சதீஷ் செல்லத்துரை

என்னுடைய பேட்ஜ்மேட் முருகன். ஓங்கி ஊதினா ஒரு பத்தடி தூரத்தில் விழுற மாதிரி ஒல்லியான உடம்பு. திருமங்கலம் பகுதியை சேர்ந்தவன்… ஆர்மில சேரனும்னு வெறியா ஓடுவானாம். ஆனா போதிய உணவு கிடையாது. நம்புங்க… கொண்டைக்கடலை சாப்பிடுவதற்காகவே சென்னைல ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்து தன்னை காத்துக்கொண்டு ஒரு வழியா எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து கொண்டான். இந்த பென்சில் பாடிக்குள் இவ்ளோ ஸ்டெமினாவானு தோணும். ட்ரெய்னிங்ல இருக்கும்போதே க்ராஸ் கண்ட்ரி எனும் மாராத்தான் போன்ற போட்டிகளுக்கு போவான். உண்மைய சொல்லனும்னா அந்த மாதிரி ஓடும் வீரர்களுக்கு எவ்வித ஸ்பெஷல் டயட்டும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது பெயரளவிற்கு என்பதுதான் உண்மை.

முருகன் புத்திசாலி… நிலைமைய புரிந்து கொண்டு போட்டிகளுக்கு பெயர் கொடுப்பதை ட்ரெய்னிங்கோடு நிறுத்திகிட்டான். அதனால மட்டுமே மூட்டு வலி, முதுகு வலி என எவ்வித தொந்திரவும் இல்லாமல் இருக்கிறான் பார்டர்ல நிம்மதியாக! கிட்டத்தட்ட அரசப்படைகள், அரசு டீம்கள் அனைத்திலும் இந்த நிலைதான்னு உறுதிப்படுத்துகிறாள் ஒலிம்பிக்கில் தண்ணீர் கூட கிடைக்காமல் நாதியற்று விழுந்து கிடந்த மாராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ஜெய்ஷா.

முருகனுக்கு கிடைத்த போதி மரம் ஜெய்ஷாக்கு ஒலிம்பிக்கில்தான் கிடைத்திருக்குதுன்னு சொல்வதற்கில்லை. ஒரு வெளி நாட்டு வீரனை விட பல மடங்கு உடலளவில் உழைத்தும், மனதளவில் காயப்பட்டும்தான் இறுதிப்போட்டிக்கு வந்திருப்பார் என உறுதியாக சொல்லலாம். இந்தியத் திருநாட்டில் பாம்பாக பிறந்திருந்தால் பால் வார்த்திருப்பார்கள். மாடாக பிறந்திருந்தால் பூஜை செய்து தண்ணிர் காட்டியிருப்பார்கள். சிலையாக இருந்தால் கோவில் கட்டி கும்பிட்டிருப்பார்கள். மனுஷியாக அல்லவா பிறந்து விட்டாள் ஜெய்ஷா…

கள்ளிப்பாலிலோ கலயாண சந்தையிலோ காணாமல் போகாமல் அடுப்பங்கரை நாட்டின் எல்லைகளை உடைத்து இறுதிச்சுற்றின் இறுதி வரை உயிரைத்தாங்கி ஓடிய ஓட்டம் போதும் ஜெய்ஷாவின் மன உறுதியை இவ்வுலகம் புரிந்து கொள்ளும். பிசினஸ் க்ளாசில் உருண்டு புரண்டு ப்ரிட்டிஷ் துரைகளைப்போல திரியும் அதிகார வர்க்கத்தை என்னவென்று சொல்ல? மடத்தனமான நம்பிக்கைகளை வளர்ப்பதையும், மதத்தை வளர்ப்பதையும் விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் அரசு செயல்படவில்லையெனில் ஒவ்வொரு துறையிலும் முருகன்கள் ஒதுங்குவதும் ஜெய்ஷாக்கள் சாய்க்கப்படுவதும் மட்டுமே நிகழும். விழுந்து கிடப்பது சாரே ஜஹாசே அச்சா என வாய்க்கூசாமல் நாம் புகழும் இந்திய நாடுதானே அன்றி ஜெய்ஷா அல்ல!! –

சதீஷ் செல்லத்துரை, எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிகிறார்.