம் பட்டவனே சமூக உணர்வோடு வெளியில் வருவான் என்பதும், இந்த அரசமைப்பை வெறும் கோமாளித்தனமாக சாகசங்களால் அதன் நுனியைக்கூட ஆட்டமுடியாதெனவும், தொடர் தோழமைப் போராட்டங்கள் தொடர அழைப்பு விடுக்கிறது. முற்போக்கின் படிமங்களை, சொல்லாடல்களை, துயர் நிறைந்த மனித வாழ்வின் பகடியோடு முன்வைக்கிறது. ஷான் ரோல்டனின் இசையும், செழியனின் ஒளிப்பதியும் படத்துக்குக் கூடுதல் பலம். யுகபாரதியின் பாடல்கள் பதிய தரம்.

புதிய வகைப்பட்ட கதை சொல்லல் போலத் தோற்றமளிக்க மெனக்கெடுகின்றனர். ஆனால் வழக்கமான பின்னோக்கு உத்தியைத் தாண்டிப் படம் எவ்வகையிலும் உருவங் கொள்ளவில்லை… சமகாலப் போராட்ட முறைகள், சகாயம், எவிடென்ஸ் கதிர், ஹென்றி டிபேன் போன்ற போராட்டக் களமாடிகள் பலரையும் படம் வார்த்தைகளில் தூவிச் செல்கிறது. பவா செல்லத்துரை, மு.ராமசுவாமி, பார்த்திப ராஜா, ச.பாலமுருகன் என்று பல கலை இலக்கிய உலகப் பிரமுகங்கள் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர். மு.ராமசுவாமிக்கு இது சொல்லிக் கொள்கிறார்ப்போல படம். ஆனால் பல இடங்களில் அவரது நாடகங்களின் சாயலில் வசன வெளிப்பாடுகள் அமைந்துள்ளது தற்செயலா அல்லது ராமசாமிக்காக ராஜுமுருகன் தேர்ந்தெடுத்த பாணியா தெரியவில்லை. பவாவுக்கு வசன உச்சரிப்பு சரியாகக் கைகூடவில்லை. படத்தின் மையப்பாத்திரமான மன்னர் மன்னனாக நடித்துள்ள சோமசுந்தரம் ஜனாதிபதி வேடத்தில் கச்சிதம், ஆனால் பின்னோக்குக் காட்சிகளில் முகத்தில் இளமைக்குப் பதில் முதிர்ச்சி தெரிகிறது. பெண் பாத்திரங்களாக வருகின்ற காயத்ரி, ரம்யா இருவரும் சிறப்பு.

வழக்கமான வில்லன்கள் இல்லை, அரசு மற்றும் முதலாளிகளின் இயல்பான வன்முறைகளே படத்தின் எதிர்நிலைகளாகின்றன. வாழும் இந்த அமைப்பைப் பற்றிய பல கேள்விகளை வசனங்களாகவேணும் படம் அழுத்தமாக முன்வைக்க முயல்கிறது.

ஆனால் படத்தில் போராட்டக்காரர்களாக வரும் மூவருமே சொந்த வாழ்வின் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருப்பது அத்தனை சரியானதாக இல்லை. மேலும் இவர்களின் போராட்டங்களை நியாயப் படுத்துவதற்காக, அத்தனை மனிதர்களையும் சிறுகோடுகளாக்கி இருப்பது மேம்போக்கான அரசியலை முன்வைப்பதாயுள்ளது.

சமூகம் முழுக்க ஊழல்களாலும், அராஜக வன்முறைகளாலும் எளிய மனிதர்கள் தாக்குண்டு கொண்டே இருக்கிறார்கள். அதனை எதிர்த்து அணி திரளாமல் தனித் திரலளாக இவர்கள் மூவரும் நிற்கின்றனர். பேஸ்புக், டிவிட்டர் என்று நவீன செயல்பாடுகளின் காலத்தையும் கலந்து கட்டி
அடிக்கிறது படம்.

போராடும் அரசியல் இயக்கங்கள் மருந்தாகக் கூட வாடையடிக்கவில்லை.

என்றாலும் படம் அரசியல் வேண்டும் என்கிற அரசியலைப் பேச முயல்கிறது. அரசியலில் பங்கேற்க அத்தனை பேரையும் அழைக்கிறது. கழிப்பறை கூடக் கட்டமுடியாத வாழ்வின் சூழல், கழிப்பறை கட்டுவதிலும் கொள்ளையடிக்கும் அரசியல் சமூகத்தின் மீது கோபத்தையும் எள்ளலையும் ஒருசேர வீசுகிறது, கழிப்பறை என்கிற கலாச்சாரம் படத்தின் மைய விவாதமாகின்றது.

சு. இரவிக்குமார், எழுத்தாளர்.