மனிதர்கள் தங்களுடைய அழுக்குகளை மூழ்கி தொலைக்கும் கங்கை நதியில் வாழும் டால்ஃபின்கள் அந்த அழுக்குகளால் (மாசுபடுதலால்) பார்வையிழப்பை சந்தித்துக்கொண்டிருப்பதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி ஒப்புதல் அளித்துள்ளார்.

புதன்கிழமை இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, கங்கை நதி மாசுபடுவதால், அந்த நதி நீரில் வாழும் அறிய வகை டால்ஃபின்கள் அழிந்துவருவதாக குறிப்பிட்டார். இதுகுறித்து பின்னர் விளக்க அறிக்கை வெளியிட்ட நீர் வளத்துறை அமைச்சகம், அமைச்சர் சொன்னது உண்மை என்றாலும், அது மட்டுமே காரணம் அல்ல என்று விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் பொருட்டு ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாசுபடுவதால்தான் டால்ஃபின்கள் பார்வை இழப்பை சந்திக்கின்றன என்று அறிவியல்பூர்வமான ஆய்வுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அந்த விளக்க அறிக்கைச் சொல்கிறது.

இந்நிலையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அறிவியலாளர்கள் அளித்த விளக்கத்தில், டால்ஃபின்களின் பார்வை இழப்புக்கு கங்கை நீர் மாசடைந்திருப்பதும் முக்கிய காரணம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.