அருண் பகத்

அருண் பகத்
அருண் பகத்

இந்திய விளையாட்டுத் துறை பற்றிய தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா. பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் விளையாட்டுத்துறைக்கு பிரம்மாண்ட அளவில் முதலீடு செய்வதாகவும் , இந்தியாவில் விளையாட்டுத் துறை முறைப்படுத்தப் படவே இல்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரே ஒரு முக்கியத் தகவலை மட்டும் பகிர இது சரியாணத் தருணம். திருவள்ளூர் மாவட்டத்தில் பாண்டூர் என்று ஒரு சிறிய கிராமம் உண்டு. நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது , மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் சந்திப்பில் பாண்டூர் எனக்கு அறிமுகமாகியது.போது அந்த கிராமம் எனக்கு அறிமுகமானது. 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகளில் 8,9,10ம் வகுப்புகளில் கலந்துக் கொண்டேன் நான். 3 வருடமும் அந்தப் போட்டியில் பாண்டூர் பள்ளி மாணவர்கள் தான் முதல் பரிசை அள்ளினர். ( நான் இரண்டு முறை 3வதாகவும் , ஒரு முறை 2வதாகவும் வந்திருக்கிறேன் )

அட இப்படி ஓடுறானுங்களே பாவிங்க என்று high jump பக்கம் திரும்பினால் கொஞ்சமும் சிரமமின்றி அசாதாரன உயரங்களை அனாயசமாக தாண்டி முதல் பரிசை வெல்வார்கள் பாண்டூர் பசங்க. long jump ,shot put அனைத்திலும் பாண்டூர் அரசுப் பள்ளி முதல் பரிசுகளை மட்டுமே அள்ளிச் செல்லும்.

எங்கள் ஊரில் என்னை விட சீனியர்களும்.. இதே வரலாற்றை சொல்லுவர். தற்போது உள்ள டீன்களும் இதே வரலாற்றைச் சொல்லுகின்றனர்.

உழைக்கும் தலித் மற்றும் உழைக்கும் பிற சமூகத்து மக்கள் நிறைந்திருக்கும் பாண்டூரில் , காலங்காலமாக அசராத உழைப்பினால் மரபு ரீதியாகவே.. அபார உடல்திறன் அம்மக்களுக்கு வாய்த்திருக்கிறது. கல்லிலும் மேட்டிலும் ஓடி குதித்து , கம்மாக்கரையில் அபாரமாக டைவ் அடித்து என.. பணக்கார நாடுகள் பல கோடிகள் கொட்டி தங்கள் வீரரகளுக்கு உருவாக்கும் திறனை பாண்டூர் இளைஞ , இளைஞிகள் இயல்பிலேயே பெற்றுள்ளனர். கிரிக்கெட் , கால்பந்து , வாலிபால் என எந்த விளையாட்டை எடுத்தாலும்.. பாண்டூர் அணிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சிம்மசொப்பனம் தான்.

இந்திய விளையாட்டுத் துறை அதிகாரிகள் தன் சாதிக்காரனையும் , சிபாரிசில் வரும் பண்ணை வீட்டு பையனையும் தூர எறிந்து விட்டு , இப்போதிருந்து பாண்டூரில் ஒரு 3 வருடம் முகாமிட்டால், உறுதியாக கூறுகிறேன்.. அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பாண்டூரிலிருந்து மட்டும் 5 தங்கம், 5 வெள்ளி , 5 வெண்கலம் கியாரண்ட்டி. இந்தியா முழுவதும் ஒரு 50 பாண்டூர்களாவது நிச்சயம் இருக்கும் என்பது என் நம்பிக்கை.

சாதிய , வர்க்கத் தடைகளை இந்திய வீரர்கள் தாண்டி விட்டால் போதும்.. ஒலிம்பிக்கின் உயரங்களும் , தூரங்களும் இந்திய கிராமங்களின் அசாத்திய உடலுக்கு தூசு.

அருண் பகத், திரை இயக்குநர்.