மதிபோல் என்ற நான்கு குழந்தைகளின் தந்தை, நேற்று இரவுப்பணி முடித்துவிட்டு, அதிகாலை 5.40 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த டெம்போ வாகனம் மதிபோல் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடியபடி சாலையில் கிடந்தார். அந்த நபர் மீது மோதிய டெம்போ வாகனத்தை ஓட்டி வந்தவரும், வாகனத்தை நிறுத்தி விட்டு வந்து பார்த்து விட்டு எந்த உதவியும் செய்யாமல் சென்று விட்டார். சுமார் 30 நிமிடம் சாலையில் உயிருக்கு போராடிய அவரை, 140 கார்கள், 82 மூன்று சக்கர வாகனங்கள், 181 இரு சக்கர வாகனங்கள் கடந்து சென்றன. 45 பாதசாரிகளும் அவரை கடந்து சென்றனர். ஆனால் ஒருவர் கூட உதவி செய்ய முன்வரவில்லை.

ரிக்ஷாவில் வந்த ஒருவரும் அவரைப் பார்த்து விட்டு, தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அருகில் வந்தார். அவர் உதவுவார் என மதிபோல் எதிர்பார்த்தார். ஆனால், ரிக்ஷாவில் வந்த நபர், மதிபோலின் மொபைல் போனை திருடி சென்றுள்ளார்.

கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கின்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு அதில், அந்த நபரை இடித்துத் தள்ளிய சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் படுகாயமடைந்தவர் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமலும், கண்டும்காணாமல் செல்வதும் தெரியவந்துள்ளது. மேலும், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அந்த வழியாகச் சென்றவர்கள் கவனிக்காதது போல செல்வதும், அதிலும் ஒருவர் காயமடைந்தவரிடம் இருந்து செல்போனைத் திருடிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் போலீசார், தப்பியோடிய சரக்கு வாகன ஓட்டுனரைத் தேடிவருகின்றனர்.