கார்த்திக் கோபாலகிருஷ்ணன்

ஒரு படம் பொழுதுபோக்காக இருக்கிறதா இல்லையா? என்பது பிரச்சனை அல்ல. ஆனால் தரமான படம், நல்ல கருத்தை சொல்கிறது என்று கொண்டாடும் பொழுது அந்த கருத்து எப்படிப்பட்டது என்பதை கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஏனென்றால் ரசிகன் கருத்தை ரசிக்கிறான், அந்த கருத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஒன்றிப்போகிறான், ஒத்துப்போகிறான். “ஜோக்கர்” படம் பார்த்தேன், அப்படம் சொல்லவரும் கருத்து என்ன. “வீதிக்கு போராட வா தோழா” நல்ல விஷயம் தான், பிறகு என்ன பிரச்சனை. வீதிக்கு மக்கள் திரளாய் இல்லாமல் தனியாக வரச்சொல்கிறது “ஜோக்கர்”. ஒரு மூன்று பேர் மட்டும் போராடுகிறார்கள், அதிபர், பொன்னூஞ்சல் மற்றும் இசை என்ற பெண். அவர்களுக்கு சித்தாந்தங்கள் இல்லை, கோட்பாடுகள் இல்லை எந்த அரசியலில் அவர்கள் ஒன்றிணைகிறார்கள் என்பது இல்லை, சேர்ந்து போராடுகிறார்கள் அவ்வளவே. அதாவது ஒரு அரசியலற்ற தன்மையை ஜோக்கர் கொண்டாடுகிறது, அப்படிப்பார்த்தால் டிராபிக் ராமசாமி கூட போராளி தான்.

மக்கள்திரள் இல்லாமல் தனிநபராக சாதிக்க முடியுமா? சசிபெருமாள் சாதிக்காததை பல போராட்டத்திற்கு, மக்கள் திரளுக்கு பின்னர் அணைத்து கட்சிகளும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது அரசியல் அறிக்கையில் சாத்தியம் ஆயிற்று. மேலும் பன்னாட்டு நிறுவனங்களிடம் நாட்டை விற்கும் பொழுது மக்கள் திரள் இல்லாமல் எதுவும் சாத்தியம் இல்லை. பன்னாட்டு நிறுவனங்களை ஒரு பிற்போக்குவாதி கலாச்சார சீரழிவு என்று எதிர்ப்பதற்கும், ஒரு இடதுசாரி அறிவியல் பூர்வமாய் எதிர்ப்பதற்கு பெரிய வேறுபாடு உண்டு. அதனால் இங்கு கொள்கைரீதியாய் இணைவது மிகவும் முக்கியம்.

ப்ரெசிடெண்ட் தன் வீட்டு கழிப்பறை இல்லை அதனால் மனைவி இறந்தார், அதனால் போராட்டத்திற்கு வருகிறார். இப்படி வைத்துக்கொள்வோம் ப்ரெசிடெண்ட் வீட்டு கழிப்பறை இடியவில்லை என்று வைத்துக்கொண்டால் இந்த கதாநாயகன் போராட்டத்திற்கு வந்திருக்கவே மாட்டார். போராடுபவர்கள்  எல்லாருக்கும் இப்படி பிளாஷ் பாக் இருக்க வேண்டுமா? என் வீடு எரிந்தால் தான் மற்றவர்கள் வீட்டு பிரச்சனை பற்றி பேசுவேனென்றால் அது குட்டிமுதலாளித்துவ சிந்தனை.

கடைசி காட்சியில் பொன்னூஞ்சல், மக்கள் எல்லாம் தங்களை ஜோக்கர் போல பார்க்கிறார்கள் என்கிறார். மக்களுக்காக போராடுகிறோம் மக்களே கண்டுகொள்வதில்லை என்கிறார். மக்கள் திரளாய் இல்லாமல்  தனிநபராக இருப்பதன் விளைவு. நன்றாக கவனித்து பார்த்தால் “யாருக்காக போராடுகிறோமோ அவர்களே கண்டுகொள்வதில்லை” என்கிறார் . தன்னை மக்களுடன் சேர்க்காமல் தன் தலையை மேலே வைத்து மக்களுக்காக போராடுகிறோம் என்கிறார். அப்படி என்றால் பொன்னூஞ்சல் மக்களில் வரமாட்டாரா தேவதூதரா?

வரலாற்று ரீதியாய் போராடினால் உடனடியாக ரிசல்ட் வரவேண்டும் என்று நினைப்பது எவ்வளவு கொடுமை. அனைத்து மக்களும் வெவ்வேறு சூழலில் இருந்து வருபவர்கள் , அனைவரும் வீதிக்கு வா என்றால் புரியுமா உடனடியாக வீதிக்கு வர வேண்டுமா கூப்பிட்ட உடன்? ஒருத்தர் கூப்பிட்டவுடன் வரலாறு உடனடியாக பின்னாடி வருமா? வரலாறு அவ்வளவு சாதாரணமானதா, அதை ஏற்றுக்கொள்ள மனப்பக்குவம் இல்லாமல், அழுது புலம்புபவர்கள் எப்படி தலைமை தாங்கமுடியும். பகத் சிங் ரிசல்ட் பார்த்தா தூக்கில் தொங்கினான்.
மக்கள் திரள் என்பது அனைத்து மக்களையும் ஒன்று திரட்டுவது அதற்கு உண்டான சூழல், மனப்பக்குவம் வரும் வரை ஒன்று சேர மாட்டார்கள். உங்கள் வேலை என்ன தொடர்ச்சியாக மக்களை அரசியல் படுத்துவது.மக்களை அரசியல்படுத்தும்படி ஒரு காட்சி இல்லை. தனிநபர் போராட்டத்தையே முன்வைத்து விட்டு, எல்லாரும் “ஜோக்கராக” பார்க்கிறார்கள் என்றால்? பார்க்கத்தான் செய்வார்கள்.

கார்த்திக் கோபாலகிருஷ்ணன், நூல் விமர்சகர்.