தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி குரல் கொடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப் பட்டது. இந்தக் கடிதத்தில் ராமதாஸ் எழுதியுள்ளவை:
 
வணக்கம்!
தமிழ்நாட்டின் இன்றைய பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் இளம் பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உங்களின் கவனத்தை ஈர்க்கவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும், பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் குரல் கொடுக்குமாறு உங்களை  கேட்டுக் கொள்வதற்காகவும் தான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் காரைக்கால் வினோதினியிடம் அந்தக் கொடுமை தொடங்கியது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து பொறியியல் பட்டம் பெற்று தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருந்தார் வினோதினி. இரவுக் காவலாளியான தந்தையின் குடும்ப சுமைகளை இறக்கி வைத்து, அவற்றை தாம் சுமக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரத்தில் தான் கொடிய மிருகம் ஒன்று, அந்த அப்பாவிப் பெண்ணுக்கு காதல் வலை வீசியது. ஆனால், தன் பொறுப்பை உணர்ந்திருந்த வினோதினி, அந்தக் காதலை ஏற்க மறுத்துவிட்டார். விளைவு அப்பெண்ணின் முகத்தை அமிலம் வீசி சிதைத்தது  அந்த மிருகம். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும், அதேபகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இடையில் ஏற்பட்ட ஊடலால் வித்யாவுக்கு அமில அபிஷேகம் செய்தது அந்த மிருகம். இந்த இரு நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் உயிருக்கு போராடிய வினோதினியும், வித்யாவும் இறுதியில் மரணத்தைத் தழுவினார்கள்.
சேலம் வினுப்பிரியா, சென்னை சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என இந்தப் பட்டியல்  தொடர்கிறது. இந்த இளம்பெண்களின் துயர முடிவுக்கு காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒருதலைக் காதல் தான். இவர்களில் விழுப்புரம் நவீனாவுக்கு செந்தில் என்ற மிருகம் கொடுத்த தொல்லையை ஒருதலைக் காதல் என்று சொல்ல முடியாது. நவீனா 14 வயது சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே செந்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறான். கடைசியில் அந்த மிருகத்தின்  சீண்டல் நவீனாவை உயிருடன் தீயிட்டு எரித்து படுகொலை செய்த கொடுமையில் நிறைவடைந்துள்ளது.
இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முதன்மைக் காரணம் காதல் என்றால் என்ன? என்ற புரியாமையும்,  சாதி ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் காதல் வழி கலப்புத் திருமணம் தான் என்ற தவறான வழிகாட்டுதலும்  தான் என்பதில் உள்ள உண்மையை  புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். காதலுக்கோ, கலப்பு திருமணத்திற்கோ நான் ஒரு போதும் எதிரியல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்… கடந்த காலங்களில் நான் செய்து வைத்த கலப்புத் திருமணங்கள் என் வார்த்தைகளுக்கு வலிமை சேர்க்கும் கருவிகளாகும்.
காதல் என்பது அற்புதமான உணர்வு. ஆனால், அது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இயல்பாக வர வேண்டும். எந்த ஒரு பழமும் இயல்பாக கனிந்தால் மட்டுமே சுவைக்கும். மாறாக, கார்பைடு வைத்து கனியவைத்தால் அது உடல் நலனுக்கு தீமையை மட்டுமே ஏற்படுத்தும். இது அறிவியல் உண்மை. காதலும் அப்படிப்பட்டது தான். இயல்பாக ஏற்பட்ட காதல் நாளுக்கு நாள் வலிமையடையும். மாறாக பெண்ணிடம் உள்ள அழகில் மயங்கியோ, சொத்துக்களைப் பறிக்கும் நோக்குடனோ செயற்கையாக உருவாக்கப்படும் காதல் வாழ்க்கையை பொசுக்கிவிடும். இதில் கொடுமை என்னவெனில், இக்காதலால் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருப்பது தான்.
காதல் என்றால் என்ன? என்பதை 74 ஆண்டுகளுக்கு முன்பே 01.01.1942 அன்று பதிப்பிக்கப்பட்ட  ‘‘பெண் ஏன் அடிமை ஆனாள்?’’ என்ற கட்டுரைத் தொகுப்பில் ‘காதல்’ என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் தந்தை பெரியார் வரையறுத்திருக்கிறார்.
‘‘அன்பு, ஆசை,  நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர, வேறு  பொருளை கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் —— பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் & -பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல்,  திருப்தி இல்லாமல்,  தொல்லைபடுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.—
ஆனால், காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்ததெந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைகின்றது? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும்,   உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும்,(காதலை) அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.’’
