மோ. அருண்

ஒரு பெரும் கொண்டாட்டத்தை, நல்ல சினிமா சார்ந்த அதிர்வை கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஸ்டுடியோ தமிழ் சூழலில் உருவாக்கியது. லெனின் விருது, அனுராக்குடன் கலந்துரையாடல் என இரண்டு நாட்களும் சேர்த்து ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றார்கள். இரண்டாம் நாள், ராமன் ராகவ் திரைப்படத்தை பார்க்க முண்டியடித்த கூட்டத்தைப் பார்த்த பிரசாத் திரையரங்கின் கல்யாணம் கூட டோக்கன் கொடுங்கள், அல்லது நூறு ரூபாய் வாங்கி கொண்டு இருநூறு பேரை மட்டும் உள்ளே அனுமதியுங்கள் என்றார். ஆனால் நான் அப்போதும், தமிழ் ஸ்டுடியோ ஒரு இயக்கம், வந்திருக்கும் அத்துணை நண்பர்களையும் உள்ளே அனுமதித்தாக வேண்டும். டோக்கனோ, பணமோ வசூலிக்கக் கூடாது என்றே கண்டிப்பாக சொல்லிவிட்டேன். சொன்னது போலவே அனைவரையும் இடம் பிரச்சனை தாண்டி உள்ளே அனுமதித்தோம். ஆனால் இந்த இரண்டு நாட்களும் வந்திருந்த பெருந்திரளான கூட்டத்தில் இருந்து தமிழ் ஸ்டுடியோவிற்கு கிடைத்த நன்கொடை 5000 கூட இல்லை. நிகழ்விற்காக தமிழ் ஸ்டுடியோ செலவழித்த மொத்த தொகை 180000 த்தை தாண்டியிருக்கிறது. என்னுடைய கடனட்டையில் மட்டுமே 89 ஆயிரம் செலவாகியிருக்கிறது. அதனை அடுத்த மாதம் 28 க்குள் நான் அடைத்தாக வேண்டும். மற்ற நண்பர்களிடம் வாங்கிய கடனுக்கு கொஞ்சம் காலம் தாழ்த்தி கொடுக்கலாம் என்கிற ஆசுவாசம் உண்டு. வேறு வழியே இல்லாமல் இப்போது மீண்டும் ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தி கடனை அடைத்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

தவிர உடனடியாக தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகளுக்கு பெரும் பணம் தேவைப்படுகிறது. யாரையும் அணுகி எனக்கு பயிற்சிப் பட்டறை நடத்தி தாருங்கள் என்று கேட்க எனக்கு கூச்சமாக இருக்கிறது. மிஷ்கின் தானாகவே முன்வந்து பயிற்சிப் பட்டறை நடத்தி தமிழ் ஸ்டுடியோவிற்கு நான்கு லட்சம் நிதி திரட்டிக் கொடுத்தார். ஒருநாளும் நானாக சென்று என்னுடைய நண்பர்களிடம் கூட பணம் வேண்டும் என்று கேட்டதில்லை. பணம் வேண்டும் என்றால், அதுவும் எனக்கு இல்லை, தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகளுக்கு என்றால், நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்புவேன். அவ்வளவுதான். அதற்கு பதிலில்லை என்று அதோடு அவர்களிடம் கேட்கமாட்டேன். அத்துணை கூச்ச சுபாவம் உடையவன் நான்.

ஆனால் இப்போது இயக்குனர் நண்பர்களிடம் வேறு வழியின்றி பயிற்சிப் பட்டறை நடத்திக் கொடுங்கள் என்று கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். எண்ணி எண்ணி தேர்வு செய்து, இரண்டு மூன்று இயக்குனர் நண்பர்களிடம் குறுந்தகவல் அனுப்பி, பின்னர் அவர்களாக அழைத்தால் மிகுந்த சங்கடத்தோடு பயிற்சிப் பட்டறை நடத்திக் கொடுக்க இயலுமா என்று கேட்கிறேன். ஆனால் அந்த நொடியை தாண்டுவது எனக்குள் பெரும் வலியை வேதனையை கொடுக்கிறது. யாரிடமும் இப்படி கேட்டு எனக்கு பழக்கமில்லை. ஒட்டுமொத்த பார்வையாளர்களை நோக்கி நன்கொடை கொடுங்கள் என்று எனக்கு பிகிச்சைக் கேட்க முடியும். ஆனால் தனி நபர்களிடம், நண்பர்களிடம் பணம் கொடுங்கள் என்று எனக்கு கேட்க தெரியாது. இரண்டு நாட்களும் நன்கொடை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு தமிழ் சமூக பார்வையாளர்கள் செல்லாத ஒரு ரூபாய்க்களையும், கிழிந்த போன பத்து ரூபாய்க்களையும் மட்டுமே நன்கொடையாக போட்டுவிட்டு சென்ற சம்பவமும் நடந்தேறியது. இதுதான் தமிழ் சமூகம்.

வஞ்சிக்கப்பட்டதாக தாங்கள் நினைத்த ஒரு டிரைவருக்கு தமிழ் சமூகம் லட்சக்கணக்கில் பணத்தை வாரி வழங்குகிறது. ஒரு நண்பர் கல்வி, மருத்துவத்திற்கு உதவுகிறார் என்றால் அவருக்கும் இதே சமூகம் வாரி வழங்குகிறது. ஆனால் சினிமா கல்வி சார்ந்து இயங்கும் ஒரு இயக்கத்திற்கு செல்லாத ஒரு ரூபாயும், கிழிந்த பத்து ரூபாய் நோட்டும்தான் சன்மானம் என்றால் என்ன செய்வது.

தனிப்பட்ட நபர்களிடம் கேட்க பெரும் கூச்சமாக இருக்கிறது. எனவே பெரும் வெளியில் கேட்கிறேன். உங்களிடம் இருக்கும் செல்லாக் காசுகள் தீர்ந்து போகும் வரை நான் நன்கொடை கேட்டுக்கொண்டே இருப்பேன். செல்லாக் காசு தீர்ந்து போனால், செல்லும் காசை கொடுத்துதானே ஆகவேண்டும். எனவே நண்பர்களே என்னை பின்தொடரும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அத்துணை நண்பர்களும் நூறு ரூபாய் கொடுத்தால் கூட போதுமானது. எனக்கு பல லட்சங்கள் கிடைக்கும். நூறு ரூபாய் உங்களுக்கு சாதாரண தொகை, ஆனால் எனக்கு பெரும் தொகை. உங்கள் சார்பில் நூறு ரூபாயை உடனே அனுப்பி வையுங்கள்.

செல்லாக் காசை கொடுக்கும் நண்பர்களை கூட மன்னித்துவிடுவேன். ஆனால் இதனை படித்துவிட்டு, அட்வைஸ் செய்யும் நண்பர்களை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன். எனக்கு தேவை உங்கள் அட்வைஸ் அல்ல, பணம். முடிந்தால் கொடுங்கள், இல்லையேல் அமைதியாக சென்று விடுங்கள். அதற்கு செல்லாக் காசை கொடுத்த நண்பரே உத்தமமானவர்.

பணம் செலுத்த வேண்டிய வங்கி விபரங்கள்:

கணக்கு வைத்திருப்பவர் பெயர்: PADACHURUL
வங்கிக்கணக்கு எண்: 035005500700
வங்கி பெயர் & கிளை: ICICI Bank, Adyar Branch
IFSC Code: ICIC0000350

பணம் செலுத்திவிட்டு thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பவும்.

மோ. அருண், திரை செயல்பாட்டாளர். படச்சுருள் இதழின் ஆசிரியர்.