காஷ்மீரில் இரண்டு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களை ஒடுக்க பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி வந்தது இந்திய ராணுவம். பெல்லட் குண்டுகளால் சிறுவர்கள், இளைஞர்களுக்கு பார்வை இழப்பும், கடுமையான காயங்களும் ஏற்பட்டது. இதுகுறித்து தொடர்ந்து எழுந்த கண்டனங்களின் விளைவாக தற்போது, பெல்லட் குண்டுகளுக்குப் பதிலாக PAVA ஷெல்ஸ் எனப்படும் மிளகாய்(காரம்) கிரானேட்டுகளைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது உள்துறை அமைச்சகம். ஆனால் இரண்டாம் நிலை ஆயுதமாக பெல்லட் குண்டுகளின் பயன்பாடும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரத்தன்மையுடைய கிரானேட்டுகளைப் பயன்படுத்தும்போது, போராட்டக்காரர்களால் செயல்பட முடியாது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இது 2010-ஆம் ஆண்டில் புழக்கத்துக்கு வந்தபோது, ‘காரசாரமாக சுடச்சுட வந்துள்ள ஆயுதம் ’ என வெளிநாட்டு ஊடகங்கள் வர்ணித்தன.

அஸ்ஸாமைச் சேர்ந்த பட் ஜோலோகியா (bhut jolokia chili) என்ற மிளகாய் வகை, உலகின் அதிக காரமான மிளகாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த மிளகாயின் விதையிலிருந்து, அதைவிட ஆயிரம் மடங்கு காரத்தன்மையுடன் இந்த கையெறி குண்டை, போராட்டங்களை ஒடுக்குவதற்காக இராணுவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த குண்டை வீசியெறியும்போது வெளிப்படும் தூசி போன்ற காரத்தன்மையால் பல மணி நேரங்கள் கண்களைத் திறக்க முடியாது, கடுமையான மூச்சுத் திணறலுக்கும் ஆளாக நேரிடும்.