காலமான கவிஞரும் பாடலாசிரியருமான நா. முத்துகுமாருக்கு ரூ. 70 லட்சம் அளவுக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் தர வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் வயதிலேயே கணவனை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் அந்தத் தொகை போய்ச் சேர வேண்டும் என்று முகநூல் வழிய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Thiru Yo, “நா.முத்துக்குமார் எழுதிய திரைப்பாடல்களுக்கு பல தயாரிப்பாளர்கள் கொடுத்த காசோலைகள் திரும்பி வந்துள்ளதாகவும், அவர் பணத்திற்காக அழுத்தம் கொடுக்காமல் இருந்துள்ளதும், கல்லீரல் பாதிப்படைந்து மருத்துவம் பார்க்க அப்பல்லோவில் கேட்ட பணம் கொடுக்க ஏற்பாடு செய்யும் இடைவெளியில் அவர் இறந்ததாகவும் பலரது பதிவுகளின் வழி தெரிகிறது. மிகவும் கொடூரமானது. நோயை குணப்படுத்த விலைபேசும் சூழலில் இருப்பதும், உழைப்பின் ஊதியத்தை கொடுக்காமல் ஏமாற்றுவதும்.

தகவல் அறிந்தவர்கள் அவரது குடும்பத்தின் அனுமதியுடன் ஏமாற்றிய தயாரிப்பாளர்களின் பட்டியலைத் தயாரித்து அழுத்தம் கொடுத்து பணத்தை அக்குடும்பத்திற்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்படியும் வழங்காதவர்கள் பெயரை வெளியிடவும் செய்யலாம்” என்று யோசனை தருகிறார்.

கருப்பு கருணா, “நா.முத்துக்குமாரின் மரணத்திற்கு சிகிச்சைக்கு பணம் திரட்டமுடியவில்லையென்பதும் ஒரு காரணமாயிருந்திருக்கிறது. ஆனால் எழுதிய பாடல்களுக்கு தயாரிப்பாளர் தந்து பணமில்லாமல் திரும்பிவந்த காசோலைகளின் தொகை மட்டுமே 70 லட்சம் என அறியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. என்னே ஒரு கயவாளித்தனமடா…

தலைவனை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்திற்கு இத்தொகை கிடைப்பதை திரைத்துறையினர் உறுதிசெய்யவேண்டும். அந்த காசோலைகளை கொடுத்தவர்கள் உரிய பணத்தை கொடுக்கவேண்டும். இதனை திரைப்பட பாடலாசிரியர் சங்கமும் சக பாடலாசிரியர்களும் முன்னெடுக்க வேண்டும். தயாரிப்பாளர்களிடம் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்த கலைஞர்கள் வற்புறுத்த வேண்டும்.

முகநூல் போன்ற பொதுத்தளத்திலும் இக்கோரிக்கையை எழுப்பி அழுத்தம் தரவேண்டும்” என அழைப்பு விடுக்கிறார்.