ஸ்ரீரசா

2016 ஆகஸ்டு 29ம் தேதியின் காலைப் பொழுது ஒரு கலைஞனை விழுங்கிக் கொண்டா விடிய வேண்டும்?

ஓர் அகால நேரத்தில், வாடிப்பட்டியின் நெடுஞ்சாலையோரம் மரணத்தின் பாடலால் இசைக்கப்பட்ட அபூர்வக் கலைஞன் திருவுடையான். தானே பாடுவான், அருமையாகத் தபேலாவோடு விரல்களை விளையாட விடுவான். தபேலா வாசித்துக் கொண்டே பாடுவான். பழம பாடல்களின் தீராக் காதலன். புதிய பாடல்களுக்கு மெட்டமைப்பதிலும் வல்லவன்… திரையிசையிலும் தலைகாட்டியவன்.. ஆனால் மக்கள் அரங்க மேடைகள் தோறும் தனித்துவத்தோடு தன் குரலைப் பரவ விட்டவன். இசையின் மீதும், தமிழ் மொழியின் மீதும், தமுஎகச, மார்க்சிஸ்ட் கட்சியின் மீதும், தோழர்கள் மீதும் தீராத அன்பைப் பொழிபவன். ஓர் ஓவியனாகத் துவங்கி இசைக்கலைஞனாக நிலைத்தவன். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வண்ணத்துண்டு என்று தன் பண்பாட்டை வடிவமைத்துக் கொண்டவன்… எல்லாவற்றுக்கும் மேலாய்ப் பார்க்கும் போதெல்லாம் புன்னகையோடும் பாசத்தோடும் அன்பைப் பொழிகிற மனிதன்…

திருவுடையானைப் பணமும் புகழும் என்றும் மயக்கியதில்லை. இளையராஜா இசையில் பாடியபோதும் கூட, சென்னைக்கே வந்து விடுங்கள் என்று அவர் அன்போடு அழைத்தபோதும், மக்கள் மேடைகளில் பாடுவதே தன் மனசுக்கும் இயக்கத்துக்கும் உகந்தது என்று எளிமையாகப் புன்னகைத்துக் கொண்டே சொன்னவன். கைகொள்ளாப் பணம் தருகிறேன் என்று பல இயக்கத்தவர்கள் அழைத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தன் பற்றுறுதியை விட்டுக் கொடுக்காமல் இயக்கப் பணியாற்றியவன்.

யார் எத்தனை கிண்டல் செய்தாலும், தன் அன்பான புன்னகையையே அதற்குப் பதிலாகப் பரிசளிப்பவன். தட்டி எழுதும் வேலையோடு, தபேலாவைத் தட்டி முழக்கித் தன் வெண்கலக் குலரால் மக்கள் முன் கசிந்துருகுபவன். தமிழ் மீதான அவனது காதல் அபூர்வமானது. இடதுசாரி இயக்கத்தவர்களுக்கு மொழி குறித்த அக்கறை இல்லை என்று புழுதிவாரித் தூற்றுவோர்கள், திருவுடையானைக் கண்டிருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டிருப்பர். தமிழின் பெருமை சொல்லும் பாடல்களை எங்கிருந்தும் அவன் எடுத்துக் கொண்டு தன் குரலால் மெருகேற்றிப் பாடத் தயங்கியதில்லை. ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தனின் பாடலான “தமிழா.. நீ பேசுவது தமிழா….?” என்கிற பாடலை இடதுசாரி மேடைகளில், கலை இரவு மேடைகளில் அவன் முழங்கத் தவறியதில்லை.

மத வெறிக்கு எதிராக, சாதி வெறிக்கு எதிராக, பெண் விடுதலை, பாட்டாளி வர்க்க விடுதலை என்று அவனது பாடற்களங்கள் மானுட விடுதலையிலிருந்து எப்போதும் வழி தவறியதில்லை.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்த குடும்பச் சூழலோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாலும், “பாடல் எடுத்துப் பாடுக மனமே” என்று தன் தபேலாவிலிருந்து இசை கிளப்பும் மனம் அவனுக்கு வாய்த்திருந்தது.

எவரிடமும் மரியாதைக் குறைவாக நடக்க அவனுக்குத் தெரியாத அபூர்வப் பிறவி. நல்ல பாடல்கள், ஓவியங்கள், இசை நயங்கள் என்று எங்கு கண்டாலும் மனதார மகிழ்ந்து பாராட்டும் பன்முகக்கலைஞன் அவன்.

தூரிகை பிடித்து எழுதும் போதும், தபேலாவில் விரல்கள் தவழும் போதும், தாராபாரதியின் “வெறுங்கை என்பது மூடத்தனம், உன் விரல்கள் பத்தும் மூலதனம்” என்று அவன் பாடுகிற பாடலுக்குத் தனி அர்த்தம் இருந்த்து.

அவனது சகபாடகன் கரிசல் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்த்து, அவனது துணைவியார் உடல் நலமில்லாதவர் என்பதும், தன் மூன்று குழந்தைகளையும் படிக்க வைக்க அவரது ஒற்றை வருமானத்தையே நம்பியிருந்தான் என்பதுவும். ஃபிளக்ஸ் தொழில் நுட்பத்தின் வருகை அவன்போன்ற போர்டு ஓவியர்களின் வாழ்வில் விளையாடியதுபோல அவர் வாழ்விலும் விளையாடியுள்ளது. அதன் பின்னர் பெரும் பகுதியும் அவர் இசைக்கச்சேரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே தனது குடும்ப வண்டியை நகர்த்தியுள்ளான்.

அவனுக்கு இரட்டைப் பெண்களாய்ப் பிறந்த அன்பரசிக்கும், அறிவரசிக்கும், மகன் பழனி பாரதிக்கும், மனைவி சங்கர ஆவுடையம்மாளுக்கும் யார் ஆறுதல் சொல்லித் தேற்றுவது.

ஸ்ரீரசா, கவிஞர்; ஓவியர்.