காவிரியிலிருந்து 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு மூன்று நாட்களில் அணுக வேண்டும். தங்களது கோரிக்கையை தமிழகம் மூன்று நாட்களில் குழுவிடம் அளிக்க வேண்டும். இந்த மூன்று நாட்களுக்குப் பிறகு கர்நாடக அரசின் நிலையை குழு கேட்டறிய வேண்டும். இரு மாநில நிலைமைகளையும் கேட்டறிந்து நான்கு நாட்களில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக அமைச்சர் ஜெயச்சந்திரா, கர்நாடகாவின் 4 அணைகளில் மொத்தமாகவே, 51 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது என்றும் இது தங்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தங்கள் வழக்கறிஞர்களுடன் பேசி அவர்களின் ஆ‌லோசனையை பெற்று பின், நீர்வள அமைச்சகத்தின் கருத்தையும் பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த தமிழக விவசாயிகள், விநாடிக்கு 15ஆயிரம் கன அடி என்பது குடிநீர்த் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என கூறியுள்ளனர்.

சம்பா சாகுபடிக்கு இந்த தண்ணீர் போதாது என சுட்டிக்காட்டியுள்ள காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், 100 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.