தமிழ் சினிமா பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அகால மரணமடைந்தார். மஞ்சள் காமாலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

‘தங்க மீன்கள்’ படத்தில், ‘‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’’ பாடலுக்காக தேசிய விருது வென்ற பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், ‘சைவம்’ படத்தில், ‘‘அழகே அழகு எதுவும் அழகு…அன்பின் விஷயம் எல்லாம் அழகு’’ என்ற பாடலை எழுதியதற்காக, 2-வது முறையாக தேசிய விருது பெற்றார். கடந்த ஆறு ஆண்டுகளாக முன்னணியில் இருந்த சினிமா பாடலாசிரியர் நா. முத்துகுமார். அவருக்கு வயது 41.

சமூக ஊடகங்களில் நா. முத்துக்குமாருக்கு எழுதப்பட்ட அஞ்சலிகள்…

Vijayasankar Ramachandran

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே….

கவிஞர் நா முத்துக்குமாருக்கு அஞ்சலி

Prasanna Ramaswamy feeling sad.

நா முத்துக்குமார்
அகாலமரணம்
அதிர்ச்சியான செய்தி…

அவரது முதல் பிரசுரமான கவிதைகளிலிருந்தே அவரை அறிவேன்.
அன்பும் பிரியமும் உள்ளவர்.
ஒரு நாடகத்தில் அவரது கவிதையைப் பயன்படுத்தியிருந்தேன்.

2010ல் அவரது மிகுந்த நேர நெருக்கடிக்கிடையில் என்னுடைய
வானம் வசப்படும்
நாடகத்துக்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தார்.
அதற்காக சந்தித்ததுதான் கடைசி.

அவரது அலுவலகத்தில், இரவில் சந்தித்தோம். நான் கிளம்பிய பின்னும் வேலை இருந்தது அவருக்கு.

வீடு வாசல் வாங்கியிருக்கிறாரா என்று கேட்டேன்…வாங்கப் போவதாகச் சொன்னார்.
தன் அப்பாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்..
தன் புத்தக அலமாரியைக் காட்டினார்…
தான் அப்போது படித்துக்கொண்டிருந்த புத்தகங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தார்…

‘இந்தப் பையன் மாறவேயில்லை..’
என்று திரும்பி வரும் வழியில்
நினைத்துக் கொண்டிருந்தேன்…

தன் குழந்தை படத்தை போனில் காட்டினார்…

அநியாயமான, ஒப்புக்கொள்ள முடியாத ஒரு மரணம் இது, my dear young man.
What words can be said to your family which you loved so dearly…

Aadhavan Dheetchanya

“அண்ணே, அப்படியே கிளம்பி வீட்டுக்கு வந்துட்டுப் போயிருங்கண்ணே… ”
” அடுத்தவாட்டி வர்றப்ப கண்டிப்பா வீட்டுக்கு வர்றேன் முத்து…” என்று சொன்னது நினைவில் இருக்கிறது.
ஆனால் இனி போனால் பார்ப்பதற்கு முத்துகுமார் இல்லாத வீடாகிவிட்டதே.

Abdul Hameed Sheik Mohamed

குமரனின் மரணம் வந்த ஞாயிறு போலவே மற்றொரு நாசகார ஞயிற்றுக்கிழமை..

நணபன் , கவிஞன், பாடலாசிரியன் நா.முத்துக்குமார்சற்று முன் இறந்துவிட்டான். இதை எழுதும்போது கைகள் நடுங்குகின்றன.

பாவிங்களா.இப்படி ஒவ்வொருத்த்னா விட்டுட்டு போனா நான் என்னடா பண்றது?

Kiruba Munusamy

“மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும்” – கவிஞர் நா. முத்துக்குமார்.

இப்படியான உம் தனித்துவமிக்க வரிகளுக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்க உமக்கென்ன அவசரம் கவியே?

நாற்பதுகளில் மரணிக்க வேண்டும் என்ற விதியேதும் இல்லை கவிகளே!

Govi Lenin

துயரத்தின் பாடலை இந்த வயதிலேயா வாசிக்க வேண்டும் அந்த ஆனந்த யாழ்!

கவிஞர்-பாடலாசிரியர்-நண்பர் நா.முத்துக்குமார்உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

Ashroff Shihabdeen

கவிஞர் நா. முத்துக்குமார் மாரடைப்பால் காலமான செய்தி வந்திருக்கிறது.
சினிமாப் பாடலாசிரியராக வருமுன்பே ஒரு நல்ல கவிஞராக அடையாளம் காணப்பட்டவர் முத்துக்குமார். “முத்துக்குமார் என்ற நல்ல கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் இளம் கவிஞரைக் கண்டேன். சினிமா அவரை மூழ்கடிக்காமல் இருக்க வேண்டும்” என்று எழுத்தாளர் சுஜாதா தெரிவித்திருந்தது ஞாபகம். சுஜாதாவும் பின்னர் சினிமாவுக்குள் வந்தது வேறு கதை!
ஒரு நல்ல கவிஞனை மரணம் தின்று விட்டது.
ஆழ்ந்த அஞ்சலிகள்!

Chozhan

ஜீரணிக்கவே முடியாத நாளாகி விட்டது இந்த ஞாயிறு. டும் டும் ன் பாடல்களை கேட்டதிலிருந்து நான் மிக தீவிரமாய் நேசித்த மனிதன். இந்த பதினைந்து வருட சாலிகிராம வாழ்க்கையில் வெவ்வேறு கோலங்களில் இருவரும் பார்த்து பார்த்து கடந்திருக்கிறோம். காஞ்சிபுரம் படத்தின் ப்ரிவியூ வில் ந. முத்துசாமியைக் கண்டதும் பரவசத்தோடு கைகுலுக்கின முகத்தின் குழந்தைமை இப்போது கண்களில் அலைந்து கண்ணீராய் ஒழுகுகிறது.

