தமிழகச் சிறைகளில் 14 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரும் கருத்தரங்கம் சென்னை இக்சா மையத்தில் இன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் எம். சங்கையா, எம். அப்பாதுரை, பேரா. ஜி. சரசுவதி, தியாகு, ஜாஸ்மீன், பேரா. அ. மார்க்ஸ், அ. சவுந்தரராசன், விடுதலை ராசேந்திரன், ஏ.கே. முகமது ஹனீபா, அப்துல் ரஹ்மான், ஆளூர் ஷாநவாஸ், அப்துல் சமது ஆகியோர் பேசுகின்றனர்.

கோவை கலவரத்தை மையப்படுத்தி ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ என்ற நாவல் எழுதிய எழுத்தாளர் சம்சுதீன் ஹீராவிற்கு பாராட்டு நிகழ்வும் நடைபெற இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், நாவாலசிரியர் சம்சுதீன் ஹீராவை கௌரவிக்கிறார். நன்றியுரையாற்றுகிறார் எம். ஜஹாங்கீர்.

இந்நிகழ்வு ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்து நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் துரைராஜ், டைம்ஸ் தமிழ் டாட் காமிடம் பேசினார்….

பீட்டர் துரைராஜ்
பீட்டர் துரைராஜ்

“தமிழகம் முழுவதும் 6700க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள். இதில் முருகன், நளினி உள்ளிட்ட ஏழு சிறைவாசிகளும் அடக்கம். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பொதுமக்களும் ஆதரவாக உள்ளனர். ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இவர்களை விடுவிக்க வேண்டுமென குரல் கொடுக்கின்றன. ஆனால், இஸ்லாமிய சிறைவாசிகளுக்கோ கிடைக்க வேண்டிய உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன.

தமிழக சிறைகளில் உள்ள 25 முஸ்லிம் கைதிகள், இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் படி, அதாவது கொலைக்குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டவர்கள். இவர்கள் கோவை குண்டுவெடிப்புக்கு முன்பே கைதாகி சிறையில் உள்ளவர்கள். 9 வருடம் முதல் 21 வருடங்களாக சிறையில் இருந்தாலும் இவர்களுக்கு முன் விடுதலை மறுக்கப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 1400 பேர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அந்த பட்டியலில் தவிர்க்கப்பட்டனர்.

14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்களை அரசு ஆலோசனைக்குழு மூலம் விடுவிக்க வேண்டும் என்ற விதி இருந்தும், இச்சலுகை இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நன்னடத்தை அலுவலர் பரிந்துரை செய்தும் குழுவில் விவாதிக்கப்படவில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தண்டனை அடைந்தவர்களுக்கு வருடத்தில் 15 நாள் வழிக்காவல் இன்றி பரோல் (காப்பு விடுப்பு) வழங்க வேண்டும். அதையும் இவர்களுக்கு மறுக்கிறார்கள்.

1997-ஆம் ஆண்டு 19 இஸ்லாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதில் நான்கு பேர் கோவை மருத்துவமனைக்குள்ளேயே கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இக்கொலைகளைச் செய்த ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 10 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா பிறந்த நாளின் போது நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் வழக்கத்தை தமிழக அரசு கடைப்பிடித்து வந்தது. ஆனால், வழக்கு காரணத்தைக் காட்டி இந்த வழக்கத்தை சில ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில்தான் இது இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, இந்த நாட்டின் சட்ட அமலாக்கத்தின் பிரச்சினை… நீதி தொடர்பான பிரச்சினை… ஜனநாயகம் தொடர்பான பிரச்சினை எனக் கருதி இந்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்றார்.

இந்த விடயத்தில் தனக்கு தூண்டுதலாக இருந்தது சம்சுதீன் ஹீரா எழுதிய ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ நாவலே என்கிறார் பீட்டர் துரைராஜ். நாவலாசிரியரை இந்நிகழ்வில்  கௌரவிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்கிறார்.