யாழன் ஆதி

யாழன் ஆதி
யாழன் ஆதி

தனிமனித காதல் பிறழ்வுகளை சமூகப் பிரச்சனையாக மாற்றுவதும், சமூகரீதியான கொலைகளை மிக எளிதாகக் கடந்துவிடுவதும் இதுவேதான் இளைஞர்களின் வேலை என்று அவர்களை மிக மோசமாக இழித்தும் பழித்தும் பேசுவதும் அதையே தன் அரசியல் எதிர்காலமாக நினைப்பதும் எப்படி சரியானத் தலைமையாகும்?

தொலைக்காட்சி நேர்காணலில் பார்வையாளருக்கு ஒரு நன்மை இருக்கிறது, கருத்துக்கள் உண்மையானவை என்னும் பட்சத்தில் சொல்பவரின் முகம் அதற்கு சான்றாகிவிடும், தான் கூறுவது பொய்யும் புரட்டும் எனும்போது அது அதைக் காட்டிவிடும். நவீனா கொலைக்குறித்துப் பேசும்போது ஒளிர்ந்த முகம், சங்கர் கொலை என்றால் துவண்டதைக் காண முடிந்தது.

சகலரையும் அவன் இவன் என்று ஒருமையில் விளிப்பது, குற்றம் செய்த ஒருவரை, ஒரு மாபெரும் தலைவர் ‘மிருகம்’ என்று கூறுவது எல்லாம் குறித்து ஐ.நா மன்றம் எதுவும் சொல்லித்தரவில்லை போலும். ஒரு கட்சியின் தலைவர்மீது அபாண்டமாக ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளைச் சொல்வது அதைச் சமூக விரோதத்தை வளர்க்க ஓட்டாக மாற்றுவது என்பதெல்லாம் நாம் எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்றுதான் எண்ண வைக்கிறது.

தொடர்ந்து டிப்டாப் டிரஸ் குறித்து அவர்பேசுவது கோவணம் கட்டிக்கொண்டு குளிக்காமல் ஊரிலிருக்கும் ஒரு திண்ணைமேல் உட்கார்ந்துகொண்டு, பல்விளக்காம எந்த ஜாதிக்காரன் எந்தப் பொண்ணுக்கூட போறான்னு கண்ணுல விளக்கெண்ண ஊத்திப் பாத்துன்னு இருக்கும் ஒரு சமூக இருப்பையே அவர் ஆசைபடுகிறார் என்று தெரிகிறது.

தஞ்சையில் பார்ப்பனர் ஒருவரின் மனைவியை அவர் வீட்டிலிருந்த தலித் இளைஞர் கடத்திக் கொண்டுபோனதை என்னமாய் கூறினார் பாருங்கள். அந்த இளைஞன் ஒரு வன்னியராய் இருந்தால் ஏன் ஒரு பார்ப்பனராய் இருந்தாலுமே இருக்கக் கூடிய சூழ்நிலை அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தனிமனித அபிலாசைகளுக்கு ஜாதி சாயத்தை எப்படி பூசமுடியும் என்றுதான் தெரியவில்லை.

ஆனால் அவரே சொல்கிறார் அந்தப் பெண் இரண்டு குழந்தைகளைவிட்டு விட்டு அவனோடு சென்றுவிட்டார். அந்தப் பெண் அழகானவள் என்றும் கூறுகிறார். பெண்களை எப்படி நடத்தவேண்டும் என்று அய்.நா மன்றம் கூறியிருக்கிறது அதை நடைமுறைப் படுத்தத் தான் போராட்டம் என்னும் நீங்கள் பெண்களில் பாலியல் சுதந்திரத்தை தனக்கானத் துணையைத் தானே தேடிக்கொள்ளும் சுதந்திரத்தைக் குறித்தும் பேசலாமே!

ஆண்களாகப் பிறக்கிற பெண்களாகப் பிறக்கிற எல்லோரும் காதலர்களாக மாறி திருமணம் செய்துகொள்வதில்லை. காதல் திட்டமிட்டும் வருவதில்லை. தமிழர்களின் சுத்தமான எச்சமாக இருக்கிற இரு சமூகங்களும் அதுவும் ஜாதி அடுக்கில் மிக அருகில் தனக்கு மேலே ஆயிரம் ஆண்டைகளை சுமந்து கொண்டிருக்கிற இரு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு ஒருசிலர் புரிகிற காதல் உறுதுணையாக இருக்கட்டுமே. ஒரு வேளை அக்காதல் தானாக முறிந்தால் முறியட்டுமே. ஒரே ஜாதியில் ஏற்பாடு செய்கிற எல்லாத்திருமணமும் மகிழ்வானதாகவா இருக்கின்றன. அறிவியல் பூர்வமாக ஏன் மருத்துவபூர்வமாக காதல் காமம் ஒரு வாழ்வியல் செயல்பாடு.

