ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்
ஜி. கார்ல் மார்க்ஸ்

காதல் என்ற பெயரில் அடுத்தடுத்து பெண்கள் மீதான நான்கு வன்முறைகள். அதில் இரண்டு அப்பட்டமான கொலைகளாக முடிந்திருக்கிறது. முதலில் இவற்றை ‘காதல் கொலைகள்’ என்று வகைப்படுத்துவதே தவறு. இதில் காதல் என்பதே கிடையாது. நமது ‘இளைஞர் திரள்’ காதல் என்று நம்பும் ஒன்றின் உள்ளீடற்ற மூர்க்கமே இத்தகைய கொலைகள்.

முன்பெல்லாம் காதல் சார்ந்த தற்கொலைச் செய்திகள்தான் காணக்கிடைக்கும். இப்போது அவை குறைந்திருக்கின்றன. இதன் பொருள் தற்கொலைகள் குறைந்துவிட்டன என்பதல்ல. அவை காதலித்தவளின் மீதான வன்முறைகளாக மாறியிருக்கின்றன என்பதே. இந்த மாற்றத்தின் பின்னுள்ள காரணிகள் என்ன என்பதை ஆராய்வதன் மூலமே இதிலிருந்து வெளியேறுவதன் வழியை நாம் புரிந்துகொள்ள முடியும்.

காதலில் தற்கொலை செய்துகொள்பவர்கள் மிகுதியும் ஆண்களாகவே இருந்தார்கள். அதில் ஒருதலைக்காதல், நிறைவேற்றிக்கொள்ள முடியாத காதல் இரண்டுமே இருந்தது. ஒத்த காதல்கள் திருமணமாகக் கனியாததற்கு குடும்பம், வேலை, சாதி என்று நிறைய காரணங்கள் இருந்தன. ஆனால் காதல் என்ற உணர்வுக்குப் பின்னால் தன்னை தேவதூதனாக உணர்ந்து கொள்ளும் வாய்ப்பை அப்போதைய காதல்கள் ஆணுக்கு வழங்கின. அப்போது இருந்த சமூக மனநிலைக்கும், அதைப் பிரதிபலித்த சினிமாக்களுக்கும் இதில் பங்குண்டு.

தான் காதலித்த பெண்ணை விட்டுத்தருவதற்கும் அந்த காதல் திருமணத்தில் முடியாமல் போவதற்கும் புறக்காரணிகளே பெரிதும் காரணமாக இருந்தன. இந்த புறக்காரணிகளின் அழுத்தம் காதலிக்கும் இருவரின் அக முறைபாடுகளை கூர்மையடையாமல் பார்த்துக்கொண்டது. இந்த அகமுரண்பாடுகளை சகித்துக்கொண்ட அல்லது பொறுத்துக்கொண்ட ஒருத்தி  காவியக்காதலி ஆகிறாள். எக்காலத்திலும் இவன் மீது காதல் கொண்டவள் அவள். தனக்கு தொடர்பில்லாத, தன்னால் வெற்றி கொள்ள இயலாத காரணங்களின் பொருட்டு தனது காதலை தியாகம் செய்தவள். ஆக அவள் ஒரு அபலை. ஆனாலும் தனது வாழ்நாளெல்லாம் தன்னைக் காதலித்தவனை நெஞ்சில் சுமந்தபடியே குழந்தைகள் எல்லாம்  பெற்று கணவனுடனும் ஒரு புனிதமான வாழ்க்கையை வாழ்பவள். அவளது தேவதை உருமாற்றம் என்பது இத்தகைய கருத்தாக்கங்களால் நிலைபெற்ற ஒன்று. இதைக் கொண்டாடவோ, விதந்தோதவோ யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை. அவளது முன்னால் காதலன் உட்பட.

இந்த வகையில் ‘காதல் தோல்வி’ என்ற சொல்லுக்கு ஒரு ‘புனித அடையாளத்தை’ அவனது காதலி வழங்குகிறாள். அதனால்தான் காதலில் தோற்ற ஒரு ஆணின் மனம் அவளைத் தொழுதபடியே இருக்கிறது. பழைய நினைவுகளை நினைத்து அரற்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதன் பின்னால் ஒரு அழுத்தமான கோரிக்கை இருக்கிறது. அவன் நிர்ணயித்த வரம்பு இருக்கிறது. அது என்னவென்றால் காதல் குறித்த இந்த ‘ஆண்மைய மனநிலையின்’ புனிதத்தைக் காக்கவேண்டிய பொறுப்பு அந்த காதலிக்கு இருக்கிறது. இதைக் கூர்ந்து கவனித்தால் இங்கே செயல்படுவது மிக நேரடியான ஒரு ‘பெண் அடிமைத்தனம்’. அதை விரும்பும் ஒரு ஆணின் மனது.

