மோசமான ஆளுகை, ஆர்எஸ்எஸ்ஸின் சாதிவெறி – மதவெறி நிகழ்ச்சிநிரல் திட்டமிட்ட விதத்தில் முன்னகர்த்தப்படுவது, பிற்போக்கு ஆணாதிக்க மனோபாவம் ஆகியவற்றால், எம்எல் கத்தார் தலைமையிலான அரியானா பாஜக அரசாங்கம், ஏற்கனவே நம்பகத்தன்மை இழந்திருக்கிறது; இப்போது, இந்திய அரசின் அரசியல் சாசன அடிப்படையின் மய்ய கோட்பாடான, மதத்தை அரசியலில் இருந்து பிரித்து நிறுத்துவது என்ற மதச்சார்பின்மை கோட்பாட்டை வெளிப்படையாக மீறியுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று, ஜைன துறவி தருண் சாகரை சட்டமன்றத்தில் பேச அழைத்தது. தொழில்நுட்பரீதியாகச் சொல்வதென்றால், தருண் சாகர் உரை, சட்டமன்ற நிகழ்வுகளின் ஒரு பகுதி அல்ல. ஏனென்றால் சட்டமன்ற அமர்வுகள் முடிந்துவிட்டன. ஆனால், மாநிலத்தின் சட்டமன்ற வளாகத்துக்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேச ஒரு மதத் தலைவரை அழைப்பதன் மதரீதியான தாக்கங்களை, அப்படி எதுவும் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

இந்தப் பிரச்சனை பற்றிய விவாதங்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் நடக்கும் விவாதங்கள், நிர்வாண சாமியார், முழுவதும் உடைகளணிந்தவர்கள் மத்தியில் பேசுவது என்பதன் மீது கவனம் குவித்தன. தருண் சாகரின் ஆதரவாளர்கள், திகம்பர ஜைனர்களின் மதக் கோட்பாடு என்றும் பாரம்பரியம் என்றும் அதை நியாயப்படுத்தினர். இதை விமர்சனம் செய்பவர்கள், ஜைன பிரிவினரின் உணர்வுகளை காயப்படுத்துவதாக குற்றம் சுமத்தினர். இந்தியாவை வரையறுக்கும் மதரீதியான, கலாச்சாரரீதியான பன்மைத்தன்மை தொடர்பாக கூருணர்வற்ற அணுகுமுறை இருப்பதாகக் கூட குற்றம் சுமத்தினர். ‘நிர்வாண சாமியார்’ கோணத்தில் இருந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்கள், ஜைன மரபை விமர்சனம் செய்யவில்லை. மோடி அமைச்சரவையின் கலாச்சார அமைச்சர் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வருபவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு பற்றி விதிகள் முன்வைத்திருக்கிற பின்னணியில், இப்போது சங் பரிவாரால் சமூகத்தின் மீது மூர்க்கத்தனமாக முன்னகர்த்தப்படும், மதத்தின் பெயரால் ஆணின் நிர்வாணத்தை அங்கீகரித்து, ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களை ஒடுக்கும், பழைமைவாத மனப்போக்கின் போலித் தன்மையையே கேள்விக்குள்ளாக்கியிருந்தார்கள்.

அரசுக்கு மதமில்லை, அல்லது எந்த மதத்தையும் அது முன்னகர்த்துவது இல்லை என்ற மதச்சார்பின்மை கோட்பாடு, அரசியல் சாசன ரீதியான தகுதி வெளிப்படையாக மீறப்பட்டிருப்பதுதான் இந்த விசயத்தில் முக்கியமான பிரச்சனை. தருண் சாகரை சட்டமன்றத்தில் உரையாற்ற அழைப்பதில் தவறில்லை என்றால், பிற மதபோதகர்களையும் அழைப்பதில் என்ன தவறு? ‘மதரீதியான சமன்பாட்டை’ உருவாக்க பிற மத போதகர்களையும் அழைப்பது என்பதை அரியானா அரசாங்கம் கொள்கையாக்குகிறதோ, இல்லையோ, மதச்சார்பின்மை கோட்பாடு ஏற்கனவே மீறப்பட்டுவிட்டது; இந்த மீறலை இந்திய ஜனநாயகம் புறந்தள்ளவோ, மன்னிக்கவோ கூடாது. அரியானாவுக்கு முன்பு, தருண் சாகர், பாஜக ஆளும் இன்னொரு மாநிலமான மத்தியபிரதேசத்தின் சட்டமன்றத்திலும் உரையாற்றியுள்ளார். டில்லி சட்டமன்றத்தில் பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையில், இசையமைப்பாளரும் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளருமான விஷால் தத்லானி தருண் சாகரை அழைத்தது பற்றி கேள்வி எழுப்பியபோது, அவர் சங் கும்பல்கள், ஜைன பிரிவினர் மத்தியில் இருந்தும் எதிர்ப்பைச் சந்தித்தது மட்டுமின்றி, ஆம் ஆத்மி கட்சியாலும் கைவிடப்பட்டார்; அவருக்கு கட்சியில் இருந்து எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது; ஆம் ஆத்மி கட்சியுடன் அவருக்கு இருக்கும் வெளிப்படையான அரசியல் உறவையும் அவர் துண்டித்துக் கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டது.

