இடதுசாரிகள் இந்தியா தலித் ஆவணம் பத்தி

பத்தி: நீலம் – பச்சை – சிவப்பு : தலித் அரசியல் குறியீடாகுமா!

அன்புசெல்வம்

அன்பு செல்வம்
அன்பு செல்வம்

குஜராத் – உனா எழுச்சி தேசம் தழுவிய பேரியக்கமாக உருவெடுக்க வேண்டும் என்பதில் பலருக்கும் ஆர்வம். அதற்கான சூழல் உடனடியாக அமையவில்லை என்றாலும் குறைந்த பட்சம் “தலித் – ப‌ழங்குடியினர் – இஸ்லாமியர் – இடதுசாரி” அமைப்புகளையாவது ஒருங்கிணைப்போம் என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுவாக, கட்சிகள் வாக்கு வங்கி அரசியலையும், சாதிப் பெரும்பாண்மையையும்சார்ந்திருப்பவை. அவற்றின் குழு அடையாள அரசியலும் அதற்கேற்றார் போலவே செயல்படும். இப்போதைய அரசியல் நடைமுறையில் அவை தலித் எழுச்சியை ஆதரிப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. குஜராத் எழுச்சியை தமிழ்நாட்டிலிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் உரிமை ரீதியாக ஆதரிக்கின்றன. அங்குள்ள மார்க்சிய-லெனினிய அமைப்புகளைப் போல இங்குள்ள இடதுசாரி அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி ‘தலித் – மார்க்சிய’ விவாதத்தை நடத்தி வருகிறது.

ஆகஸ்டு 17 -ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய “மதச்சார்பின்மைப் பாதுகாப்பு மாநாடு” கவனத்தில் கொள்ள வேண்டும் ‘தலித் – இடதுசாரி – இஸ்லாமியர்’ ஒருங்கிணைவு ஏன் தேவை? என்பதை இம்மாநாட்டின் தீர்மானங்களில் விளக்கமாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்கு ஏற்ற திட்டமிடல் ஏதாகிலும் இடதுசாரி – இஸ்லாமிய அமைப்புகளிடம் இருக்கிறதா என்பதைப் பற்றிய பேச்சு எதுவுமில்லை. விடுதலைச் சிறுத்தைகளும் அப்படியொரு அரசியல் நிர்ப்பந்தத்தை அவர்களுக்குக் கொடுக்கவில்லை.

தலித் விடுதலை தனித்து சாத்தியமில்லாத போது கருத்தியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் ஒருங்கிணையலாம், விலகி நிற்கலாம். மறுப்போ, புறக்கணிப்போ, எதிர்பார்ப்போ இருந்ததில்லை. அப்படியிருந்தால் தலித் விடுதலைக்கான செயல்பாட்டில் சிறப்புத்தன்மை (Uniqueness) என்று எதுவுமே இருக்க முடியாது. இப்போதும் கூட குஜராத், உ.பி -யில் பேசுகிற இடதுசாரி, இஸ்லாமியர் ஒருங்கிணைவை தலித்துகள் நம்புகிறார்கள். இஸ்லாமியரின் மத அரசியலும், இடதுசாரிகளின் கோட்பாட்டு அரசியலும் அடிப்படையில் வெவ்வேறானவை. இரண்டும் வெவ்வேறு தளத்தில் இயங்கி வந்தாலும் காலம் கருதி ஒருங்கிணைய முற்படுகின்றன. அது சாத்தியமா? இல்லை அரசியல் ஆதாயம் சார்ந்ததா? என்பது ஒருபக்கம். அதை விட அரசியலுக்கும் அப்பாற்பட்டு தலித் விடுதலைக்கு அது எந்த வகையில் பயனளிக்கும் என்பதும் முக்கியம். அப்படியொரு செயல் திட்டம் இருந்தால் மனம் திறந்து வரவேற்கலாம். அப்படி எதுவுமில்லாமல் “பாஜக – இந்து – மதவாத” எதிர்ப்பை மட்டுமே குறுகிய கால அரசியலாகக் கொண்டிருந்தால் கருத்தியல் மற்றும் செயல்பாட்டுத் தளத்தில் ஏற்படும் கேள்விகளுக்கு இடதுசாரிகளும், இஸ்லாமியர்களும் பதில் சொல்ல வேண்டும். இந்த புரிதல் உருவானால் தேவையற்ற அடையாள அரசியல் மோதலையும், குழப்பங்களையும், தலித்துகளின் உழைப்புச் சுரண்டலையும், பொருளாதார – கால விரயத்தையும் தவிர்க்கலாம்.

