பிரேம்

பிரேம்
பிரேம்

அய்ரோப்பிய அரச குடும்பங்களும், பிரபுக்களும் கொள்ளைக்காரர்களையும் குற்றவாளிகளைகளையும் உலகம் முழுக்க அனுப்பி மண்ணையும் மக்களையும் அடிமை கொண்டு நசுக்கத்தொடங்கிய வரலாறுதான் இன்றுள்ள நவீன தேசங்களின் வரலாறு.

வணிகம், பேரரசு விரிவாக்கம் இத்துடன் சமயப்பரப்புதல் என்ற உருமறைப்பும் சேர்ந்து கொள்ள அறுநூறு ஆண்டுகால உலக மயமாக்கம் இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளது.

பிரிட்டன் உருவாக்கிய இன்றைய இந்தியா பொல்லாத நினைவுகளின் மீதும் துயரங்களின் மீதும் கட்டப்பட்டது.

ஒரு நூறு ஆண்டு காலப் படுகொலைகள் உருவாக்கித் தந்த ஒரு நிலப்பரப்புதான் இன்றைய இந்தியா.

பிரிட்டன் இங்கு தன் ஆதிக்கத்தையும் சுரண்டலையும் நிறுவாமல் இருந்தால் இந்தியா அன்பும் அறனும் உடையதாய் பண்பும் பயனும் கொண்டதாய் இருந்திருக்கும் என்றோ இருந்து வந்தது என்றோ நாம் கற்பனை செய்து கொள்ளவில்லை.

ஆனால் அது தனக்கேயுரிய முரண்கள், மோதல்கள், வன்முறைகளுடன் வேறு வகையில் தனக்கான நவீன நிலையை அடைந்திருக்கும்.

ஆங்கில-பிரஞ்சு-போர்ச்சுகிசிய அரசும் நிர்வாகமும் இங்கு உருவாக்கிய நவீன-நாகரிக நிலை தனக்குப் பணிவிடை செய்கிற அடிமைகளுக்கு நல்லுடைகளும், நற்பயிற்சிகளும் கொடுத்துப் பழக்கும் ஆண்டைகள் கல்வி.
அது Slave Pedagogy, Incarcerated Modernity, Aesthetic of Taming என்ற வகையில்தான் அடங்கும் (அடிமைகளை பழக்குதல், விலங்குகளை அலங்கரிதல் வகை). நீதி மன்றம், பொதுப்பணிகள், பாராளுமன்றம், நவீன கல்வி, நவீன தொழில்கள், அகண்ட பாரதம் எல்லாமே அடிமையுடலை வலிமையாக்கல், அழகுபடுத்தல், பண்படுத்தல் என்ற உத்திமுறைகளின் பகுதிகளே.

இதற்கெல்லாம் இன்று புலம்பி என்ன ஆகப்போகிறது? தெய்வ பக்தி, தேசபக்தி என்ற இரு மண்சார்ந்த அடிமை உளவியலை, மடமை மனப்பான்மையை ஊட்டிவளர்ப்பதால் சுதந்திரம், விடுதலை, தன்மானம், தன்னுரிமைகள் தழைத்துவிடப்போவதில்லை.

“அன்னை இந்தியா அடிமைப்பட்டனள்
தன்னையெரித்தும் தளைகளை உடைப்போம்
முன்னையிருந்த நம்பெருமைகள் மீட்போம்
முனிவரும் அமரரும் முயன்றெமக்கீந்த
மூதறிவெல்லாம் நேர்ப்படக்காண்போம்
பொன்னைநிகர்த்த நம் பாரதம்தன்னை
பொழுதெலாம் தொழுது புகழுடம்பெய்துவோம்
விண்ணைமுட்டும் பெருமைகள் சேர்ப்போம்
வீணர்கள் தடுத்திடின் வெட்டியே சாய்ப்போம்!“

என்பது போன்ற ஆயிரம் பாடல்களைப் பாடினாலும் விடுதலை, சுதந்திரம் என்பதன் பொருளை நாம் உணரவோ, புரிந்து கொள்ளவோ முடியாது.

நவீன இந்தியா. நவீன தேசியம் முற்றிலும் வேறு அறங்களால், ஒப்பந்தங்களால் ஆனது.
அதில் மையம் இல்லை, மேல் கீழ் இல்லை. சுயநிர்ணயம், தன்னுரிமை, சுயஆட்சி, தன்னடையாளம், தன்மொழிப் பெருமைகள், மண்சார் அரசியல் அனைத்தும் கொண்ட ஒரு கூட்டு தேசமாக இந்தியா இருந்தால் மட்டுமே அது சுதந்திர நாடு.

வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையும் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரம் கொண்ட மண்டலமாக்கிய இந்திய நடுவண் அரசு அவற்றை தொந்தரவு தரும், தொல்லைதரும், அமைதிகுலைந்த மண்டலங்கள் என அறிவித்தது. ஏன் அவை அமைதிகுலைந்து போயின அந்த மக்களின் தேவை, கோரிக்கைகள் என்ன என்பதை முன் உட்கார்ந்து கேட்கும் பொறுப்பு இந்திய கூட்டரசுக்கு உண்டு.
அதனை இன்று வரை செய்யவில்லை.

சிறப்பு அதிகாரம் கொண்ட ஆயுதப்படையினர் எந்த வீட்டிலும் புகுந்து சோதனை செய்யலாம். இரவு பகல் எந்த நேரத்திலும் உங்கள் வீட்டிற்குள் வந்து பிள்ளைகளை இழுத்துச் செல்லலாம். பாதுகாப்பு- சோதனை என்ற பெயரில் பெண்களைத் தொட்டுப்பார்க்கும் இந்திய வீரர்களை அந்த மாநிலப் பெண்கள் ‘Snake Hand’ என்று பெயரிட்டு அருவருப்புடன் பேசிக்கொள்வார்கள். தம் மண்ணில் இருந்து எங்காவது போய் தப்பிக்கலாமா என்று அவர்கள் சிறுவயது முதலே திட்டமிடத் தொடங்கிவிடுகிறார்கள்.

வெளியில் வந்து படிக்கும் பெண்களையும் பிள்ளைகளையும் விடுமுறைக்காலங்களில்கூட வீட்டுக்கு வரவேண்டாம் என்று வேண்டிக்கொள்ளும் பெற்றோர்களை நினைத்துப் பாருங்கள்.

“இங்கே நிலைமைகள் சரியில்லை உன்னுடன் படித்த தின்மிங் பொமாய் இப்போது காவலில் இருக்கிறான். நீ அவனுடன் போனில் பேச முயற்சி செய்யாதே.” அம்மாவிடமிருந்து பிள்ளைக்கு வரும் செய்தி இது.

என்னுடன் படித்த அவன் இங்கு வேலை செய்கிறான். அங்கு தொழில் செய்கிறான் என்று நாம் பேசிக்கொள்வதைப் போல வடகிழக்கு மாநிலப் பிள்ளைகள் “என்னுடன் படித்த அவன் காணாமல் போய்விட்டான், இன்னொருவன் எதோ ஆர்ம்ட் குருப்பில் சேர்ந்து விட்டான். அவன் ட்ரக் குருப். படித்துக் கொண்டிருந்த ஒருவனை விசாரனைக்கு அழைத்துச் சென்றார்கள் இன்னும் வெளியே விடவில்லை. வெளியே வந்தால் என்னுடன் அவனும் டெல்லியில் படித்துக் கொண்டிருப்பான்.”

ஒவ்வொரு பிள்ளையிடமும் இப்படிக் கதைகள் உள்ளன. நாங்களும் இந்தியாவும், இந்திய அரசுடன் எங்கள் அரசு பேசுகிறது, இந்தியர்களான நீங்கள் என்ற சொற்கள் அவர்கள் பேச்சில் கலந்து கிடக்கிறது. 70 ஆண்டுகளான பின்னும் அவர்கள் தம்மை இந்தியா என்று உணரமுடியாத நிலைக்குக் காரணம் யார்?

நான் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்திற்கு யோபின் என்ற நண்பருடன் போயிருந்த போது (மேகாலயா வழியாக) 60-70 குழந்தைகள் ஒரே இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். தூரத்தில் ராணுவ வண்டிகளின் வரிசை ஒரு கோடுபோலத் தெரிந்தது, ஒருவிதமான ஓசை. விளையாட்டை நிறுத்திவிட்ட குழந்தைகள் ஒரு இடத்தில் குவிந்தனர். அந்த வண்டிகள் அவர்கள் கிராமத்தைக் கடந்து மறையும் வரை அவர்கள் விளையாடவும் இல்லை பேசிக்கொள்ளவும் இல்லை. 24 லாரிகள், அதற்குள் ஆயுதம் சுமந்த ராணுவத்தினர் பச்சை-சிவப்பு அதிரடிப்படை சீருடையில் பல நூறு பேர். சாலையோரம் நின்ற குழந்தைகளின் முகத்தில் அவர்கள் சென்று மறையும் வரை அச்சமும் குழப்பமும்தான் இருந்தது. (தாக்குதல் அற்ற தொடர்தாக்குதல்)

நண்பரும் நானும் ஒரு தேநீர் கடையில் உட்புறம் இருந்தோம். “உங்களைப் பார்த்தால் என்ன ஏது என்று கேட்பார்கள். வெளியே செல்ல வேண்டாம் என்றார் அவர். தன் குழந்தைப்பருவமும் இப்படித்தான் கழிந்தது. அந்த ஓசை எங்களுக்கு அச்சத்தை தருவது.”

ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கிறது. அது இந்தியா பற்றி நல்லதாக எதவும் கொண்டதல்ல.

போராளிகளைப் பற்றியும் அவர்கள் பெருமைப் படவில்லை பல ஆயுதக்குழுக்கள் அரசால், பிற நாடுகளால் உருவாக்கப்பட்டவை என்கின்றனர் அவர்கள். சில குழுக்கள் பொருள் கடத்தல், ஆண்பெண் கடத்தலைச் செய்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் அவையும் கூட இந்திய அரசு தம் மண்ணில் உருவாக்கிய குழப்பத்தின் விளைவுகளே என்று அவர்கள் நம்புகிறார்கள். அதில் உண்மையும் உண்டு.

காஷ்மீர் மண்டலத்தின் கதை இதனினும் நீளும் துயரமாக மாறிவிட்டது. தினசரிக் கொலைகளும் கடத்தல்களும் திட்டமிட்டு தவணை முறையில் நடத்தப்படுகின்றன.

ஆனால் அவர்களின் மனநிலை வேறு வகையானது. எங்கு சென்று படித்தாலும் பிள்ளைகள் ஊருக்குப் போய்விட நினைக்கிறார்கள். பெற்றோர்களும் சீக்கிரம் வீடு திரும்பச் சொல்கிறார்கள். மண்ணை விட்டுச் சென்று விட்டால், யார் அதனைக் காப்பது. இடம் ஒதுக்கிக் கொடுக்கவா இடம் பெயர்வது. அது பொதுவான உணர்வா தெரியவில்லை. நான் ஏன் வெளியே செல்ல வேண்டும் அவர்களை வெளியே அனுப்பி விட்டு என்வீட்டில் நான் வாழ வேண்டும். ஓடித்தப்பிக்க நான் என்ன வேட்டையில் தப்பிய முயலா? மனித உணர்வுகள் வகைப்படுத்த முடியாதவைதான்.

இந்தியா நன்றாக இருக்க வேண்டும்.
அது தன்னுரிமை கொண்ட மக்களிடம் பேசித் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எல்லையோர மக்கள் காக்காத எதனை எல்லை காக்கும் படைகள் செய்துவிடப் போகின்றன. இன்னொரு வகையில் அவர்களும் தேசபக்தியால் நிரம்பியவர்களாவே உள்ளனர்.

அவர்கள் மண், அவர்கள் தேசம் அதன் மீதான பக்தி. “ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்த புகல் என்ன நீதி? என்ற குரல்தான் அவர்களிடம் உள்ளூடிக் கிடக்கிறது. இந்தியா அந்நியமானது இல்லை என்பதை ஆயுதங்களும் சன்னக்குண்டுகளும் இன்றி கைகூப்பி நின்றுதான் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

என்ன ஒரு அரசாங்கம் கைகூப்பி மக்கள் முன் நிற்பதா? பொங்கியெழுந்து துப்பாக்கியைத் தூக்கும் அன்பும் பண்பும் அறமும் கொண்ட தேசபக்தர்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். ஆயுதங்களால் அச்சத்தை உருவாக்கலாமே தவிர தேசபக்தியை உருவாக்க முடியாது.
ஆகஸ்டு 15ஐ அந்த மக்கள் இன்னும் “——-“ தினமாகவே நினைவில் வைத்திருக்கின்றனர். முப்படைகளும் சேர்ந்து சென்றாலும் அதனை மாற்ற முடியாது. அதற்கு மூன்று வழிகள்தான் உள்ளன. தன்னுரிமை, தன்னாட்சி, தன்னடையாளம். இது உடைப்பு அல்ல இதுதான் உண்மையான இணைப்பு. சுதந்திரம் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அவர்களுக்கும் ஒவ்வொருவருக்குமே பிறப்புரிமைதான்.

“பறத்தலை நிறுத்த என்
இறக்கையை வெட்டினாய்
சிதறிய இறகுகள் திசைகொன்றாக
நூறு பறத்தல்கள்
இறக்கையை வெட்டும் உன் வாள்
காற்றை வெட்டுமா!

(சுதந்திரத்தை நேசிக்கும் அனைவருக்கும்)

பிரேம், தமிழில் படைப்பிலக்கியத்திலும் கோட்பாட்டுத் தளத்திலும் இயங்கும் மிகச் சிலரில் ஒருவர்; பின்நவீனத்துவ, பின்காலனிய, விளிம்புநிலை அரசியல் கோட்பாடுகளையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்பவர்.  தற்போது தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையில் இந்திய இலக்கியம் மற்றும் ஒப்பிலக்கியத்துக்கான பேராசிரியராகப் பணியற்றி வருகிறார். இவரது காந்தியைக் கடந்த காந்தியம்: ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு (2014), திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம் (2015)’ இரண்டும் சமீபத்திய நூல்கள்.