அதுமட்டுமின்றி, காதல் தெய்வீகமானது அல்ல… அது ஆசை மற்றும் செல்வத்தை பொறுத்தே ஏற்படும் என்பதையும் 30.06.1940 அன்று வெளியான குடியரசு நாளிதழில்  பெரியார் கூறியிருக்கிறார்.
‘‘என்னைப் பொறுத்தவரையில் காதல் என்பது பொருளற்ற வார்த்தை என்பேன். அதற்குப் பொருள் ஏதாவது இருக்கிறது என்று சொன்னால், அது ஆசை அல்லது தேவை என்பதைத் தவிர வேறு அல்ல என்பேன். அந்த ஆசையும் தேவையும் வியாபாரம் போல் இலாபத்தை – நலத்தைப் பொறுத்ததே தவிர, அதில் தெய்வீகமோ அற்புதமோ ஏதும் கிடையாது. இலாபமுள்ள இடத்தில்தான் ஆசை அல்லது காதலும் தேவையும் இருக்கும். இலாபமில்லாத இடத்தில் இவற்றிற்கு வேலை இல்லை.
…அழகும் செல்வமும் உள்ளவன் என்று கருதும் போது ஏற்பட்ட காதல் அவை இரண்டும் இல்லை என்று தெரிந்தபின்னும் இருக்காது. அதுபோல தனது இயற்கை இச்சையைத் தீர்க்கத்தக்க வீரன் என்று கருதியபோது ஏற்பட்ட காதல், அவன் வீரமற்றவன் என்று தெரிந்த போது இருக்காது. ஆதலால், காதல் என்பது பயனை எதிர்பார்த்தும், தனது திருப்தியை எதிர்பார்த்தும் தானே ஒழிய, எப்போதும் யாதொரு பயனும் எதிர்பாராமலும் இருக்கவேண்டியது என்பதானதல்ல.’’ இது தான் காதல் குறித்த தந்தை பெரியாரின் பார்வையாக இருந்திருக்கிறது. இது தான் நிகழ்கால யதார்த்தமும், உண்மையும் கூட.
காதல் மற்றும் அதன்மூலம் ஏற்படும் கலப்புத் திருமணங்களால் சாதி ஒழிந்து விடும் என்று ஒரு பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது.  ஆனால், காதலாலும், கலப்புத் திருமணத்தாலும் சாதிகள் ஒழிவதில்லை என்பது தான் உண்மை. இந்திய விடுதலைக்குப் பிந்தைய 65 ஆண்டுகளில் நடந்த காதல் திருமணங்களால் சாதியற்ற சமுதாயம் எந்த அளவுக்கு உருவாகியிருக்கிறது?  காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களில் எத்தனை பேர் தங்களின் குழந்தைகளை சாதியற்றவர்களாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்? என்ற எளிய வினாக்களுக்கு பல ஆண்டுகளாக விடை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்னும்  விடை கிடைக்கவில்லை. காரணம்… காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் 99 விழுக்காட்டினர் தந்தையின் சாதியையே குழந்தையின் சாதியாக பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அகநானூற்று சூழலில் இயல்பாக பிறந்தாலும், நல்ல நோக்கத்திற்காக உருவெடுத்தாலும் காதல் நல்லது தான். ஆனால், இன்றைய சூழலில் காதல்கள் கட்டமைக்கப்படுவதாகவே உள்ளன. அவ்வாறு கட்டமைக்கப்படும் காதல்களுக்கு உள்நோக்கமும் உள்ளன. இவை தான் பெண்களின் பாதுகாப்பை  பறித்து, ஆபத்தை உருவாக்குகின்றன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இரு காரணங்கள்  முக்கியமானவை. அவற்றில் முதலாவது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் ஆணும், பெண்ணும் செய்ய வேண்டிய பிரதானப் பணி படிப்பது அல்ல… காதலிப்பதே என்ற நச்சு எண்ணத்தை இளைய தலைமுறையின் மனதில் விதைக்கும் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் ஆகும். இரண்டாவது, சாதி ஒழிப்பு புரட்சி என்ற போர்வையில் பிற சாதிப் பெண்களை காதலிக்கும்படி  தமது சமுதாய இளைஞர்களை தூண்டி விடுவதை முழுநேரத் தொழிலாக சில தலைவர்கள் வைத்திருப்பது.
இளைஞர்களை தூண்டிவிடும் வகையில் இவர்கள் பேசிய பேச்சுக்கள் பொது அரங்கில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இப்போது பிறசாதிப் பெண்களை காதலில் வீழ்த்துவது தங்களின் குலப்பெருமை என்பதைப் போல பேசி, அச்செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் ஒரு தலைவர். அவர் பேசிய மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை இந்த கடிதத்தில் மறுபதிப்பு செய்வதே பாவச்செயல் தான். ஆனாலும்,  அந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் கயமையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரது உரையின் ஒரு பகுதியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். இனி அவரது உரை வாசகங்கள்….
