ஜோஸ் ஆண்டன்

ஜோஸ் ஆண்டன்
ஜோஸ் ஆண்டன்

‘காக்கா முட்டை’ யில் கதைக்காக சேரி மக்களின் வாழ்க்கை ஒட்டவைக்கப்பட்டது. சேரி மக்களின் அன்றாட வாழ்வியல் எதார்த்தமும், கூறுகளும் தெளிவாக அதில் காட்சிப்படுத்தப்படவில்லை. அவர்களின் வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாததுதான் அதற்குக் காரணம். பின் பாதியில் படத்தின் கதையை முடிப்பதற்காக சங்கர் ஃபார்முலாவான மீடியா வழியான பிரச்சாரம் உள்ளே கொண்டுவரப்பட்டது. அதோடு கதையும் முடிந்துவிட்டது. சேரி மக்களின் வாழ்வு குறித்த சரியான புரிதல் இருந்திருந்தால் சங்கரின் பார்முலா தேவைபட்டிருக்காது. ஆனால் இயக்குனருக்கு அது மிகவும் தேவையாயிருந்தது. ஆக மணிகண்டனின் காக்கா முட்டை சராசரியான ஒரு படம். ஆனால் அந்தத் திரைப்படம் பெருமளவில் பேசப்பட்டது.

இத்தகைய சராசரியான படைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் இயக்குனர் தன்னுடைய படைப்பைப் பற்றிய தவறான கருத்தை உருவாக்கிக்கொள்வதற்கு வழிவகுக்கும். அதனாலேயே அவரின் அடுத்தப் படமான ‘குற்றமே தண்டனை’ இன்னும் சராசரியாகவே இருக்குமென்றுதான் நினைத்தேன். ஆனால் அது அப்படியாயிருக்கவில்லை.

மணிகண்டன் மிகுந்த பிரக்ஞையுடன் திரைக்கதையை அமைத்திருக்கிறார். தன்னுடைய திரைப்படம் குறித்தப் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அவர் நன்றாகவே உணர்ந்திருக்கிறார் என்றுத் தோன்றுகிறது. ஆக்கம் என்ற வகையில் முந்தையப் படத்திலிருந்து மிகவும் மேம்பட்டதாகத் தோன்றுகிறது.

தமிழ் திரைப்பட விமர்சகர்களால் நல்ல மலையாள திரைப்பட இயக்குனர்கள் என்று சுட்டப்பட்டவர்கள் கூட தங்களின் மேதைமையை காண்பிக்கும் எண்ணத்துடன் செயற்கையாக, கதையின் போக்கிற்கு அந்நியமாய் அமைக்கும் காட்சியமைப்புகள் எதுவும் இதிலில்லை. கதை மிகவும் இயல்பாக பயணிக்கிறது. முக்கியக் கதை களனான சென்னை நகரம் அழகாக காட்சிப்படுத்தப்படுகிறது. ஆனால் அது கதைக்கு வெளியில் அழகியல்/பிரமாண்ட தன்மைகளுக்காக காட்சிப்படுத்தப்படவில்லை. கதையுடன் இயைந்து செல்கிறது காட்சி வடிவங்கள்.

வெகுநாளைக்குப் பிறகு திரையரங்கில் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டியதை கண்டேன். மணிகண்டன் அதற்கு முற்றிலும் தகுதியானவர். Tunnel Vision எனும் கண் நோயும் அதிலிருந்து வெளிவர முயற்சிக்கும் கதாநயகனின் முயற்றிகளுமே கதையின் மையப் புள்ளியாக இருக்கிறது. அழகியல் என்ற ரீதியில் நோக்கினால் படத்தின் துவக்கத்தில் சற்று அதிகபடியான பரப்பை கதாநாயகன் காட்சியுறுவதாக தொடங்கி, கதை பரிணமிக்க பரிணமிக்க அந்த பரப்பு குறைந்துகொண்டே வந்து முடிவிற்கு முன் அந்த பார்வையின் பரப்புப் புள்ளியாகி முடிவில் பார்வை முற்றும் இழப்பதாக வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்றுத் தோன்றுகிறது. மணிகண்டன் இனி வரும் காலங்களின் இன்னும் சிறப்பான படைப்புகளை கொடுப்பார் என்றேத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள் மணிகண்டன்!

ஜோஸ் ஆண்டன், திரைத்துறையில் பணியாற்றுகிறார்.