தேவனூரு மகாதேவா

அவர் கனல்பேச்சுக்காரர். அவர் பேச ஆரம்பித்தால் நம்மைக் கட்டிப்போட்டுவிடுவார். தீண்டப்படாத சமூகத்தில் பிறந்து, புத்த மதம் தழுவியவராக இறந்த, அவர்தான் பேராசிரியர் மாரிசுவாமி மாதையா. மாரிசுவாமியுடனான ஒரு நேர்காணலின் போது நடந்த சம்பவம், அந்த நேர்காணலைப் படிக்கும் போதெல்லாம் என்னை துறத்துகிறது.

மாரிசுவாமி, அருகில் இருக்கும் கிராமம் ஒன்றுக்குச் செல்வதற்காக ஒரு பேருந்து நிறுத்ததில் அமர்ந்திருக்கிறார். அந்த பேருந்து நிலையம் இருக்கும் இடம் லிங்காயத்துகளில் வசிப்பிடத்தில் அமைந்திருந்தது.

ஒரு முதியவர் மாரிசுவாமியைக் கைக்காட்டி தன் மகனிடம் கேட்டார், “அங்கே அமர்ந்திருப்பது யார்?”

மகன் சொன்னார், “சாராயம் காய்ச்சும் மாதையாவின் மகன், ஆசிரியர்”. அடுத்த நொடியே அந்த முதியவரின் வாயிலிருந்து கீழ்த்தரமான வார்த்தைகள் கொட்ட ஆரம்பித்தன.

“எழுந்திரு” மாரிசுவாமியைப் பார்த்து கத்தினார் அவர். இதை நினைவுபடுத்தி மாரிசுவாமி அந்த நேர்காணில் சொல்கிறார்…

“நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். பாபாசாகேப் அம்பேத்கரை படித்த பிறகே, சாதி அமைப்பு ஒரு புண்ணைப் போன்றது என உணர்ந்துகொண்டோம்”

சிகிச்சை முறைக்கான தேவை:

இந்தியா காயங்களுடன் விழுந்து கிடக்கிறது. ஆனால் அது குறித்து உணரவில்லை.  சாதிய புண்ணும், மதம் மற்றும் தீண்டாமையின் புண்ணும் கடும் காயங்களையும் தொற்றையும் ஏற்படுத்தக்கூடியவையாக மாறி, இந்தியாவை மனப் பிறழ்வுக்கு உள்ளாக்கின. இந்த நோய் கலாச்சாரமாகவும் பாரம்பரியமாகவும் சித்தரிக்கப்பட்டது, இதை சமூகம் நம்பியது.

இங்கே பிறந்த ஒரு மனிதன் சோர்வுற்றவனாக மாறுகிறான், தன்னுடைய பலத்தை இழந்தவனாக, இந்த நோயுடன் போராடி நிபுணத்துவம் பெறுகிறான்.

ஒரு கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தீண்டப்படாத சாதி, யாரையும் கொலை செய்யவில்லை; எவரையும் அடிமைப் படுத்தவில்லை. அல்லது அவர் கீழ்சாதிக்காரர் என எவரையும் கீழ்மையாக பார்த்ததும் இல்லை. இதற்காகவே இந்த சாதிக்கு மரியாதை செலுத்தப்பட்டிருக்க வேண்டும், மாறாக அவமானங்கள்தான் கிடைத்தன. நோய் குறித்தும் காயம் குறித்தும் அறிந்திருந்தால் இந்தச் சமூகம் இதை உணர்ந்திருக்கலாம்.

இது குறித்து விழிப்புணர்வுள்ள மக்கள், இந்த நோயிலிருந்து விடுதலை பெற பார்ப்பார்கள். இந்த விடுதலையானது அவர்களுடையது மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் விடுதலை நோக்கிய இது நகர்த்தும்.

யாருக்கு சிகிச்சை வேண்டும்?

உயர்ந்த மனப்பான்மையாலும் தாழ்வு மனப்பான்மையாலும் நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு கலாச்சார சிகிச்சை அவசியம். பாகுபாட்டு கோட்பாட்டை பாரம்பரியம் என நம்பும் மக்களுக்கு சமூக சிகிச்சையும் தங்களை ஏழ்மை நிலையிலிருந்து விடுவித்து கொள்ளுமளவுக்கு சக்தியற்ற தாழ்ந்த சாதியினருக்கு பொருளாதார சிகிச்சையும் தேவை.

அடையாளத்துக்கான எந்த ஒரு இயக்கமும் சமத்துவமின்னைக்கு உள்ளானது. அது ஒத்த விருப்பமுள்ள அனைத்து நீரோடைகளுடன் சமத்துவ நதியில் இணையக்கூடியது.

நாம் சாதியால் இழந்தது என்ன? செல்வம், அந்தஸ்து என்பவைகளை சில கணங்கள் ஒத்திவைப்போம். ஒரு குறிப்பிட்ட சாதியில் ஒருவர் பிறந்துவிட்டார் என்பதற்காக, அவனோ அவளோ, நீதிக்கும் உண்மைக்குமான அவருடைய உணர்வை இழந்துவிடுகிறார்.

தங்களுடைய சாதி அல்லாதவர்களின் இன்பங்களையும் சிரமங்களையும் பிரித்தறியமுடியாமலும் உள்ளுணர்வு குருட்டுத்தனமாகவும் அவர்களுக்கு உள்ளது. அவர்களுடைய உணர்வு திறன் இந்த நோயாள் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகிவிடுகிறது. அது அச்சுறுத்தலாக உள்ளது. நாம் நோய்வாய்ப்பட்ட சராசரிகளாக மாறுகிறோம். இதைத்தான் நான் இழப்புகளிலே மிகச் சிறந்த இழப்பாக நான் கருதுகிறேன்.

சாதியிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், நீதியையும் உண்மையும் உணரும் உணர்வை நாம் பாதுகாக்க வேண்டும். அது நமக்குள்ளே இருக்கிறது, நம்முடைய உணர்வை பாதுகாக்கிறது. அடுத்த தலைமுறை சுமூகமாக வாழ அதை நாம் ஊன்றி வைக்க வேண்டும்.

தீவிர சமத்துவமின்மை கொண்ட அமைப்பு 

சாதிய அமைப்பால் காயப்பட்ட தலித்துகள் சாதியை அழித்தொழிக்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள். அவர்கள் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு, ஒருங்கிணைந்து, போராட்டத்தைத் தொடர வேண்டும்.

இது கயிற்றில் நடப்பதுபோலத்தான். அடையாள அடிப்படையில் ஒருங்கிணைவதின் தேவை என்ன? இது சமத்துவத்துக்காகவும் மையப்படுத்தவும் ஒடுக்குதலை வெளியேற்றவும்.

அடையாளத்துக்கான எந்த ஒரு இயக்கமும் சமத்துவமின்னைக்கு உள்ளானது. அது ஒத்த விருப்பமுள்ள அனைத்து நீரோடைகளுடன் சமத்துவ நதியில் இணையக்கூடியது.

சமத்துவத்துக்காக போராடும்  பழங்குடிகள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகங்கள், உழவர்கள் போன்றவர்களின் அடையாள இயக்கங்கள் இதை உணர்வதில்லை. நாம் ஒன்றுபடுதலுக்குப் பதிலாக சிதைவை சந்திப்போம்.

சமத்துவத்தை விரும்பும் எந்தவொரு இயக்கமும் கட்டாயமாக இந்த விழிப்புணர்வை பெற்றிருத்தல் வேண்டும்.

இன்று இது இன்னும் கடுமையாகவிட்டது. இந்தியா எதை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது என கவனித்தோமானால், உதாரணத்து சுதந்திர போராட்டவீரரின் கனவானது கேலிக்கூத்தான கனவாக மாறிவிட்டது.

சமத்துவம் குறித்து பேசினால் மக்கள் நகைப்பார்கள். பிறகு, எத்தகைய இந்தியாவை நாம் விரும்புகிறோம்? மும்பையில் உள்ள பில்லினர் முகேஷ் அம்பானியின் வீடு 27 அடுக்குகள் கொண்டது. மூன்று ஹெலிபேட்டுகளும், 10 மின் தூக்கிகளும், தொங்கும் தோட்டங்களும், நடன அரங்கங்கள், உடற்பயிற்சி கூடங்கள், வாகனங்களை நிறுத்த ஏராளமான தளங்கள், 600 பணியாட்களுடன் கூடிய இந்த வீடு, ஆயிரக்கணக்கான சேரி குடிசைகள் சூழ்ந்த இடத்தில் உள்ளது.

நமக்கு இந்த இந்தியாதான் வேண்டுமா? கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்துக்கு வந்தீர்கள் எனில், மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொல்லையடிக்கப்பட்டதன் சாட்சியாக பெரிய பெரிய குழிகளைக் காணலாம். அந்த காற்றும் நீரும் பழுப்பாக மாறிவிட்டது. இந்த இந்தியாதான் நமக்கு வேண்டுமா?

இந்தியா எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது?

இது நம்மை எங்கே கொண்டு போய் நிறுத்தும்? பகட்டான வாழ்வியலோடு இது முடிந்துவிடாது. அனைத்தையும் வாங்க முடியும், அனைத்தையும் ஏலம் விட என்ற எல்லையைத் தாண்டி அது நடனமிடும்.

மக்கள் பிரதிநிதிகளை, சட்டமன்ற உறுப்பினர்களை, மக்களவை உறுப்பினர்களை மட்டுமல்ல…அது எவரையும் விட்டு வைக்காது. ஒரு சிலரின் கைகளில் செல்வம் குவிவது, ஜனநாயகத்தை தலைகீழாக்கும். அதன் நாக்குகள் நீதித்துறை, நிர்வாகம் மற்றும் ஊடகம் வரை நீளும்.

இந்த செல்வத்துக்குக் காரணமான காற்றையும் நிலத்தையும் நீரையும் மீட்கும் நிலைத்திருக்கும் வழியை நாம் கண்டறிய வேண்டும்.

இன்றை நகரங்கள் மூச்சுவிடமுடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. முன்னேற்றத்துக்காக கிராமங்கள் தங்களுடைய பலத்தை இழந்து விட்டன. உழவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

இங்கே வாழ்வதற்கான ஒரே வழி, சமத்துவத்துக்கான கனவை விதைப்பதுதான். ஏழைக்கும் பணக்காரனுக்குமான இடைவெளியைக் குறைக்கும் விருப்பத்தை நாம் வளர்க்க வேண்டும்.  பள்ளிக்கல்வியிலிருந்தே பாகுபாடு குறித்து நாம் பேச வேண்டும். அரசியலமைப்பு சொல்லும் சமத்துவத்தின் படி  சமத்துவத்துக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். எதிர்கால இந்தியா அப்படித்தான் கட்டமைக்கப்பட வேண்டும்.

தேவனூரு மகாதேவா, சாகித்ய அகாதமி விருது பெற்ற கன்னட நாவலாசிரியர்; தலித் செயற்பாட்டாளர்; பொதுத்தளத்தில் தாக்கம் மிக்க அறிவுஜீவியாக கருதப்படுபவர்.

அல்ஜஸீரா இணையதளத்துக்காக  கன்னடத்திலிருந்து இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் ஸ்ரீதர் கௌடா.