மோடியின் செல்லக் கருத்தான ‘பெண் குழந்தைகளை காப்பது’ என்பது பற்றியே தருண் சாகர் பேசியதாகத் தெரிகிறது. ஆண் – பெண் விகிதாச்சாரத்தில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதே பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் என்று தருண் சாகர் சொன்னார். பாலியல்ரீதியான துன்புறுத்தலும் வன்முறையும், தாக்குதல்கள், ஆணாதிக்க சமூகத்தில் சமூக அதிகாரத்தின் வெளிப்பாடு என்று பார்ப்பதற்குப் பதிலாக, இளைஞர்கள் மத்தியில் நிலவுகிற பாலியல்ரீதியான கட்டுப்பாடுகள், பாலியல்ரீதியான ஆர்வம் ஆகியவையே இவற்றுக்குக் காரணம் என்ற தவறான ‘பொதுப்புத்தி’ வாதத்தையே அவர் முன்வைத்தார். ஆண் – பெண் விகிதாச்சாரத்தில் இருக்கும் பிரச்சனைக்கு வேடிக்கையான தீர்வு கூட சொல்லப் பார்த்தார்; தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பெண் குழந்தைகள் இருப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் திருமண ஏற்பாட்டுக்கு முன் ஆணின் வீட்டில் பெண் குழந்தை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சொன்னார். மேலும் சில வெளிப்படையான அரசியல் பிரச்சனைகள் பற்றி பேசியதோடு, தீவிரவாதத்துக்கு கண்டனம் தெரிவிப்பது என்ற பெயரில் பாகிஸ்தானை, இசுலாமியரை குற்றம் சொல்வதிலும் ஈடுபட்டார்.

மதத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவு பற்றி அவர் விவரித்ததுதான் அவரது உரையில் முக்கியமானது. இவை இரண்டுக்கும் இடையிலான உறவு, மனைவிக்கு கணவன் பாதுகாப்பு அளிப்பது, மனைவி கணவனின் ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கு கீழ்ப்படிவது என்ற, கணவன் – மனைவி உறவு போன்றது என்றார். இந்த ‘ஒழுங்குக் கட்டுப்பாட்டு வரையறைக்கு’ வெளியே மனைவி (அரசியல்) மதம் பிடித்த யானை போல் இருப்பார் என்றும் அதனால் அதைக் கட்டுப்படுத்துவது சிரமம் என்றும் சொன்னார். இந்த ஒப்புமை மூலம், திருமணம், குடும்பம் ஆகியவை பற்றிய ஆணாதிக்கக் கருத்துக்களுக்கு அடிப்படையாக இருக்கும் பெண்கள் மீதான வெறுப்பு ஆழப் பொதிந்துள்ளதையும், அரசியலையும் மதத்தையும் பிரித்து வைப்பது என்ற மதச்சார்பின்மை கோட்பாடு பற்றி ஆழப்பொதிந்துள்ள அதிருப்தி கொண்டுள்ள அரசியல் பற்றிய இறையியல் கருத்தையும் சாகர் ஒரே சமயத்தில் அம்பலப்படுத்துகிறார்.

ஆர்எஸ்எஸ்ஸின் இந்து ராஜ்ஜியம் பற்றிய கனவுகளின் மய்யமான விசயங்களைப் பற்றி ஒரு ஜைன துறவி பேசுகிறார் என்பது, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற அரசியல் சாசன கோட்பாடுகளை, மதரீதியான சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கிற அதேநேரம் ஒரு பிரஜையின் தனிப்பட்ட மதரீதியான விருப்பங்களில் இருந்து அரசை, ஆளுகையை முழுமையாக விலக்கி நிறுத்தும் கருத்தை, முழுமையாக சீர்குலைத்து மறுதலித்து, இந்தியா மீது ஆர்எஸ்எஸ் திணிக்க விரும்பும் குடும்பங்கள் அரசியல் பற்றி போதிக்கிறார் என்பது பாஜகவுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவே இருக்கிறது. இந்தியாவில் உள்ள ‘சிறுபான்மை’ மதங்களில் ஜைன மதம் சங் பரிவாருக்கு நெருக்கமானதாக பார்க்கப்படுகிறது. அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத சமூக உட்செயல்பாடுகள், சாதிய சமன்பாடுகள் ஆகிவற்றையே பிரதான நீரோட்ட அரசியல் எப்போதும் சுற்றி வருகிறது என்றால், பாஜக தனது சொந்த மாதிரி ‘சமூக – மத உட்செயல்பாடுகளை’ அறிமுகப்படுத்துகிறது; வாக்கு வங்கி அரசியல் என்ற பெயரில் இசுலாமியர்களை அந்நியப்படுத்துகிறது. ஜைன பிரிவினரை ஈர்ப்பது, விளையாட்டுகளை ஊக்குவிப்பது என்ற பெயரில் தேரா சச்சா சவுதாவுக்கு ‘மாநில அதிகாரத்தில் நிதி ஒதுக்கி’ அரியானா விளையாட்டு அமைச்சர் அறிவித்திருப்பது ஆகியவை அனைத்தும் இந்த காவி அரசியலின் ஒரு பகுதியே.

நன்றி: Marxist Leninist Articles and Publications