சசிகலா புஷ்பா வி‌வகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த வைகுண்டராஜன் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக, அவரது சகோதரர் குமரேசன் குற்றம்சாட்டியுள்ளார். சசிகலா புஷ்பாவுக்கு தேவையான உதவிகளையும் வைகுண்டராஜனே செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிமுக அரசை மிரட்டுவதாகவும் அவர் சொன்னார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டவிரோதமாக நடைபெற்ற 50 லட்சம் டன் மணல், எந்தெந்த நாடுகளுக்கு, எந்தெந்த நிறுவனங்களுக்கு சென்றது என்ற விவரம் தம்மிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

தாது மணல் கடத்தலால் அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறிய குமரேசன், ரவுடிகளின் துணையுடன் தாது மணல் கடத்துவது தொடர்வதாக கூறியுள்ளார்.

தாது மணல் கடத்தலுக்கான ஆதாரங்களை நீதிமன்றத்திடம் அளிக்க தயாராக இருப்பதாக கூறிய அவர், முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தாது மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தாது மணல் கடத்தல் பற்றி புகார் அளித்ததால் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். சட்டவிரோத தாது மணல் கடத்தலில் ஈடுபட்ட வைகுண்டராஜனின் சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் எனவும் குமரேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.