ஹரியாணா சட்டப் பேரவையில் சமண மதத் தலைவரான தருண் சாகர் ஆற்றிய 40 நிமிட உரையும் அவர் நிர்வாணக் கோலத்தில் வந்து சபாநாயகரின் இருக்கையைவிட உயர்ந்த இருக்கையில் அமர்ந்தது ஊடகங்களில் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் இது ட்ரெண்ட் ஆனது.

நிர்வாண சாமியார் அப்படி என்னதான் பேசினார், பெண்சிசுக்கொலை பற்றியும் அரசியல் ‘தூய்மை’ பற்றியும் பாகிஸ்தான் பற்றியும்தான்.

ஹரியாணா கல்வி அமைச்சரின் அவமானகரமான செயல். வன்மையாகக் கண்டிக்கிறோம். தருண் சாகர் என்கிற நிர்வாண சாமியார் சட்டமன்றத்துக்கு அழைக்கப்பட்டு, அவைத் தலைவரை விட உயரமான நாற்காலி அவருக்குக் கொடுக்கப்பட்டது. அரசியல் சட்டத்தை பாஜக மதிக்காது என்பதற்கு இது மேலும் ஒரு சமீபத்திய உதாரணம். தர்மம் கணவரைப் போல, அரசியல் மனைவியைப் போல கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

ஒரு நூற்றாண்டு போராட்டமும் நாம் அடைந்த வெற்றிகளும் பின்னுக்குப் போக விட்டு விடவே கூடாது.

“அரசியலில் தர்மம் கட்டுக்குள் இருக்க வேண்டும். தர்மம் கணவராகவும் அரசியல் மனைவியாகவும் இருந்து மனைவியின் அனைத்து செயல்பாடுகளையும் கணவர் கட்டுப்படுத்துவதைப் போல அரசியலை தர்மம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்றவர், பெண்சிசுக்கொலைகள்தான் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதற்குக் காரணமாகிறதென்கிறார். எனவே, பெண்சிசுக்கொலையைத் தடுக்க அரசியல், சமூகம் மற்றும் மதரீதியாக பாடுபட வேண்டும். பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே தேர்தலில் நிற்க அனுமதி தர வேண்டும். 21-ம் நூற்றாண்டிலும் ஆண்-பெண் பேதம் பார்க்கிறோம். 14-ஆம் நூற்றாண்டில் வாழ்வதுபோல் உள்ளது” என்றார்.

கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவது மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று தற்போதைய அரசியல் குறித்து பேசியவர், தீவிரவாதமும் மிகப் பெரும் பிரச்சினை என்றார். எந்தவொரு மதமும் தீவிரவாதத்தை வளர்ப்பதில்லை என்றவர், தீவிரவாதத்தை ஒடுக்க அரசு செலவிடும் பணத்தை மருத்துவத்துவத்துக்காகவும் கல்விக்காகவும் செலவிடப்பட வேண்டும் என்றார்.

அடுத்து, பாகிஸ்தான் குறித்து பேசியவர், அந்நாடு தீவிரவாதத்தை வளர்ப்பதை அனைவரும் அறிவர் என்றார். பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து மன்னித்து வருவதாகவும் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்த சாமியார், “மனோகர் கட்டார் (ஹரியாணா முதல்வர்) அரசு, அரசியலை காவிமயமாக்கிக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். இது காவிமயாக்குதல் அல்ல, அரசியலைத் தூய்மைப்படுத்துவது” என்று முடித்தார்.