‘‘மானங்கெட்ட பிறவிகள்… வெட்கங்கெட்ட பிறவிகள். இவர்களுக்கு எது மானம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது என்றால் பொம்பளை சமாச்சாரம் தான். வேற ஒரு மயிரும் கிடையாது….வேற ஒரு மயிரும் கிடையாது. அவனை திரும்பிப் பார்ப்பதில்லை என்பதால் பொறாமையும் கூட. சிவப்பாக இருக்கிறான்… மீசை வைத்திருக்கிறான்… நல்லா அயர்ன் பண்ணிய சட்டை போடுறான். ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஷூ போடுகிறான்.
பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சென்ட் அடித்துக் கொள்கிறான். இவ்வளவும் அடித்துமே அவனைத் திரும்பி பார்க்கவில்லை. ஆனால், ஏழைக் குடும்பத்தில் பிறந்த, தாழ்த்தப்பட்ட சாதியில பிறந்த, சக்கிலியனை, பள்ளனை, பறையனை அவ திரும்பிப் பார்க்கிறாள் என்றால் அதிலிருந்தே தெரிஞ்சுக்க உங்கள் லட்சனம் எவ்வளவுன்னு… உன் கேடுகெட்ட லட்சனம் எவ்வளவுன்னு புரிஞ்சுக்க… இது ஒன்னே போதாதா… உன் லட்சனம் எவ்வளவுன்னு அந்த பொண்ணே சொல்கிறாள். இவ்வளவும் இருந்தும் ஒன்னுக்கும் லாயக்கில்லை. உங்கிட்ட ஒரு சரக்கும் இல்லை… ஒரு சரக்கும் உங்கிட்ட இல்லை… அவன் (பறையன்) ஏழையாக இருந்தாலும், வறுமையில் வாடுறவனா இருந்தாலும் அவனிடம் சரக்கும், மிடுக்கும் இருக்கிறது. அதனால நான் அவன் பின்னால போறேன்னு சொல்றா. அப்பவாவது உனக்கு மானம் இருந்தால் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள். ஆனால், இவன் என்ன பண்றான்…. இவள் அங்கு போய் 10 மாதம் படுத்திருந்தாலும் பரவாயில்லை… வா… நான் துடைச்சி விட்டுக்கிறேன்; கழுவி விட்டுக்கிறேன். என் கூட வந்து நீ குடும்பம் நடத்துங்கிறான்.’’
இது இளைஞர்களை நல்வழிப்படுத்தும் உரையா? இவை பெண் இனத்தை இழிவுபடுத்தும் வார்த்தைகள் அல்லவா? இதைவிட மோசமான வார்த்தைகளை எந்த தலைவராவது பேச முடியுமா?  கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த உரை அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பெண்ணுரிமை பேசும் பெரியார் வழி வந்த தலைவர்களோ, பொதுவுடமை பேசும் தலைவர்களோ, பெண்ணியவாதிகளோ இதைக் கண்டிக்க முன்வராதது மிகவும் வருத்தமளிக்கிறது.
பெண்கள் சமூகத்தின் வரங்கள். ஆனால், சமூகத்தின் சில சாபங்களால், அந்த வரங்கள் பொசுக்கப் படுகின்றன. பெண்களை படிக்க வைக்க வேண்டும்; வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால், நமது சமுதாயம் பெண்களை பாதுகாக்கவில்லை. மாறாக, பெண்கள்  எனும் மலரை கசக்கி எறியும் கயவர்களுக்கு, இல்லாத காரணங்களைக் கூறி, சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு உடனடியாக தடுக்கப்படாவிட்டால் தமிழகம் பெண்களுக்கு நரகமாகி  விடும் ஆபத்திருக்கிறது. இந்த ஆபத்துக்கு எதிராக பெண்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் அணி திரள வேண்டும்.
பெண்களுக்கு எதிரான சக்திகளை கண்டித்து போராடுவதால் என் மீது என்னென்ன முத்திரைகள் குத்தப்படும்; என்னென்ன கணைகள் தொடுக்கப்படும்; எத்தகைய பழிகளை சுமக்க வேண்டியிருக்கும் என்பதையெல்லாம் நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். போலிப் புரட்சியாளர்கள் உள்ள உலகத்தில் உண்மையையும், யதார்த்தத்தையும் பேசுபவர்கள் எப்படி பார்க்கப்படுவார்கள் என்பதை நான் அறிவேன். நாடகக் காதலுக்கு சாதி கடந்த காதல் என்ற முலாம் பூசி, அதை எதிர்ப்பவர்கள் அனைவரும் சமூக விரோதிகள் என்றொரு தீய பிம்பத்தை போலிப் புரட்சிவாதிகள் உருவாக்கி வைத்திருப்பதன் விளைவு தான் இது.
