அண்மையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலித் மாணவர்கள் மீது சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமையை கடைப்பிடிப்பதாக இரண்டு ஆசிரியர்கள் மீது பள்ளி மாணவர்கள் புகார் அளித்தனர். அவர்கள் இருவரையும் பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய கல்வி துறை அதிகாரிகளிடம் ஒடுக்குமுறைக்கு ஆளான மாணவர்கள் பேசினர்.

வன்னியர் சாதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஆசிரியர் தலித் மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்குவதாகவும் டியூசனும்கூட எம்பிசி மாணவர்களுக்கு எஸ்சி மாணவர்களுக்கு என தனித்தனியாக நடத்துவதாகவும் கூறினர். பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்வது, ஆசிரியர் உண்ட தட்டை கழுவது, ஆசிரியர்களின் பைகளை சுமப்பது போன்ற ஒடுக்குமுறைகளையும் அந்த ஆசிரியர் ஏவியதாக அவர்கள் கூறினர். ஆசிரியர் ஆறுமுகம் மாணவர்களை சாதிப் பேர் சொல்லியே தலித் மாணவர்களை அழைத்திருக்கிறார். இதில் 9-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பேசியது, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. பறையன் என சொல்ல (கீழ்மைப் படுத்த, இழிபடுத்தும்படி சொல்ல) இந்த உலகம் பயப்பட வேண்டும் என அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து வா. விஜய் வன்னியன் என்பவர், (இவர் தன்னை பாமகவின் வீரத் தொண்டர் என குறிப்பிட்டுக் கொள்கிறார்)  அந்த மாணவி குறித்து,

‘பறையன பார்த்தா உலகமே பயப்படும்னு சொன்ன வருங்கால ஐயிட்டத்த தூக்கி வச்சிக்கிட்டு ஒரு பதிவுல கத்திட்டு இருந்தானுங்க அரை புத்தி பசங்க….!!

“உள்ளே இறங்கி ஒரு காட்டு காட்டின உடனே ப்ளாக்க போட்டு ஓடுறானுங்க ஒசி வாங்கற பிசிஆர் பசங்க….!!

“உங்கள பார்த்தாடா உலகமே பயப்படனும்…?
பிசிஆர் இல்லாம பேசி பாருங்கடா…
அரை புத்தி பசங்களா” என தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். 

பெண்களின் பாதுகாப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர் அறிக்கைகள், போராட்டங்கள் மூலம் வலியுறுத்தி வரும் நிலையில், அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒருவரே 9-ஆம் வகுப்பு மாணவியை ‘எதிர்கால ஐயிட்டம்’ என சொல்லியிருப்பது சமூக ஊடகங்களில் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.