டெல்லி, திருச்சி ஆகிய வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் செய்திகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

டெல்லி வானொலி நிலையத்திலிருந்து  நாள்தோறும் காலை 7.15 மணி, பிற்பகல் 12.40 மணி, இரவு 7.15 மணி என மூன்று முறை 10 நிமிட தமிழ் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. திருச்சி வானொலி நிலையத்திலிருந்து நாள்தோறும் பிற்பகல் 1.45 மணிக்கு 10 நிமிட தமிழ் செய்தி அறிக்கையும், பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை  செய்திச் சுருக்கமும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் நிறுத்த செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் ஆணையிட்டுள்ளது. இந்த வானொலி நிலையங்களின் செய்திப் பிரிவுகளில் பணியாற்றி வந்த செய்தித்துறை அதிகாரிகள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் மட்டுமல்ல, டெல்லி வானொலி நிலைய தலைமை அலுவலகத்திலிருந்து ஒலிபரப்பப்பட்டு வந்த பிற மொழி செய்தி அறிக்கைகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுகின்றன. டெல்லியிலிருந்து தமிழ், மலையாளம், ஒடியா, காஷ்மீரி உட்பட 14 பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலம், இந்தியிலும் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வந்த நிலையில், ஆங்கிலம், இந்தி, காஷ்மீரி ஆகிய 3 மொழிகள் தவிர மீதமுள்ள 13 மண்டல மொழிகளில் ஒலிபரப்பப்பட்டு வந்த செய்திகள் நிறுத்தப்படவுள்ளன.
தொடர்ந்து ‘நட்டத்தி’ல் இயங்குவதால், பொருளாதார இழப்பை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முகப்புப் படம்: திருச்சி வானொலி நிலையத்தில் எடுக்கப்பட்டது.