உண்மையில், காதலுக்கு நானோ, எங்கள் கட்சியோ ஒருபோதும் எதிரியல்ல.‘‘காதல் திருமணங்களை பா.ம.க. எதிர்க்கவில்லை. காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்புத் திருமணங்களுக்கோ தடை போடுவது நாகரீக சமுதாயத்தில் சரியானதாக இருக்காது. பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல், காதல் நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப் பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலி வேடம் போடாமல் கல்வி, வேலை, வருமானத்திற்கு முன்னுரிமை தந்து 21 வயதுக்கு மேல் நடக்கும் திருமணங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்’’ என்று வெளிப்படையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தான் நீதிமன்றங்களும் எடுத்துள்ளன. 18 வயதுகூட நிறைவடையாத பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்தது தொடர்பான வழக்கில்  நீதிபதிகள் கே.பக்தவத்சலா, கே.கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு கடந்த  2011&ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
‘‘மைனருக்கு 21 வயது நிறைவடையும்போதுதான் அவர் மேஜராகிறாரே தவிர, அதற்கு முன்பாக இல்லை. எனவே, எங்களின் கருத்துப்படி,         21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தாங்கள் காதலிக்கும் ஆண் தங்களுக்கு ஏற்ற துணையா? என்பதைப் பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல்வயப்பட்டு, திருமணம் முடித்து, அந்த முடிவுக்காக பின்னர்தான் வருத்தப்படுகிறார்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் போது, அந்தத் திருமணத்துக்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைச் சேர்க்கவேண்டும் – இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்துசெய்யத் தகுந்தவை என அறிவிக்கவேண்டும் என்று அரசுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்’’ என்று கூறியுள்ளனர். இதேபோன்ற தீர்ப்பை மேலும் பல உயர்நீதிமன்றங்களும் வழங்கியுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை தந்தைப் பெரியார் 45 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியிருக்கிறார்.
‘‘நம் பெண்கள் குறைந்த பட்சம் 20 வயது வரை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வியளிக்க வேண்டும். வாழ்விற்கு ஏற்ற வருவாயுள்ள தொழிலை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அதன்பின் அவர்களாகத் தங்களுக்கேற்ற துணைவர்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். வாழ்க்கையில் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்’’ என்று 28.-03.-1971 -அன்று மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த திருமண விழாவில் தந்தை பெரியார் பேசினார். ( ஆதாரம்: விடுதலை, 08.-04.-1971)
பெண்களுக்கான திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் தந்தைப் பெரியார் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக 70 ஆண்டுகளுக்கு முன் குடியரசு நாளிதழில் தந்தைப் பெரியார் எழுதிய தலையங்கத்தின் ஒருபகுதி பின்வருமாறு:
‘‘பெண்களுக்கு திருமண வயதை இப்போது 21-க்கு கொண்டு வர வேண்டுமென்று சட்டம் இயற்ற இருக்கிறார்கள். இது நம் சமுதாயத்திற்கு மிகத் தேவையானதாகும். இளம் வயதில் திருமணம் செய்வதால் பெண்கள் மிகத் துன்பப்பட வேண்டி இருக்கிறது. 15 வயதிலேயே குழந்தை பெற ஆரம்பித்து விடுவதால் பெண்களின் உடல் இளம் வயதிலேயே சக்தி இழக்க ஆரம்பித்து விடுகிறது’’ என்று  தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
நீதிமன்றத்  தீர்ப்பிலும், தந்தை பெரியாரின் கருத்திலும் உள்ள நியாயத்தையும், அக்கறையையும் பெண்கள் நலனை பாதுகாப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். எனவே…..
1. பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். (அல்லது)
2. 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் போது, அந்தத் திருமணத்துக்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைச் சேர்க்கவேண்டும் – இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்துசெய்யத் தகுந்தவை என அறிவிக்கவேண்டும் என்ற கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை  சட்டமாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. பெண்கள் பள்ளி & கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் பாதுகாப்பாக சென்று வருவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக, முக்கிய இடங்களில் பாதுகாப்புக்கு  காவலர்களை நிறுத்துவதுடன், சென்னையில் இயக்கப்படுவது போன்று அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகளை இயக்க வேண்டும்.
4. பெண்களின் பாதுகாப்புக்காக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 01.01.2013 அன்று அறிவித்த 13 அம்சத் திட்டம் முறைப்படி செயல்படுத்தப்பட வேண்டும். இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும்.
5. பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களை, முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில், பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கைது செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதற்காக மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி உங்கள் கட்சியின் செயற்குழு/ பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.