தலித் எழுச்சியில், தலித் – இடதுசாரிகள்

குஜராத் எழுச்சிக்கு ஆதரவளிக்கும் மார்க்சிய-லெனினிய அமைப்புகள் தொடக்கத்திலிருந்து தலித்துகளுடன் இருக்கிறார்கள். வடக்கேயுள்ள இந்த அமைப்பின் முக்கியப் பொறுப்பில் தலித்துகளும், பழங்குடியினரும், பெண்களும் வலுவாக இடம் பெற்றிருக்கிறார்கள். இயற்கை மற்றும் கனிமவளப் பாதுகாப்பு, நிலம் சார்ந்தப் போராட்டங்கள், சாராய முதலாளித்துவ எதிர்ப்பு, அமைப்புசாராத் தொழிலாளர் நலன் போன்றவற்றில் இவர்களுக்குள் இணைந்த செயல்பாடுகள் இன்றுவரை நீடித்து வருகின்றன. இவர்களின் உறுதிப்பாட்டோடு மகாராஷ்டிர இடதுசாரிகளைக் கூட ஒப்பிட முடியும்.

ஆனால் தமிழக இடதுசாரிகளின் தலித் புரிதல் அப்படி உருவானதல்ல. மிகக்குறுகிய காலத்தில், தலித்துகள் கொடுத்த நெருக்கடியாலும், கடுமையான விமர்சனங்களாலும் ஏற்பட்ட‌து. அதுவும் கூட காந்தியின் அரிஜன சேவாசங்கத்தைப் போல தீண்டாமை ஒழிப்போடு நிற்கிறது. அம்பேத்கர் வைத்த விமர்சனத்தில் இருந்து புதியதொரு விவாதம் இன்னும் நம்புக்கையுடன் உருவாகவில்லை. அரசியல் ரீதியாக‌ விடுதலைச் சிறுத்தைகள் கடந்த காலத்தில் பரப்பிய விமர்சனங்களே இதற்கு போதுமானது. தற்போது மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகிப்பதால் ஒருவேளை சாதி ஒழிப்புக்கான கருத்தியலை இடதுசாரிகள் உள்வாங்கியிருக்கலாம். அதற்கான செயல் திட்டத்தை செயற்குழுவில் தீர்மானித்து, வேலைத்திட்டத்தை கூடுதலாக தீவிரப்படுத்தி இருக்கலாம். அண்மைக்காலமாக இடதுசாரிகள் தலித்துகளுக்காக முன்னெடுக்கும் வேலைகளைப் பார்க்கும்போது உணர முடிகிறது. இந்த நம்பிக்கையில் செத்தமாட்டைத் தூக்க மாட்டோம் என்பதோடு தலித் குடும்பத்துக்கு 5 ஏக்கர் நிலம், வேலை வாய்ப்பு, இலவசக்கல்வி, சுயமரியாதை, மனித உரிமைப் பாதுகாப்பு, துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரம், கார்ப்போரேட் கம்பெனிகளின் உழைப்புச் சுரண்டல், இட ஒதுக்கீடு என தலித் கோரிக்கைகளைப் பெற்றுத் தரும் போராட்டத்தில் இடதுசாரிகள் இறுதிவரை நிற்பார்கள் எனவும் எதிர்பார்க்கலாம். இதையும் களச்செயல்பாடு தான் தீர்மானிக்கும் என்பது வேறு விஷயம்.

