தமுஎகசவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக பணியாற்றிய தோழர் திருவுடையான் (48) சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தனது சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு காரில் திரும்பி சென்ற போது, லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அவருடன் காரில் சென்ற அவரது சகோதரரும், ஓட்டுநரும் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திலேயே திருவுடையான் உயிரிழந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது.

“இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தோழர் திருவுடையான் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி வெகுஜன அமைப்புகளின் மேடைகளில் தமிழகம் முழுவதும் தனது அற்புதமான குரல் வளத்தால் செங்கீதங்களை இசைத்து மக்களைக் கவர்ந்த கலைஞன் தோழர் திருவுடையான்.

கட்சியின் சங்கரன் கோவில் நகரச் செயலாளராக பணியாற்றிய தோழர் திருவுடையான், தற்போது தமுஎகசவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். சிறந்த பாடகரும், இசைக் கலைஞனுமான தோழர் திருவுடையானின் அகால மரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் குறிப்பாக தமுஎகசவிற்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கும், கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழுவிற்கும், தமுஎகச தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்.

மக்கள் பாடகர் திருவுடையானுக்கு சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்ட சில அஞ்சலி குறிப்புகள்…

வண்ணதாசன்

கடந்த வயது அப்படியே தான் முடிந்தது.இந்த வயதும் அப்படியே தான் துவங்கி இருக்கிறது.

திருவுடையானை இழந்திருக்கிறேன்.

திருவுடையானுடன் இரண்டு நிமிடங்கள் கூடத் தனிப்படப் பேசியிருக்க மாட்டேன். எனக்குத் தெரிந்தவை எல்லாம் அவருடைய நெருக்கமான சிரிப்பு, பாடும் போது வெளியேயும் உள்ளேயும் அதிர்ந்தடங்கும் குரல், சதா தரையில் அமர்ந்து வாசிக்கையில் தபேலாவில் புரண்டாடும் அவருடைய விரல்கள்.

என் இரண்டு மூன்று மேடைப் பேச்சை அவரின் தபேலா வாசிப்பில் இருந்து துவங்கியிருக்கிறேன். திறவு கோல்களையும் திறப்புகளையும் எனக்குத் தந்தவை அவர் விரல்கள். அவரே அறியாத ஒரு அவர் என்னுடன் எப்போதும் இருந்திருக்கிறார்.

நிறையப் பேரை இப்படி இழக்கச் செய்கிற வாழ்வு, இப்படி இன்னும் சிலரையேனும் அடையச் செய்யுமா தெரியவில்லை.

இரா.நாறும்பூநாதன்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர் திருவுடையான். இளம் வயதிலிருந்தே இசை மீது ஆர்வம். கைத்தறி சேலைக்கு பார்டர் போடும் பேட் மேஸ்திரியாக இருந்த அவரது தந்தை பழனிச்சாமி, தனது மகனின் இசையார்வத்தை ஊக்குவித்தார். உள்ளூர் கோயில்களில் அந்தச் சிறுவனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. எல்லாமே பக்திப் பாடல்கள்தான். ஓவியத்திலும் நல்ல ஆர்வம் இருந்தது. வறுமை காரணமாக எட்டாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவுடன் நெசவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் கோயிலில் பாடிக்கொண்டிருந்த அவருக்குப் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களைக் கொடுத்துப் பாட வைத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கத்திடம் அழைத்து வந்தவர்கள் நாடகக் கலைஞர் மு.சு.மதியழகன், தாய்த் தமிழ்ப் பள்ளி நடத்திவரும் ஆசிரியர் சங்கர்ராம் ஆகியோர்.

திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 1993-ல் முதன்முதலாக, கலை இரவு மேடையில் பாடத் தொடங்கினார். விரைவில் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அவரது குரல் ஒலிக்கத் தொடங்கியது. காசி ஆனந்தன், ஏகாதசி, நவகவி, ரமணன் போன்றவர்கள் எழுதிய பாடல்களை முழுமையாக உள்வாங்கி, உணர்வுடன் பாடியவர் அவர். ‘தமிழா… நீ பேசுவது தமிழா?’, ‘பாடல் எடுத்துப் பாடுக மனமே’, ‘அன்பு மணம் கமழும் அறிவு மலர்ச் சோலையிலே’ போன்ற பல பாடல்களுக்குத் தனது குரலால் தனி வடிவம் தந்தார்.

அ. குமரேசன்

ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தனது ஒரு நிறுவனத்தின் பாடகராகப் பொறுப்பேற்க அழைத்தார். மாதாமாதம் பெரியதொரு தொகை வழங்குவதாகக் கூறினார்.

“நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கட்சியின் சங்கரன்கோவில் நகரச் செயலாளர். இந்த இயக்கப் பணிகளைத் தொடரவே விருமபுகிறேன். உங்கள் அமைப்பில் இணைய முடியாது, மன்னியுங்கள்,” என்று பணிவோடு சொன்னார் தோழர். சொந்தப் பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் செங்கொடி இயக்கத்தின் கானமாய் ஒலித்துவந்தார்.

முற்போக்கு மேடைகளின் முன்னணிப் பாடகராக மட்டுமல்ல முன்னுதாரணத் தோழராகவும் திகழ்ந்த திருவுடையானுக்கு எவ்விதம் அஞ்சலி செலுத்துவது?

சு. இரவிக்குமார்

இசை மனிதனுக்கு ஒரு பையன், இரண்டு பெண் குழந்தைகள்… பையன் கல்லூரியில், பெண்கள் (இரட்டையர்கள்) இப்போதுதான் +2 படித்துக் கொண்டிருக்கிறார்கள்… மனைவி, தம்பி, தம்பி குடும்பத்தினர், அம்மா , அப்பா எனச் சேர்ந்து வாழும் குடும்பம்.. அவர்களின் துயரம் நினைத்துப் பார்க்க முடியா அளவினது… இத்தனை வெள்ளந்தியாக ஒரு மனிதனை வைத்திருக்கும் குடும்பம் எத்தனை பண்பு மிக்கதாகவும், அன்பு மிக்கதாகவும் இருக்க வேண்டும்…? அன்பின் கூட்டுக்குள் மரணம் திணித்த வலி துயர்மிகுந்ததுதானே? யாரை யார் தேற்றுவது?