ஆனால் வாழ்வியல் செயல்பாடுகளை ஜாதிகளின் செயல்பாடுகளாக மாற்றும் தலைமைகள் எப்படி சரியானதாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆரம்பத்தில் அவர்கள் கட்சி நடத்திய காலங்களில் காரல்மார்க்ஸ், லெனின், பெரியார், அம்பேத்கர் படங்களைப் பயன்படுத்தினர். இந்தப் பட்டியலில் நான் அம்பேத்கரை இறுதியில்தான் வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது வீரப்பனை வைத்திருக்கிறார்கள். அம்பேத்கரை அவர் புரிந்துகொண்டவர் போல இருந்தாரா என்று தெரியவில்லை. அம்பேத்கரை வாசிக்கச் சொல்லி வற்புறுத்தும் தைரியத்தை அவர் பெறவேண்டும்.

ஒருதலைமை என்பது அதுவும் இனவரைவியலில் தமிழ்தேசிய இனத்தில் ஓர் மரபினத்தின் தலைமயாக இருக்கிறவர் இப்படிக் கிஞ்சிற்றும் பண்படாமல் இருப்பது மிகுந்த ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. அவர் தலைமயை நம்பியிருக்கிற மக்களின் எதிர்காலம் அச்சத்திற்குள்ளானது என்று மனம் வெதும்புகிறது.

ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தியல் தவறானதாக தமிழ்ச்சமூகத்தில் இவர்களால் மாற்றப்படுகிறது. இந்து ஜாதிப் படிநிலைகளில் இவர்கள் இருந்துகொண்டு அந்தமக்களின் விடுதலையையும் இவர்கள் தடுக்கிறார்கள், என்பதை எப்படி புரியவைப்பது? அதற்குப் பெருந்தடையாக அந்தத் தலைமையே இருக்கிறது.

இடைநிலை ஜாதி என்பது ஆண்டைகளைக் குறிப்பது அல்ல. ஜாதிப் படிநிலையில் உங்களுக்கு மேலே இருக்கிற ஆண்டைகளைப் பாருங்கள் நீங்கள் எவ்வளவு அடிமைகள் என்று புரியும். இதை அழிக்க கல்வியும் சமூகம் சார்ந்த அறிவுப் புரிதலும் தேவை. மேலிருக்கும் ஆண்டைகளை தூக்கி வீச கீழிருக்கும் மக்களின் கூட்டுறவு தேவை. அதை வைத்துக்கொண்டு ஜாதி மேடுகளைத் தகர்த்து சமநிலையை உருவாக்கி ஜனநாயகத்தினைக் கட்டமைக்க வேண்டும். இதுதான் இன்றைய இளைஞர்களுக்கு நாம் சொல்வது. இதில் காதல் ஒரு தடையே இல்லை. அதை வைத்துக்கொண்டு மக்களை உசுப்பேற்றி பிரிப்பது அறிவுநாணயமுள்ள தலைமை ஆகாது.
அம்பேத்கர் சொல்கிறார் “ ஜனநாயகம் என்பது வெறும் ஆட்சி முறை அல்ல; அது சமூகத்தில் வாழும் சக மனிதனுக்காக மரியாதையை அளிப்பது” அந்த மரியாதைதான் உங்களுக்கும் கிடைக்கவேண்டும். சிலபேரின் அரசியல் லாபங்களுக்காக மக்களை பலி ஆக்குகிறது அந்தத் தலைமை.

தலித்துகள் போராடுவது சகமனிதனின் சமூகஜனநாயகத்திற்காக, வாருங்கள் மனிதர்களே எல்லாருக்குமான சமூகஜனநாயகத்தினை வென்றெடுப்போம்.

(இப்படிப்பட்ட நேர்காணல்கள் மீது ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள், சமூகவியலாளர்கள் தங்கள் கருத்துக்களைக்களை காத்திரமாக முன்வைத்தால்தான் தமிழ்ச்சமூகத்தைக் காக்க முடியும். பத்தோட பதினொண்ணு அத்தோட இதுவொண்ணுன்னு இருங்க.)

யாழன் ஆதி, எழுத்தாளர். சமூக-அரசியல் செயற்பாட்டாளர். இவருடைய நூல்களில் ஒன்று 
புத்தரின் தம்மபதம்.