அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் யார் மீதும் தேச விரோத வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. “காமன் காஸ்’ என்ற தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவை  நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் முன்வைத்த வாதம்:

தேச துரோகம் என்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆனால், தேச துரோக வழக்குகள், தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது தேச விரோத வழக்குகளை தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர், கார்ட்டூனிஸ்ட் அஸீம் திரிவேதி, எழுத்தாளர் அருந்ததி ராய், மனித உரிமை ஆர்வலர் விநாயக் சென், ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் ஆகியோருக்கு எதிராக தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2014-ஆம் ஆண்டு மட்டும் 47 தேச விரோத வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 58 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவரை மட்டுமே குற்றவாளிகள் என அரசால் நிரூபிக்க முடிந்தது என்றும் பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.

முடிவில் நீதிபதிகள், அரசை விமர்சிக்கும் விதமாக யாராவது கருத்து தெரிவித்தால், அது தேச துரோகம் அல்லது அவதூறு சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று கூறினர். மேலும், தேச விரோத வழக்குகளைப் பதிவு செய்யும்போது, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.