ஆனால் “தலித் – இஸ்லாமியர்” ஒருங்கிணைவு அப்படி அமையுமா என்கிற பொதுப்புள்ளியை மனம் திறந்து விவாதிப்பது சிரமம். எனினும் கருத்தியல் ரீதியாகவும், செயல்பாட்டிலும் அதை வரையறுத்தாக வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அதற்கான முயற்சியை வட்டார – ஒன்றிய அளவில் கூட யாரும் முன்னெடுக்கப்படாத சூழலில் குஜராத் – உ.பி – தமிழ்நாடு அரசியலில் “தலித் – இஸ்லாமியர்” ஒருங்கிணைவைப் பேச முற்பட்டிருக்கிறோம். 

தலித் எழுச்சியில் உ.பி. தலித் அரசியல்

பாசாகேப் அம்பேத்கர் மகாசபா தலைவர் லால்ஜி பிரசாத் நிர்மல் ஆகஸ்டு 27 -ல் லக்னோவில் கூட்டிய மாநாட்டில் ஜிக்னேஷ் மெவானி உரையாற்றியிருக்கிறார். மெவானி ஆமாத்மியிலிருந்து வெளியேறிய பிறகு லக்னோவில் ஆற்றிய‌ உரை குஜராத் – உபி – தமிழ்நாட்டு அரசியலில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லால்ஜி மூலமாக “தலித் – ப‌ழங்குடியினர் – இஸ்லாமியர் – இடதுசாரிகள்” இடையே ஓர் அரசியல் ஒருங்கிணைவு உருவாகும் என இஸ்லாமியர் – இடதுசாரி தரப்பில் உறுதியாக நம்பப்படுகிறது. தமிழகத்தில் இருந்து இதற்கான தோழமையை வழங்குவதில் மாறுபட்ட கருத்து எதுவுமில்லை. வழக்கம்போல‌ திராவிட அமைப்புகள் மெவானி உரையிலிருந்து தங்களுக்குத் தேவையான “மனு எரிப்பு” கோரிக்கையை மட்டும் உருவிக் கொண்டு தலித் அரசியல் கோரிக்கைகளை நிராகரித்துப் பிரச்சாரத்தை கொண்டு செல்வ‌து ஆரோக்கியமானதல்ல. அதே சமயம் இவர்களிடம் தலித் அரசியலுக்காக வேறெந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பது அறிந்தது தான்.

லால்ஜி முன்னெடுத்திருக்கிற அரசிய‌ல் திட்டமிட்ட திசை நோக்கிச் செல்ல வேண்டும். டிசம்பர் 6 -ல் ஜெய்ப்பூரில் நிறைவடைய இருக்கும் பேரணி குஜராத்தில் மொழிய‌ப்பட்ட கோரிக்கைகளில் சிலவற்றையாவது பெற்றுத் தருவதற்கான நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். இதில் தோழமை கொண்டுள்ளவர்களின் அரசியல் நம்பகத் தன்மையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மெவானியை ஒரு கட்சியின் தலைவராக்குவதற்கு தோழமை கட்சிகள் தீவிர முனைப்பைக் கொடுக்கலாம். அது தான் அவர்களுக்கும் சாதகமானது. அதிலிருந்து விடுபட்டு கட்சி அரசியலுக்கும், இயக்கத்தின் தலித் அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டு செயல்பட வேண்டியிருக்கிறது.

லக்னோவில் மாநாட்டைக் கூட்டிய லால்ஜி சாதாரண ஆளும் கிடையாது. பிரதமர் மோடி ஜனவரி 23 -ல் அம்பேத்கர் மகாசபாவை பார்வையிட்டபோது லால்ஜி 3 அடி உயர அம்பேத்கர் சிலையை பரிசளித்து வழியனுப்பியதை மறந்து விட முடியாது. ஏப்ரல் 14 -ல் ராஜ்நாத் சிங்கை அழைத்து இதே லக்னோவில் அம்பேத்கருக்கு விழா எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை இன்னமும் காத்திருப்பில் இருக்கிறது. அந்த லால்ஜி தான் இப்போது லக்னோ தலித் எழுச்சி மாநாட்டிற்கு ஜிக்னேஷ் மெவானியை அழைத்திருக்கிறார். எனினும் அவரது அரசியல் மாற்றம் முனைப்புடன் முன்னேறும் என நம்பலாம்.

