தன்னை “மகாராணி” யாகக் கற்பனை செய்து கொண்டு வாழ்பவர் ஜெயலலிதா என திமுக தலைவர் மு. கருணாநிதி விமர்சித்துள்ளார். மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின் தலைவராக கல்யாணி மதிவாணம் நியமிக்கப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேள்வி பதில் பாணியில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

“மன்னர் ஆட்சி பல ஆண்டுகளுக்கு முன் முடிந்துவிட்டதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதா அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதே?

குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்துவது சம்பந்தமான வழக்கு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு 2-9-2016 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கூறிய கருத்து வருமாறு :
“மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய தலைவருக்கு என்ன தகுதி உள்ளது என்பதை நீதிமன்றமே ஆய்வு செய்யவிருக்கிறது. தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை . மன்னர் ஆட்சி பல ஆண்டுகளுக்கு முன் முடிந்துவிட்டதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும் . குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் பதவியை ஓராண்டாக நிரப்பாமல் இருந்துவிட்டு, நேற்று அவசர அவசரமாக வழக்கு வரும் ஒரு நாளுக்கு முன்னதாக அரசாணை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தலைவர் பதவிக்கான முறையான விளம்பரம் செய்து,அந்தத் துறைபற்றி அனுபவம் வாய்ந்தவர்கள் தான் அந்தப் பதவிக்கு வர முடியும். இவை எதையுமே பின்பற்றாமல் திடீரென ஒருவருக்கு இந்தப் பதவியை வழங்கியிருப்பது வேதனையளிக்கிறது. இந்த நியமனம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க உத்தரவிட நேரிடும்” என்று ஜெயலலிதா அரசுக்கு, விரிவான முறையில் தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பணியிடம் 17-3-2016 முதல் காலியாக இருந்து வந்தது. அந்தப் பதவியை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 21-7-2016 அன்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி திருமதி கல்யாணி மதிவாணன் அவர்களை நியமனம் செய்ததற்கான அரசாணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதைப் பரிசீலனை செய்த தலைமை நீதிபதி, எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், அரசின் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு மாறாக, எந்த முறையில் திருமதி கல்யாணி நியமிக்கப்பெற்றார் என்று வினா எழுப்பினார். நியமனத்தின் அடிப்படையை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காவிட்டால் நியமன ஆணை தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீதி அரசர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றனர். இந்த நியமனத்தில் வேடிக்கை என்ன வென்றால் திருமதி கல்யாணிக்கு குழந்தை உரிமைகள் குறித்து சிறிதும் அனுபவமோ, நிபுணத்துவமோ கிடையாது என்பதுதான்.

மேலும், இணைப் பேராசியராக மட்டுமே பணியாற்றிய திருமதி கல்யாணி மதிவாணன், குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற அடிப்படைத் தகுதிக்கு மாறாக , மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தராக, அதிமுக ஆட்சியின்போது , நியமிக்கப்பட்டார் . இவர் துணைவேந்தராகப் பணிபுரிந்த காலத்தில், பல்கலைக் கழகத்தில் திரைப்படம் சார்ந்த பாடப்பிரிவு கொண்டு வருவதாகக் கூறி, “ஹோம் தியேட்டர்”அமைப்பதற்காக, ஏற்கனவே செயல்பட்டுவந்த மாணவர் விடுதிகளை மூடி மாணவர்களை வெளியேற்றினார் என்றும்; உணவு விடுதியைத் தனியாருக்குத் தாரை வார்த்தார் என்றும்; ஆய்வு மாணவர்களுக்கான உதவித் தொகையை வழங்க வில்லை என்றும்; பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது கூறப்பட்டன. திருமதி கல்யாணி மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அவருடைய நடவடிக்கைகளை எதிர்த்து மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தியதால் , பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டது. திருமதி கல்யாணியை துணை வேந்தராக நியமித்தது செல்லாது என்று 2014- ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இத்தகைய எதிர்மறைப் பின்னணிக்குச் சொந்தக்காரரான திருமதி கல்யாணி மதிவாணன் தான், தற்போது குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவராக அதிமுக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனத்தை எதிர்த்துதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது.

இந்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா, மக்களாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட – மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளித்திடும் பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் என்பதை மறந்து, தன்னை ஒரு”மகாராணி” யாகக் கற்பனை செய்து கொண்டு அந்தக் களிப்பில் காலம் கழித்து வருகிறார் என்பதைத் தமிழக மக்கள் நன்கறிவார்கள். “மக்களால் நான் ; மக்களுக்காக நான்” என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் ஜெயலலிதா, அதற்கு மாறாக , மக்களை நேரடியாகச் சந்திப்பதுமில்லை; மக்கள் குறைகளை நேரில் கேட்பதுமில்லை . ” நானே மாநிலம் ; நானே எல்லாம் ; எல்லாம் எனக்குத் தெரியும்; என் சொல்லே எதிலும் இறுதிக் கட்டளை” என்ற பாணியில் செயல்படக்கூடிய சர்வாதிகார எண்ணம் கொண்டவர் ஜெயலலிதா. ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களான மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல், சகிப்புத் தன்மை ஆகியவற்றை அலட்சியம் செய்து ஒதுக்கி விட்டு; எதுவும் தன்னைச் சுற்றியே அல்லது தன்னைச் சார்ந்தே இயங்கிட வேண்டும் என்ற தன் முனைப்பும், தன் முக்கியத்துவமும் கொண்டாடுபவர். இத்தகைய குணாம்சங்கள் நிறைந்திருப்பதால்தான் ஜெயலலிதா அரசை மன்னர் ஆட்சிக்கு ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி!”