வாழ்வின் எல்லா அபத்தங்களைப் போலவே இதையும் கடந்துபோக மனம் மறுக்கிறது.

Thiru Yo

காதலை, பிரியத்தை, நேசத்தை, பாசத்தை, ஏக்கத்தை, பிரிதலை பாக்களாக்கிய நா.முத்துக்குமார் பிரிவு. துயரம். 😞

நந்தன் ஸ்ரீதரன்

தொப்புள் கொடியப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்

வெயிலைத்தரவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்..

– தென்மாவட்டக் காரர்களின் உள்ளத்தை துல்லியமாக சொற்களில் கொண்டு வந்த வடமாவட்டத்து கவிஞன்.. பிரியன்.. முத்துகுமார்..

நீ விட்டுச் சொன்ற கவிதைகள் இருக்கின்றன நண்பா.. கடைசியாக இப்படியான வாதையையும் எங்களுக்கு விட்டுச் சென்றாயே.

Chandra Thangaraj

நான் மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருப்பவர்கள் சிறிய வயதில் மரணத்தை அடைவது மிக வேதனையாக இருக்கிறது. பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மரணம் மிகுந்த மன உளைச்சலையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது.நான் மிகச் சிலரையே அண்ணன் என்று அழைப்பேன்.என்அன்புக்குரியவர் அண்ணன் நா.முத்துக்குமார். நான் படம் இயக்க வேண்டும் என்பதில் மிக விருப்பமாக இருந்தவர்.என் எல்லா புத்தக வெளியீட்டிலும் உடன் இருப்பார்.என் எழுத்துகளை சிலாகிப்பார்.என்னுடைய கள்ளன் திரைப்படத்தில் பாடல்களை எழுதியுள்ளார்.பாடல்கள் பதிவானதும் மிக மகிழ்வோடு கேட்டு, நிச்சயம் வெற்றியடையுமா என்று மகிழ்வோடு சொன்னார்.அவர் இல்லாத இன்று கறுப்பு நாள்…உங்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு அண்ணா 😦

Suguna Diwakar

கவிஞர் நா.முத்துக்குமாரின் மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்த் திரைப்படப் பாடல்களில் நவீனத்துவத்தின் தடங்களைப் பதித்தவர். மனதை விட்டு அகலாத எண்ணற்ற பாடல்களை எழுதியவரின் இளவயது மரணம் பற்றி என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. ‘7ஜி ரெயின்போ காலனி’யில் அவர் எழுதிய ‘அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்’ என்ற வரிகள் மனதின் ஓரத்தில் ஒலிக்கின்றன. நண்பர் நா.ரமேஷ்குமாருக்கும் முத்துக்குமார் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்….

ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர் feeling sad.

நம்ப முடியவில்லை தோழா..! உன் வாசலில் எத்தனையோ பேர் வாசலில் நிற்க, என் அவசரம் புரிந்து என்னுடன் ஒத்துழைத்து எனக்கு பாடல்கள் எழுதி தந்தாய்! மிகப்பெரிய கவிஞன் நீ.. ஆனால் எனக்கு திருப்தியில்லை என்று சொன்னாலும் முகம் சுளிக்காமல்,உடனே எழுதிய காகிதத்தை கிழித்துப்போட்டு,மீண்டும் புதிய வார்த்தையில் பயணிப்பாய். இரவு பதினோருமணிக்கு துவங்கி இரண்டு மணிவரை பாடல் எழுதுவோம். அதன் பிறகு நான் வீட்டிற்கு சென்று விடுவேன். நீ ஜிவி பிரகாஷ் இசைக்கோர்த்து முடியும்வரை முடித்து பின் தூங்கச் செல்வாய். என் திரைப்படம் நன்றாக வரவேண்டுமென நீ எத்தனை புத்தகங்கள் படித்து எனக்கு குறிப்புகள் தந்தாய். மறக்க முடியவில்லை தோழா. என் அன்பும் நன்றியும் என்றும் உனக்கானது. “இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொரு பெண்ணும் இதை தனக்கான பாடலாக உணரவேண்டும். திரு நங்கைகள் சமூகம் கொண்டாடும் பாடலாக இருக்க வேண்டும் “என்று சொல்லி நீ எனக்கு கொடுத்த பாடலை இன்று உனக்கான பாடலாக சொல்கிறேன் தோழா
” போய் வா மகனே..போய் வா..!
உடலை வெறுத்து சுமக்கும் வலி
உலகில் யாருக்கும் புரியாது..
சிட்டுக்குருவிப் போலே நீ
விட்டு விடுதலையாய் நின்றாய்
சுற்றும் பூமியெல்லாம் சொந்தம்மாக்கப் போகின்றாய்
நீ நீயாகிறாய் மழை நீராகிறாய் “-
உன் மறைவு செய்தி தந்த அதிர்ச்சி நீங்காமலே..அழுகையுடன் வழியனுப்புகிறேன் தோழா..உன் பாடல்களில் என்றும் நீ வாழ்வாய்..

ரவி பிரகாஷ்

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. மிகச் சின்ன வயசு. சில மாதங்களுக்கு முன்பு கூட இதே போல் ஒரு செய்தி கேள்விப்பட்டு, அது வதந்தி என்பதை என் இனிய நண்பர், முத்துக்குமாரின் தம்பி ரமேஷ்குமாரிடம் விசாரித்தறிந்தேன். இந்த முறையும் அப்படி வதந்தியாக இருந்துவிடக் கூடாதா இந்தச் செய்தி என மனம் ஏங்குகிறது. முத்துக்குமாரின் குடும்பத்தாருக்கும் அவரின் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் கொள்கிறேன். 😦