பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடுமுழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தம் ஏன் என சீத்தாராம் யெச்சூரி அளித்திருக்கும் கேள்வி-பதில் அறிக்கை:

ஏன் இன்றைய தினம் (செப்டம்பர் 2) அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது?

12 கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து தொழிற்சங்கங்களால் கூட்டாக வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை ஓராண்டுக்கு முன்பே அவர்கள் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துவிட்டார்கள். இந்தக் கோரிக்கைகள் நமது நாட்டின் உழைக்கும் மக்களது உரிமைகளையும், அடிப்படை வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ளன. யாருக்காக இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்பது முக்கியமானது.

வயல்வெளிகளில், தொழிற்சாலைகளில், இன்னும் நாடு முழுவதும் உள்ள வேலைத் தலங்களில் எந்த முடிவுமே இல்லாமல் உழைத்துக் கொண்டே இருக்கிற – ஆனாலும் துன்பத்தில் உழன்று கொண்டே இருக்கிற இந்திய தேசத்தின் உழைப்பாளிகளுக்காக நடைபெறுகிறது. இந்த உழைப்பாளிகள் தான் இந்திய நாட்டு பொருளாதாரத்தின் அடித்தளத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. வேலைநிறுத்தம் துவங்குகிற இந்த தருணம் வரையிலும் கூட 12 கோரிக்கைகளில் ஒன்றைக் கூட அரசாங்கம் பரிசீலிக்கவில்லை. எனவே, வேலைநிறுத்தத்திற்கு காரணம் அரசாங்கமே தவிர, தொழிலாளர்கள் அல்ல.

நேற்றைய தினமே கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டுவிட்டதாக மத்திய அரசு கூறியிருக்கிறதே?

இல்லை. இல்லவே இல்லை. ஒரு உதாரணத்தை சொல்கிறேன்; முறைசாரா துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு – குறிப்பாக அங்கன்வாடி, மத்திய அரசின் சுகாதாரத் திட்டமான ஆஷா, மத்திய உணவு திட்டம் ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு பலன்கள் குறித்த கோரிக்கையை பொறுத்தவரை, மத்திய அரசின் மூத்த அமைச்சர் சொல்வது மிகவும் வேடிக்கையானது – அனுதினமும் தங்களது உழைப்பை செலுத்தும் இந்த தொழிலாளர்களை அவர் வெறும் ‘தொண்டர்கள்’ என்கிறார்; தொழிலாளர்களை தொண்டர்கள் என்று பெயரை மாற்றுவதன் பின்னணி என்ன என்பதை யாரும் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

சரி, அதற்காக வேலைநிறுத்தம் செய்ய வேண்டுமா? வேலைநிறுத்தம் செய்வதால் எவ்வளவு பணம் விரயமாகிறது; இழப்பு ஏற்படுகிறது; அதையெல்லாம் பார்க்க வேண்டாமா?

வேலைநிறுத்தம் என்பது எப்போதுமே கடைசியாக எடுக்கக் கூடிய முடிவுதான். ஓராண்டுக்கு முன்பு வேலைநிறுத்தம் நடந்தது. அதே கோரிக்கைகள்தான். அந்தக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு ஓராண்டு காலம் நேரம் கிடைத்ததே; ஏன் தீர்வுகாணவில்லை? கடந்த ஆண்டு செப்டம்பர் 2 வேலைநிறுத்தம் முடிந்த பிறகு, கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக அரசு உறுதியளித்தது. ஆனால் அது நடக்கவே இல்லை. தொழிற்சங்க தலைவர்களை சந்திப்பதற்கு கூட அரசு தயாராக இல்லை. எனவேதான் மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலன் குறித்து சொல்கிறீர்கள், சரிதான். ஆனால் இந்தியாவால் தனது தொழிலாளர்களுக்கு நிறைய சம்பளம் வழங்க முடியுமா?

இந்த கேள்வி முக்கியமானது. இந்தியாவின் ஒட்டுமொத்த வளங்களையும் உருவாக்கிக் கொடுத்திருப்பது இந்த தொழிலாளிகள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியா அடைந்துள்ள ஒவ்வொரு பலனும், ஒவ்வொரு நலனும் தொழிலாளியின் உழைப்பால் விளைந்ததே. ஆனால் அந்த உழைப்பிற்கு உரிய பலனை தொழிலாளர்களுக்கு நாம் வழங்கவில்லை என்பதே உண்மை.

நீங்கள், இந்திய நாட்டில் உள்ள மிகப் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய்களை சலுகையாக, கடன் தள்ளுபடியாக கொடுப்பதற்கு தயாராக இருக்கிறீர்கள் (கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு சொந்தமான வங்கிகளால் பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள மிகப் பெரும் கடன் தொகைகளின் மதிப்பு ரூ.1.12 லட்சம் கோடி); ஆனால் இந்தியாவின் பொருளாதாரத்தையே தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற தொழிலாளர்களுக்கு இந்த பெரும் தொகையில் ஒரு சிறிய அளவைக் கூட செலவழிக்க தயாராக இல்லையே, அதை எப்படி ஏற்பது?

நீங்கள் ஏற்கெனவே பல துறைகளில் முறைப்படுத்தப்பட்டு பணியாற்றி வருகிற ஊழியர்களை பற்றியும், சங்க ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்களை பற்றியும் மட்டும்தான் பேசுகிறீர்கள். தினக் கூலி தொழிலாளர்கள் மற்றும் இதர பகுதி தொழிலாளர்களை பற்றி பேசுகிறீர்களா?

இந்த வேலைநிறுத்தத்தின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று, நாடு முழுவதும் உள்ள முறைசாராத் தொழிலாளர்களை பற்றியதுதான். முறைசாரா துறைகளில் பணியாற்றக் கூடிய அனைத்து தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்கள், தினக் கூலி தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் அல்லது தற்காலிக தொழிலாளர்கள் அனைவரும் முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு இணையாக நடத்தப்பட வேண்டும்; அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதே அந்த கோரிக்கை.

அதுமட்டுமல்ல, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பொருத்தமான, கௌரவமான வாழ்க்கையை உறுதி செய்யக்கூடிய வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்திய வேலை சந்தையில் 1.3 கோடி இளைஞர்கள் புதிதாக இணைந்து கொண்டிருக்கிறார்கள்; ஆனால் இந்த அரசாங்கம் வெறுமனே 1.3 லட்சம் வேலை வாய்ப்புகளைத்தான் நடந்த ஆண்டு உருவாக்கியிருக்கிறது. இது தொடர அனுமதிக்க முடியாது.

நன்றி: தீக்கதிர்.