தீக்கதிர்

ஒவ்வொரு தலித்துக்கும் ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்ற குஜராத் பேரணியின் முழக்கம் அற்புதமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுஉறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறினார். உனா நகரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தையொட்டி, தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆதரவு இயக்கங்கள் நடைபெற்றன. மதுரை குஜராத் தலித் எழுச்சி கருத்தரங்கம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மதுரையில் விக்டோரியா எட்வர்டு ஹாலில் திங்களன்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முன்னணியின் மாவட்டத் தலைவர் எம்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் த.செல்லக்கண்ணு வரவேற்றுப் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் துரை.இரவிக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினர். முன்னணியின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாநிலக்குழு உறுப்பினர் மா.கணேசன், வி.சி.க. நகர் மாவட்டச் செயலாளர் கதிரவன்,புறநகர் மாவட்டச் செயலாளர் வி.பி.இன்குலாப், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் கே.சிதம்பரம், சிபிஎம் மதுரை மாநகர்மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னணியின் மாவட்ட துணைத்தலைவர் ஜி.மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.முன்னதாக கார்மேகம் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில்உரையாற்றிய டி.கே.ரங்கராஜன், ‘குஜராத்தின் உனா நகரில் நடைபெற்ற பேரணியில், தலித்துக்கள் இனி இறந்த மாட்டின் தோல் உரிக்கும் தொழில் செய்ய மாட்டார்கள் என்றும், மாற்றுப் பணியாக அரசு வேறுப் பணிகளை தர வேண்டும் என்றும் முழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது’ என்றார்.

அதேபோல, ஒவ்வொரு தலித்துக்கும் ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்ற மகத்தான முழக்கத்தை அகில இந்திய முடிவாக மாற்றுவதோடு, தமிழகத்திலும் அத்தகைய முழக்கத்தை முன்வைப்பதன் மூலம் நமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என அவர் அழைப்பு விடுத்தார். குஜராத்தில் மோடி அரசு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் வாடகைக்கு கொடுத்துள்ளது. சென்னையிலும் தமிழக அரசு, ஹூண்டாய், போர்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெருமளவு நிலம் வழங்கியுள்ளது.

ஆனால் தொழில் வருவது போன்று காட்டப்பட்டாலும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. உழைக்கும் மக்களில் பெரும்பாலான தலித் மக்கள் கிராமங்களில் கவுரவத்துடன் வாழ அவர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வரும் முழக்கமாகும். இந்தச்சூழலில் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து நடத்த வேண்டிய இப்போராட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு தருகிறஇயக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் இணைந்திட வேண்டும். அனைவரையும் ஏற்க செய்கின்ற வேண்டுகோளை முன்வைத்து பணியாற்றிட துணிவு தேவை. அந்த துணிவை தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் பெற்றுள்ளன என்று டி.கே.ரங்கராஜன் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி இரண்டும் இணைந்து சென்னையில் அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் சுதந்திர தின விழாவையொட்டி உனா எழுச்சி ஒருமைப்பாடு நிகழ்ச்சியை நடத்தின. மணிமண்டபத்தின் அமைதிச் சூழலைக் கிழிப்பது போல் ஜென்னி மார்க்ஸ் கலைக்குழுவினரின் பறையாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.நிறைவுரையாற்றிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ், ’எல்லோரின் தூக்கத்தையும் கெடுக்கிறஎழுச்சியை உனா நகரில் நடந்த கொடுமையும், சுதந்திர தின சங்கமும் ஏற்படுத்தியுள்ளன’ என்றார்.

’செத்த மாட்டைத் தூக்க மாட்டோம், மலக்குழியில் இறங்க மாட்டோம் என்ற வழக்கமான முழக்கங்களோடு, எங்களுக்கு நிலம் கொடு என்ற முழக்கமும் இணைந்ததால் உனா எழுச்சி புதியதொரு இயக்கமாகப் பரிணமித்துள்ளது’ என்றும் அவர் கூறினார்.’அந்த முழக்கத்தை விண்ணதிர முழங்குவதன் மூலம் நாடு தழுவிய அளவில் சிவப்பும் நீலமும் இணையட்டும். அறிவியல் பார்வையோடு சமுதாயத்தைக் கட்டமைக்க உறுதியேற்போம்,’ என்றார் அவர்.தமுஎகச மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், ’சாதி – மதச் சார்பற்றதாக இருக்க வேண்டிய அரசின் நிதியில் ஊர்தோறும் உள்ள சுடுகாடுகளில் சாதி வாரியாகத் தனித்தனி மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

திட்டமிட்ட முறையில் ஒரு பகை உணர்வு, குறிப்பாக தலித் மக்களுக்குஎதிராக ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், உனா போன்றதொரு எழுச்சியைத் தமிழகத்தில் உருவாக்க என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியமான கேள்வி,’ என்றார்.தமுஎகச தனது படைப்புகள் மூலமாகவும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனதுநடவடிக்கைகள் மூலமாகவும் உனா முழக்கங்களை இங்கேயும் எதிரொலிக்கச் செய்யும் என்றார் அவர். கல்வியாளர் வே. வசந்திதேவி, தலித் மக்கள் மீதான வன்முறை வழக்குகளை விசாரிக்க எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, மாவட்டந்தோறும் தனி நீதிமன்றங்கள் அமைக்க வலியுறுத்துகிற இயக்கமாகவும் மாற வேண்டும் என்றார்.

உனா பேரணியில் பங்கேற்றுள்ள தமுஎகச துணைப்பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா அங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பது பற்றிதொலைபேசி – ஒலிபெருக்கி இணைப்பின் மூலம் சித்தரித்தார். அ.குமரேசன், வடசென்னை மாவட்ட செயலாளர் (பொறுப்பு) மணிநாத், நாட்டுப்புற கலை ஆய்வாளர் இரா.காளீஸ்வரன் ஆகியோரும் உரையாற்றினர். துணைப்பொதுச் செயலாளர் இரா.தெ. முத்து, கவிஞர்கள் சி.எம். குமார், நா.வே.அருள், பாபு சுதந்திரன், சுந்தர் ஆகியோர் கவிதை வாசித்தனர். நாடக நெறியாளர் ஸ்ரீஜித் சுந்தரம், பாரதி இருவரும் ஜௌமானா ஹட்டாட் எழுதிய ஆங்கிலக் கவிதையைத் தமிழ் நிகழ்வாக அளித்தனர். நாடகவியலாளர் பிரசன்னா ராமசாமி, டிஒய்எப்ஐ மாநிலப் பொருளாளர் தீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். எஸ். கருணா, கி. அன்பரசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.