இந்த சூழலில் ஏன் பகுஜன் சமாஜ் கட்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது புரியவில்லை. இடதுசாரிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அவ்வளவு ஆபத்தானவர்களா என்பது புரியவில்லை. லால்ஜிக்கு கொடுத்த முக்கியத்துவம், மாயாவதிக்கு கொடுக்கப்படவில்லை. தற்போதைய இஸ்லாமியர் அரசியலுக்கு நெருக்கமானதே பகுஜன் சமாஜ் கட்சி தான். காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தை முன்னிறுத்தி விட்டால் உ.பி. பிராமணர்கள் ஆதரிப்பார்கள் என கனவு காண வேண்டாம் என பழைய நட்பைப் புதுப்பித்துக் கொண்டது உண்மை தான். ஆனால் பெரும்பாண்மை தலிதுகளின் கட்சி அது. 2017 ல் உ.பி அரசியலில் அக்கட்சியை எளிதாக புறக்கணித்து விடவும் முடியாது.

சட்டமன்ற தொகுதிகளை பகுஜன் சமாஜ் கட்சி பணத்துக்கு விற்கத் தொடங்கி விட்டது என விமர்சித்து அதன் மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மௌரியாவும், ஆர்.கே. சௌத்ரியும் கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு, ஆகஸ்டு 10 -ல் காங்கிரசிலிருந்து வெளியேறிய 3 முஸ்லிம் எம்.எல்.ஏக்களும் (நவாப் காசிம் அலிகான், முஸ்லிம் கான், தில் நவாஸ் கான்), அதேபோல சமாஜ்வாடி கட்சியிலிருந்து வெளியேறிய 1 முஸ்லிம் எ.எல்.ஏ -வும் (நவாசிஸ் நவாஷ்) பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தது இஸ்லாமியர் மத்தியில் கவனத்தை ஈர்த்திருக்கிற‌து. கட்சியின் பொதுச் செயலாளர் நஸிமுதின் சித்திக் லக்னோவில் ஆற்றிய உரை இதற்கு கூடுதல் பலம்.

ஆகஸ்டு 20 -ல் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆக்ராவில் ஆற்றிய உரையில் அவரது அரசியல் தெளிவாக வெளிப்படுகிறது. மதச்சார்பற்ற கட்சி என சொல்லப்படும் காங்கிரஸ் உ.பி -யில் கடந்த 37 ஆண்டுகளில் தலித்துகளுக்காக எதையும் சாதிக்கவில்லை. அதேசமயம் மதவாதக் கட்சியான பாஜக -வையும் விடவில்லை. இடஒதுக்கீட்டை ரத்து செய்யத் துடிக்கும் பாஜக தேர்தல் அறிக்கையில் சொன்ன ஏழைகளுக்கு உணவு தானியம், கறுப்புப் பணமீட்பு போன்றதைச் செய்யாமல் பணக்காரர்களின் கடனைத் தள்ளுபடி செய்கிறது, தொழிலதிபர்களுக்கு சலுகைகளை வாரி இறைக்கிறது என வெளுத்து வாங்கினார். மாயாவதியை இழித்துப் பேசிய பாஜக துணைத்தலைவர் தயாசங்கர் நீக்கப்படிருந்தும் அவரது பேச்சில் கோபம் இன்னும் குறையவில்லை. இந்த அரசியல் சூழலை மெவானியும், லால்ஜியும், இடதுசாரிகளும், இஸ்லாமியர்களும் தவிர்த்து விட்டு உ.பி. அரசியலில் எப்படி ஒருங்கிணைவார்கள் என்பதில் தெளிவு வேண்டும். தமிழ்நாட்டு தலித் ஒருங்கிணைவுக்கு இது முற்றிலும் முரணாக இருக்கிறது.

