மருத்துவ படிப்பிற்கு இடம் வழங்கும் விவகாரத்தில் பண மோசடி, தயாரிப்பாளர் மதன் காணாமல் போனது உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்புடையதாக, எஸ் ஆர் எம் கல்விக் குழும நிறுவனர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் கடந்த 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர், ஜாமின் கேட்டு தொடர்ந்த வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஜாமின் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாரிவேந்தர் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், ஏற்கெனவே தான் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய உடல்நிலை மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென கோரியுள்ளார். இந்த மனு, வரும் செவ்வாய்க் கிழமை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

இதனிடையே, தன்னிடம் 70 லட்ச ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியதாக பாரிவேந்தர் மற்றும் அவரது ஆடிட்டர் சுப்ரமணியன் ஆகியோர் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சென்னை சூளையைச் சேர்ந்த மோகன்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.