கோயில்களில், மசூதிகளில் பெண்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். சனாதனவாதிகளும் பெண்ணியவாதிகளும் ஒரு புறம் இதுகுறித்த விவாதங்களில் ஈடுபட்டிருக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ஆன்மீகத்திலிருந்து அறிவியலுக்கு திரும்புங்கள் என்கிறார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில்,

“இந்து பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்வதைப் பற்றி என்னிடம் ஒருவர் கேட்டார். என்னைப் பொருத்தவரை, பெண்கள் உள்பட அனைவரும் கோயில், மசூதிக்குச் சென்று நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும்,  அறிவியல் நிறுவனங்கள், பொறியியல், மருத்துவ கல்லூரிகளுக்குப் போக வேண்டும். அதிக அளவில் அறிவியலும் அறிவியல் சிந்தனையும் குறைந்த அளவில் மதச் சிந்தனையுமே இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவை” என்று தெரிவித்துள்ளார் மார்கண்டேய கட்ஜு.

முன்னதாக, மகாராஷ்டிர சனி பகவான் கோயிலுக்கும் ஹாஜி அலி தர்காவில் பெண்கள் ஆலய நுழைவு போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றனர். இந்நிலையில் அடுத்த இலக்கு சபரிமலையில் பெண்களுக்கு வழிபாட்டு உரிமை பெற வேண்டும் என போராட்டம் நடைபெறும் (சட்டரீதியான வழக்கு நடந்துகொண்டுள்ளது) என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையோட்டி கேரளத்தில் பெண்கள் சிலர், சபரிமலை கோயில் ஒழுங்கு விதிகளை மீற விரும்பவில்லை. எங்களுக்கான வயதுவரும்வரை நாங்கள் காத்திருப்போம் என்ற பிரச்சாரத்தை முகநூலில் தொடங்கியுள்ளனர். முகப்பில் உள்ள படம் அதையொட்டியதே…