தலித் எழுச்சியில், தலித் – இஸ்லாமியர் புரிதல்

தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகளின் மாநாட்டு அறிக்கையாக இருந்தாலும், உ.பி -யில் மாயாவதி அல்லது லால்ஜி நிர்மல் ஆகியோரின் அரசியல் யுக்தியாக இருந்தாலும் “மதவாத எதிர்ப்பு – மதச்சார்பின்மைப் பாதுகாப்பு” என்பது பிரதானமாக முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. செத்தமாட்டைத் தூக்க மாட்டோம் என்பதோடு தலித் குடும்பத்துக்கு 5 ஏக்கர் நிலம், வேலை வாய்ப்பு, இலவசக்கல்வி, சுயமரியாதை, மனித உரிமைப் பாதுகாப்பு, துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரம், கார்ப்போரேட் கம்பெனிகளின் உழைப்புச் சுரண்டல், இட ஒதுக்கீடு என தலித் கோரிக்கைகளைப் பெற்றுத் தருவது ஒரு ப‌க்கம் இருந்தாலும் “மதவாத எதிர்ப்பு – மதச்சார்பின்மைப் பாதுகாப்பு” என்கிற அரசியலிலும் தெளிவு தேவைப்படுகிறது. ‘தலித் – இஸ்லாமியர்’ ஒருங்கிணை தீர்மானிக்கும் அரசியல் புள்ளிகளில் இதுவும் ஒன்று.

தலித் அரசியலுக்கு பரந்துபட்ட பன்முக அரசியல் கோரிக்கைகள் இருக்கின்றன. சாதியை மிஞ்சிய பல அடையாளங்களை அவை மீட்டுருவாக்கியிருக்கிறது. சாதியைத் தவிர்த்து பல அடையாளங்களை அவை கையிலெடுத்ததாலேயே தலித் சாதிகள் என்கிற புள்ளியில் ஒருங்கிணைய முடியாமலும் இருக்கின்றன. சாதி எதிர்ப்பு என்பது பிரதானமான அடையாளம். அது மட்டுமல்ல சாதி ஒழிப்பும், தலித் அரசியலுக்கும் அப்பாற்பட்டு அது எல்லாவற்றையும் பேசியிருக்கிறது. அம்பேத்கரின் எழுத்து – பேச்சு மற்றும் அரசியல் நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டால் அதன் முக்கியத்துவம் புரியும்.

ஆனால் இஸ்லாமியர்களின் அரசியல் அப்படி இல்லை. சூழல் சார்ந்து தலித்துகளுடன் ஒரு அரசியல் தோழமை விரும்புகிறது. இன்னொரு பக்கம் சுனாமி, இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் பாதிக்கப்பட்ட தலித்துகளை மீட்படையச் செய்ததில் அரசு மற்றும் கிறிஸ்தவ, தலித்திய அமைப்புகளை விட இஸ்லாமியக் குழுக்களின் ஆதரவுக்கரம் மதிப்பிட முடியாத பங்களிப்பைச் செய்திருக்கிறது. ஆனால் அது மட்டுமே ஓர் ஒருங்கிணைவை உருவாக்கிடுமா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

கடந்த கால வரலாற்றை எடுத்துக் கொண்டால் இஸ்லாமியரின் எழுச்சியில் அவர்களின் கோரிக்கைகள் தான் பிரதானமாக பேசப்பட்டிருக்கிறது. சாதி ஒழிப்புக்காகவோ, சாதிய ஆணவக்கொலை போன்ற தலித் வன்கொடுமைகளுக்கு எதிராகவோ தலித்துகளுக்காக ஒரு செயல்திட்டம் தனியாக முன் வைக்கப்பட்டதில்லை. குறைந்த பட்சம் டிசம்பர் 6 -ல் கூட அம்பேத்கரை வலிந்து தான் பேச வேண்டியிருக்கிறது.

