கர்நாடக அரசு ‘தானும் வாழ்வது பிறரையும் வாழவிடுவது’ என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகம் கடந்த 3 மாதங்களாக தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக அவதியுற்று வரும் நிலையில், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை, கர்நாடக அரசு அமல்படுத்தாமல் இருப்பது ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு உடனடியாக 50.52 டி.எம்.சி தண்ணீரைகாவிரியில் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.கர்நாடக அணைகளில் 180 டி.எம்.சி. தண்ணீர் இருக்கும்போது தமிழகத்திற்கு 62 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுவது சாத்தியமானதுதான்.

ஆனால், தற்போது 80 டி.எம்.சி. அளவிற்கே தண்ணீர் உள்ள நிலையில், தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் வழங்க முடியும்? என்று கர்நாடகா பதில் மனு தாக்கல் செய்தது.இம்மனுக்கள், நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தேவும், கர்நாடக அரசுத் தரப்பில் பாலி நாரிமனும் ஆஜராகி வாதாடினர். அப்போது, நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு எந்த அளவிற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என்பதைத் தெரிவிக்குமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிட்டனர்.

இதுதொடர்பான விரிவான விசாரணையை திங்கட்கிழமைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், நீர்ப் பங்கீட்டு விவகாரங்களில், தானும் வாழ்வது; மற்றவர்களையும் வாழ விடுவது என்ற கொள்கையைக் கடைப்பிடித்தால் பிரச்சனை வராது என்றும் குறிப்பிட்டனர்.“எங்கு பார்த்தாலும் தண்ணீர்… தண்ணீர்; ஆனால் குடிப்பதற்கு ஒருதுளி இல்லை என்பதே தமிழகத்தின் நிலையாக உள்ளது” என்று கூறிய நீதிபதிகள், நல்லெண்ணத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

தீக்கதிர் செய்தி