கருத்து சர்ச்சை சினிமா பெண்கள்

ஸ்ருதிஹாசனும், மலர் டீச்சரும் அடிமனதில் ஆழப் பதிந்திருக்கும் பெண் வெறுப்பும்

மோ. அருண்

மோ. அருண்
மோ. அருண்

ப்ரேமம் என்றொரு அரத பழசான படத்தை மலையாளத்தில் எடுத்து அது பெரும் வெற்றிப்படமாக அமைந்ததே எதிர்பாராத விபத்து. சில படங்களுக்கு அப்படி நல்ல விபத்துகள் நேர்வதுண்டு. அதனை தற்போது தெலுங்கிலும் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். மலர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தது கண்டும், அவரது உடல்மொழி, மலையாளத்தில் நடித்தவரின் உடல்மொழியோடு ஒப்பிடுகையில் மோசமாக இருக்கிறது என்றும் எழுதப்பட்ட பல பதிவுகளை நேற்றில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு படத்தை ஒரு மொழியில் பார்த்துவிட்டு, இன்னொரு மொழியில் பார்க்கும்போது அதே வகையான கதாபாத்திரங்கள், சம்பவங்கள், உடல்மொழியை ஏன் எதிர்பார்க்க வேண்டும். அதற்கு அந்த பழைய திரைப்படத்தையே பார்த்து விடலாமே. ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றால் அதனை டப் செய்து வெளியிடுவதுதான் ஒரே வழி. ஆனால் ஸ்ருதிஹாசனை மோசமான வசைச்சொற்களால் எழுதி செல்லும் நண்பர்களின் அடிமனதில் ஆழப்பதிந்திருப்பது பெண் வெறுப்பு எனும் மோசமான வெறி.

மலையாளத்தில் மலர் கதாபாத்திரத்தை செய்திருக்கும் நபர் ஆண்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கும் பெண் என்பவளுக்கான உடல்மொழியோடு, அதாவது ஆண்களின் கிளுகிளுப்பை, அல்லது ஆழ்மன பெண் ஈர்ப்பை ஒருவகையில் பொருத்திப் பார்க்க முடிகிறது. ஆனால் ஸ்ருதிஹாசன் நடிப்பில் அது இல்லை என்றவுடன் கோபம் உருவாகிறது. ஆண்களை எப்போதும் மகிழ்விப்பதுதான் பெண்களின் வேலையா. தங்களின் ஆண்மைக்கான எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை என்றவுடன் ஆழ்மனதில் பதிந்திருக்கும் ஆண் என்கிற திமிர் மேலேறி கதாபாத்திரம் என்பதை தாண்டியும் அந்த பெண்ணை மோசமான வசை சொற்களால் அர்ச்சிக்க சொல்கிறது.

இதில் சிலர் ஒருபடி மேலேபோய் பெண் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் ஆண் மகனை நடிக்கவைத்துவிட்டார்கள் என்று குமுறுகிறார்கள். எத்தனை கீழ்த்தரமான சிந்தனை. இதே போல் மகேஷ்பாபு நடித்த வேடத்தில் நடித்த விஜய்யையோ, சூர்யா நடித்த வேடத்தில் ஹிந்தியில் நடித்த அமீர்கானையோ இவர்களால் இத்தனை மோசமாக வசைபாட முடிந்ததா? ஏன் இதே படத்தில் ஆண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மலையாள கதாபாத்திரத்தின் முழு தன்மையை பூர்த்தி செய்துவிட்டாரா? அவரை ஏன் வசைபாடவில்லை.

பெங்களூரு நாட்கள் என்கிற படத்தில் ஆர்யாவும், பாபி சிம்ஹாவும் நடித்தபோது அவர்களுக்கு எதிராக இத்தனை தூரம் கீழ்த்தரமான கருத்துக்களை யாராவது எழுதியதுண்டா. அப்படி எழுதினால் அதுவும் கண்டனத்திற்குரியதே. ஆனால் அவ்வாறும் செய்யாமல் மௌனம் காத்தது ஏன்? இந்த படத்தில் ஒரு பெண் என்றதும் இத்தனை தூரம் கீழிறங்கி அவர் பற்றி மோசமாக எழுதத் தூண்டுவது எது? ஆண் என்கிற திமிரா? அல்லது ஆழ்மனதில் பதிந்திருக்கும் பெண் பெண்ணாக இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை மீறும் எதிர்பாலின செயலா?

ஒரு கதாபாத்திரத்தில் நீங்கள் எதிர்பார்த்தவாறு ஒரு நடிகை உடல்மொழியை வெளிப்படுத்த இயலவில்லை என்றால், அதனை நாகரீகமான முறையில் விமர்சிக்க எல்லாருக்கும் உரிமையுண்டு. ஆனால் கீழ்த்தரமான வார்த்தைகளில், மோசமான அநாகரீகமான வார்த்தைகளில் ஆண் என்கிற ஒன்றுக்கும் உதவாத ஒற்றை தகுதியோடு எழுதுவது கண்டிக்கத்தக்கது. இன்னும் சொல்லப்போனால், ஒரு மொழியில் எடுக்கப்பட்டு இன்னொரு மொழியில் மறு உருவாக்கம் செய்யப்படும் படத்தை அதன் முதல் பிரதியோடு ஒப்பிட்டுப் பார்ப்பது முட்டாள்தனமான செயல்.

முதல் பிரதியிலிருந்து எந்தெந்த வகையில் வேறுபட்டு, தனித்து நிற்க முடியும் என்கிற உந்துதலில்தான் படைப்பை மறுஆக்கம் செய்ய ஒரு கலைஞன் விழைகிறான். சில நேரங்களில் அது மோசமாக இருக்கலாம். அல்லது முந்தைய பிரதியை பார்த்தவர்கள் எதிர்பார்த்தவாறு இல்லாமல் இருக்கலாம். அதற்காக ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை பெண் என்கிற ஒரே காரணத்தால் வசைபாடுவது மோசமான முன்னுதாரணம்.

மோ. அருண், திரை செயல்பாட்டாளர். படச்சுருள் இதழின் ஆசிரியர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s