 

மாறாக, கொஞ்சம் தேசப்பாதுகாப்பு, நாட்டுப்பற்று என்பது பேசப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு காஷ்மீர் எழுச்சியை எடுத்துக் கொள்ளலாம். காஷ்மீரில் தொடரும் வன்முறைக்கு எதிராக குடிமைச் சமூகங்களின் ஆதரவு பேச்சளவில் மட்டுமே இருந்து வரும் சூழலில் காஷ்மீர் இஸ்லாமியப் பெண்களின் எழுச்சி உலக மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஒருவேளை எதிர்காலத்தில் அது மனித உரிமைப் பிரகடனமாகத் தீவிரமடையலாம். இதில் தலித் – இஸ்லாமியர் ஒருங்கிணைவை விரும்பும் தலித் அமைப்புகள் கூட தங்களின் உறுதியான நிலைப்பட்டை காஷ்மீர் வன்முறைக்கு எதிராக முன்னிறுத்தவில்லை. எனினும் தலித் – இஸ்லாமியர் ஒருங்கிணைவை விரும்பும் சூழலில் காஷ்மீரில் உருவாகி வரும் அரசியல் எழுச்சி, தேசிய அரசியலாக்கப்படும்போது தலித் விடுதலைக்குப் பயனளிக்குமா என்கிற கேள்வியை ஏன் எழுப்பிப் பார்க்கக் கூடாது? தலித் எழுச்சியை இஸ்லாமியர் அரசியலுக்கு திருப்பும்போது, இஸ்லாமியர் எழுச்சியை ஏன் தலித் அரசியலுக்குப் பொருத்தக் கூடாது? என்கிற கேள்விகள் “தலித் – இஸ்லாமியர்” ஒருங்கிணைவை கருத்தியல் மற்றும் செயல்பாட்டு ரீதியாக வலுப்படுத்த உதவும்.

 

நிச்சயம் மத அடையாளத்தை உதிர்த்து விட்டு இஸ்லாம் அரசியல் தலித் கோரிக்கைகளைப் பேசப்போவதில்லை. தற்போதைய தலித் இணைவில் கூட “பாஜக – இந்து” மதவாத எதிர்ப்பு இருப்பதால் தான் இணைய முடிகிறது. ஆனால் அது குஜராத்தில் தலித்துகளின் கோரிக்கைகளைப் பெற்றுத் தர வழிவகுக்குமா? என்றால் நிச்சயம் அதற்கு வாய்ப்பு மிகக்குறைவு. அதையும் கடந்து அது சாத்தியமாகும் என்றால் “மதச்சார்பின்மை – மதவாத எதிர்ப்பு” என்பதில் புரிதல் தேவைப்படுகிறது. ஆகஸ்டு 17 -ல் விடுதலைச் சிறுத்தைகள் வைத்த மாநாட்டுக் கோரிக்கையில் மதச்சார்பின்மை பாதுகாப்பு தான் பிரதானமாக பேசப்பட்டிருக்கிறது. மதவாத எதிர்ப்பு என்பது இரண்டாம் பட்சம் தான். அப்படியானால் குஜராத்தில் வைக்கப்படிருக்கிற தலித் கோரிக்கையை நிறைவேற்ற, தலித் – இஸ்லாமியர் ஒருங்கிணைவுக்கு மதச்சார்புள்ள இஸ்லாமியரை விட, (Religious Islam) மதச்சார்பற்ற இஸ்லாமிய சக்திகள் (Secular Islam) தான் தேவைப்படுகின்றன‌. தலித் கோரிக்கைகளை ஒரு நீண்ட கால செயல் திட்டமாக முன்னெடுத்துச் செல்ல இவர்களால் மட்டுமே முடியும் (எ-டு. அஸ்கர் அலி, இர்ஃபான் போன்றோர்). வெறுமனே சிறுபாண்மை என்கிற இஸ்லாம் அரசியல் பொருளாதார உதவிக்கும், கட்சி அரசியலுக்கும் வேண்டுமானால் பயன்படலாம். தலித் அரசியல் வென்றெடுப்புக்கு உத்தரவாதம் அளிக்குமா என்பதில் புரிதல் வேண்டும். இல்லையேல் அறவழியில் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிற குஜராத் தலித் எழுச்சிக்கு அது சிக்கலாக அமையும். அல்லது வெறும் கட்சி அரசியலுக்குள் அது கொண்டு போய் நிறுத்திவிடும்.

அன்புசெல்வம், எழுத்தாளர்; ஆய்வாளர்.

தொடர்புக்கு : anbuselvam6@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s