ஆனால், இன்றைய சமூக மற்றம் மற்றும் பொருளியல் சுதந்திரங்கள் இத்தகைய புனிதக் கட்டுமானத்தை உடைத்துவிட்டிருக்கிறது. இந்த தலைமுறைப் பெண், காதலின் பொருட்டு பெற்றோரை, குடும்பத்தை, சாதியை, சமூகத்தை உதறி வெளியேறத் தயாராக இருக்கிறாள். அந்த சுதந்திர உணர்வின் பின்னுள்ள மனநிலை காதல் என்ற பெயரில் இங்கு இருக்கும் கட்டுப்பெட்டித்தனத்தை மறுவரையறை செய்கிறது. காதல் என்பதில் இருக்கும் புனிதத்தை வெளியேற்றி சமத்துவத்தை நிலைநிறுத்த முயல்கிறது. இதை எதிர்கொள்ள முடியாத ஆண் பதட்டத்திற்கு உள்ளாகிறான். இங்கு சிதறும் ஆணின் மனநிலை, தனது சுயத்தின் பிளவாக அதை உருவகிக்கிறது. வன்முறையின் மூலம் அதை எதிர்கொள்ள முயல்கிறது. அவை பல நேரங்களில் காதல் கொலைகளாக முடிகின்றன.

மேலும் தனது காதல் தேர்வுகளைப்பற்றி பேசவும், தொடர்வதில் விருப்பமில்லாதபோது அதிலிருந்து வெளியேறவும்  தனக்கு உரிமை உண்டு என்று ஒரு பெண் நம்புகிறாள். காதலின் பொருட்டு தனக்கு பொருத்தமில்லாத ஒருவனுடன் காலமெல்லாம் தொடரவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவள் நினைக்கிறாள். விலகல் முடிவை முன்னெடுக்க, அவனைக் காதலித்ததோ, அவனுடனான நெருக்கமான உறவுகளோ பெரும் தடையாக இருப்பதில்லை. ஆனால் இதை வெளிப்படையாக அறிவிப்பதில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் ஊசலாட்டம் இங்கு விவாதத்துக்கு உரியது.

தனது முழு சுதந்திரத்தையும் பாவிக்க விரும்பும் ஒரு பெண் காதலின் போது ‘தனது பாதுகாவலனாக’ ஆணை உருவகிப்பதையும் அதை அவனிடம் பிரகடனப்படுதுவதையும்  மறு பரிசீலனை செய்யவேண்டும். இந்த இடத்தில் பெண்கள் நிறைய தடுமாறுகிறார்கள். அல்லது ஆணை சுரண்டுகிறார்கள். தன்னைக் காதலிப்பவனிடம் ‘நீ என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டியவன்’ என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த பொறுப்புக்கு பதிலீடாக அவன் எதிர்பார்ப்பது ‘அவனது எல்லைகளுக்குள் அவள்’ என்னும் கணக்கீட்டைதான். இது மீறப்படுகிறபோது பிளவு தொடங்குகிறது. பூசல்கள் முளைக்கின்றன.

இந்த தடுமாற்றத்தின் பின்னணிதான் பல அரைவேக்காட்டு பெண்ணிய பிரகடனங்கள் பொதுவெளியில் வருவதற்குக் காரணம். எந்த சுதந்திரத்துக்குப் பின்னாலும், நிறைய உழைப்பைக் கோருகிற பொறுப்பையும் கைக்கொண்டாக வேண்டும். பொறுப்பைத் தட்டிக்கழிக்கிற சுதந்திரம் என்பது தன் மீது மையல் கொண்டிருப்பவர்கள் மீதான சுரண்டல். இது இரண்டு தரப்பிற்குமே பொருந்தக் கூடியது. முக்கியமாக எதன் பொருட்டும் தான் என்னவாக இருக்கிறோம் என்பதைத் தனது இணையிடம் மறைக்காத திராணி. இந்த புரிதல்தான் ஏமாற்றுவது அல்லது ஏமாற்றப்படுவது என்கிற காதலுக்குத் தொடர்பில்லாத உரையாடல் வருவதைத் தவிர்க்கும்.

தான் காதலிக்கும் ஒரு பெண் இன்னொருவனிடம் flirt ல் கூட ஈடுபட மாட்டாள் என்று ஒரு ஆண் நம்ப விரும்புகிறான். ஆனால் நிஜத்தில் பெண்கள் இத்தகைய புனிதங்களை எல்லாம் வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறார்கள். அது குடும்பம் என்ற அமைப்புக்குள்ளும் ஊடுருவி நகர்ந்துகொண்டே இருக்கிறது.  காலம் காலமாக தான் ஆண் என்பதால் அனுபவித்து வரும் மிதப்பு இதனால் சிதைகிறபோது அது ஆணுக்கு நெருக்கடியாக மாறுகிறது. உச்சமாக, ‘இந்தக் காதலை உதறுகிறேன்’ என்ற ஒரு பெண்ணின் செயல் ‘ஆண் தன்மைக்கு’ இழைக்கப்பட்ட அவமதிப்பகப் பார்க்கப்படுகிறது.

ஆயினும் இத்தகைய கொலைகளுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கூட காதல் குறித்த புனிதங்களைக் கைவிடாமல் இதைப் பேச முயல்கிறார்கள். இதை ஆண்கள் புரிந்துகொள்வதும், ஏற்றுக்கொள்வதும், சமத்துவத்தை நோக்கி நகர்வதுமே இருக்கும் ஒரே வழி. ஆனால் அது அத்தனை எளிதானது அல்ல. ஏனெனில் அது நூற்றாண்டுகளாக ஏடு ஏடாக படிந்த வன்மம். குருதியுடன் தான் வெளியேறும்.  

ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர்.  வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்), சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும்எதிர் வெளியீடுகள்.