மாயா ஏஞ்சலோ

தமிழில்: ஜெயகாந்தன் கருணாநிதி

மானுட சாகரம்
ஒவ்வொரு துளியும் வெவ்வேறு .
மானுட குடும்பம்
சிலர் களித்திருக்க, சிலர்
சலிப்பு மேலிட்ட இறுக்கத்தோடு .

சிலர் வாழ்வின் அர்த்தத்தை அறிந்து
வாழ்ந்தேனென்று உரைக்க
சிலர் வாழ்க்கையின் நிதர்சனமறிந்து
வாழ்ந்தேன் என்கின்றனர்,அநாயாசமாய்

பாரதியின் பூனைகள் நாம்.
நம் தோலின் நிறம் தான் எத்தனையெத்தனை
நம்மை குழப்ப , கோபப்படவைக்க , நிராகரிக்க, ஆராதிக்கவெனப் பலதும் செய்ய வைக்கின்றன
இந்தக் கறுப்பும் , வெளுப்பும், மஞ்சளும் , பழுப்பும் , வர்ணக்கலவையும்

ஏழு கடல்களில் பாய்மரத்தில்
காற்று , நீர் வலித்து மிதந்திருக்கிறேன்.
ஏழு மலைகளடிவாரத்தில் கீழமர்ந்து
மலையுச்சியையும் , நிலவையும் ஒருசேரப் பார்த்திருக்கிறேன்.
இயற்கையும் மானுடமும் இணைந்து
இயைந்து நிகழ்த்திய
அதிசயம் பல கண்டிருக்கிறேன்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறென
மானுடத்திற்கு ஒரு மனிதனை
இன்றும் தேடுகிறேன்

பல்லாயிரம் லட்சுமியையும் மீனாவையும்
கண்ட நான் , இன்று வரை
ஒருவரைப் போல் இருவரைக் கண்டதில்லை
அச்சுப்பிசிறாத நகலாய். பிசிறு

ஈருடல் ஓருயிராய்
தீராக் காதலை உண்டமயக்கத்திலும்
தலைவனுக்கும் தலைவிக்கும் வெவ்வேறாய் யோசனை
ஒரே கருவில் ஜனித்த இரட்டையரும்
வெவ்வேறு.

யாதும் ஊரே யாவரும் கேளிரென
பாரெங்கும் சென்றோம்
செஞ்சீனத்தில் பிரேமிச்சு தீர்த்தோம்
சேக்ஸ்பியரின் தேம்ஸ் நதியினில் கண்ணீரைக் கரைத்தோம்
மானுடம் பிறந்த ஆப்பிரிக்காவில்
உணர்வெழுச்சி பெற்றோம்
ஸ்பானியக் கடற்கரையினில் கடலலை ஆர்ப்பரிக்க
கூடிப்புணர்ந்தோம்
வட துருவத்தில் வெப்பம் தேடினோம்
கொலம்பஸின் புதிய உலகில் வாழ்ந்து வீழ்ந்தோம்

சில புள்ளிகளில் பிரிந்து
பல புள்ளிகளில் ஒன்றானோம்
ஒற்றைக் கோடானோம்

நம் வேற்றுமை தெளிவானது
உற்றுநோக்கின்
ஒற்றுமைகள் அதனினும் தெளிவானவை
அகம், புறம் நோக்கின்

ஒற்றுமைகள், அதனினும் தெளிவானவை
அகம், புறம் நோக்கின், மேலோட்டமாயிருப்பினும்

மாயா ஏஞ்சலோவின் புகழ்பெற்ற கவிதையான ‘The Human Family’ இன் ஆங்கில மூலம்: https://allpoetry.com/Human-Family