தமிழக அரசு தாக்கல் செய்திருந்த காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தின் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

  • பதட்டமான சூழல் நிலவுவதால் தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் ஒசூர் வரை மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

* கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.

  • மாண்டியாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.  காவிரி நலன் பாதுகாப்புக்குழு கூட்டம் முன்னாள் எம்பி ஜி.மாதேகெளடா இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்.

  • மாண்டியா போராட்டத்தின் போது காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக விவசாயி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

*  கன்னட சலுவளி கட்சித்தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கூடிய கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர், செப்.9-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

* தீர்ப்பு குறித்து பெங்களூரு, விதானசௌதாவில் செவ்வாய்கிழமை மாலை 3 மணிக்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையின் அனைத்துக்கட்சித் தலைவர்கள், கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், கர்நாடக அமைச்சர்கள், காவிரி நதிநீர் படுகை மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

* “காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு அம்மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும், உழவர்கள் அமைப்புகளையும் ஒருகுடைக்குள் கொண்டு வந்து மத்திய அரசுக்கு நெருக்கடி அளித்து வரும் நிலையில், தமிழக முதல்வரின்  அணுகுமுறை கவலையளிக்கிறது. கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களில் இருமுறை அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் அதுகுறித்து குறைந்தபட்சம் அமைச்சரவைக் கூட்டத்தில் கூட விவாதிக்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த போக்கு ஒருபோதும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது” என பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.