ஒடிசா மாநிலத்தின் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு தன் மனைவியின் பிணத்தைத் தூக்கிச் சுமந்தார் ஒருவர். அதே ஒடிசாவில் ரயிலில் அடிப்பட்ட முதியவரின் பிணத்தைத் தூக்கிச்செல்ல வாகன வசதி செய்து தராதநிலையில், எலும்பை உடைத்து முதியவரின் பிணத்தை அள்ளிக்கொண்டு போனார்கள் ஊழியர்கள்.

இந்தச் சமபவங்களைப் பற்றிய பேச்சே அடங்காத நிலையில் உத்தர பிரதேசத்தில் தன் 12 வயது மகனை தோள்களில் சுமந்து வந்த தந்தை, அரசு மருத்துவமனையில் சேர்க்க சென்றுள்ளார் சுனில் குமார். அவருடைய 30 நிமிட கெஞ்சலுக்குப் பிறகு, இங்கே முடியாது குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும்படி சொல்லியுள்ளனர். எவ்வித முதலுதவியும் செய்யவில்லை. ஸ்டெரெக்சர் கேட்டும் தரப்படவில்லை. மீண்டும் தோள்களில் தன் மகனை சுமந்துகொண்டே குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் சுனில். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மகன் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காய்ச்சலில் விழுந்த மகனை அருகில் இருந்த மருத்துவரிடம் காட்டியிருக்கிறார். காய்ச்சல் கடுமையாக இருக்கவும் திங்கள் கிழமை அரசு மருத்துவமனையான லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மருத்துவமனை அலட்சியத்தால் சிறுவன் இறந்துவிட்டார். இறந்த மகனை துணியில் சுற்றி தன் தோளிலே சுமந்துவந்திருக்கிறார் அந்த தந்தை.

மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் 2015 ஆம் ஆண்டின் பதிவுப் படி, 11 ஆயிரம் பேருக்கு ஒரே ஒரு மருத்துவர்தான் இருக்கிறார்கள் என்பது பெருமைபடக்கூடிய ஒன்றல்ல.