கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பகுத்தறிவாளர் நரேந்திரே தபோல்கர் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அவருடைய வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த பிப்ரவரியில் மூடநம்பிக்கை எதிர்ப்பாளரும் இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்டவருமான கோவிந்த பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டார். சென்ற மாதம் கர்நாடகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் பகுத்தறிவாளருமான கல்பர்கி சுட்டுக் கொல்லப்பட்டார். மூவரின் கொலையும் திட்டமிடப்பட்டு, தடயங்களே இல்லாமல் கச்சிதமாக ஒரே முறையில் செய்யப்பட்டிருந்தன. கோவிந்த் பன்சாரே வழக்கில் சமீர் கெய்வாட் என்ற நபரை கைது செய்தது சிபிஐ.

இவரிடம் கைப்பற்றப்பட்ட டைரிகளில், இந்த மூன்று கொலைகளுக்குமான தொடர்பு நூல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலம் ராம்நதி என்கிற கிராமத்தில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் சனாதன் சன்ஸ்தா என்கிற இந்துத்துவ அமைப்பு இந்த கொலை வழக்குகளை இணைக்கும் நூலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தபோல்கரின் கொலை வழக்கில் தொடர்புடையதாக சனாதன் சன்ஸ்தா அமைப்பின் ஒரு பிரிவான ஹிந்து ஜனாக்ருதி சமிதி முக்கிய பொறுப்பாளராக செயல்பட்ட விரேந்திர தவ்டேயை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது சிபிஐ.

விரேந்திர தவ்டேவுக்கும் சனாதன் சன்ஸ்தா அமைப்பின் மூத்த தலைவர் ஒருவருக்கும் நடந்த இமெயில் உரையாடல்கள் மூலம் தபோகரின் கொலை குறித்து பேசிக்கொண்டதாக சிபிஐ தெரிவித்தது.

இதனிடையே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை திங்கள்கிழமை புனே நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இந்தக் கொலை குற்றத்தில் முக்கிய குற்றவாளியாக விரேந்திர தவ்டேவும் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த விநய் பவர், சாரங் அகோல்கர் ஆகியோரும் சொல்லப்பட்டுள்ளனர்.

சாரங் அகோல்கர் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளி. பகுத்தறிவாளர் தபோல்கரின் கொலை, 2007ஆம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டதாகவும் 2009 தீபாவளியின் போது நடத்தப்பட்ட கோவா குண்டுவெடிப்பு காரணமாக 2009-ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

 

இந்தக் குற்றப்பத்திரிகையில் சனாதன் சன்ஸ்தா அமைப்பின் பன்வால் அலுவலகத்தில் கைப்பற்ற டிஸ்கில் வாஷி, தானே, கோவா ஆகிய இடங்களில் இந்த அமைப்பின் தோல்வியடைந்த குண்டுவெடிப்பு திட்டங்கள் குறித்தும் அந்த தோல்வியின் காரணமாக தங்களுடைய முறைகளை மாற்றியமைத்து இந்துத்துவத்துக்கு எதிரானவர்களை கொல்லும் திட்டத்தை தீட்டியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்துத்துவத்திற்கு எதிரான செயல்பாட்டாளர்களின் பட்டியல் ஒன்றை அவர்கள் தயாரித்து வைத்திருந்தது குற்றப்பத்திரிகை சொல்கிறது. பகுத்தறிவாளர்களை ‘ராட்ஷசர்கள்’ என்ற சங்கேத பெயர் வைத்து தகவல்களைப் பரிமாறிக்கொண்டதாகவும் குற்றப்பத்திரிகை சொல்கிறது.

சனாதன் சான்ஸ்தா பின்னணி என்ன?

‘இந்துராஷ்டிரம் அமைக்க யுத்தத்தில் போராடுகிறவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். அவர்களை இந்த உலகம் என்றென்று நினைவுகொள்ளும்’ சனாதன் சன்ஸ்தா என்கிற அமைப்பு தன்னுடைய இணைய பக்கத்தில் சொல்கிறது இப்படி.

ஜெயந்த் அத்வாலே, குந்தா அத்வாலே என்ற மருத்துவம் படித்த தம்பதி 1995-ஆம் ஆண்டில் தொடங்கியதே சனாதன் சன்ஸ்தா. இந்த அமைப்பு கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மையமிட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ‘இந்து ராஷ்டிரம்’ என்பதே லட்சியம் என தன்னுடைய இணைய பக்கத்தில் அறிவிக்கிறது சனாதன் சன்ஸ்தா. சமூக விரோதிகளை அழிக்க மூன்றாம் உலகப் போரை 2016லிருந்து 2018 வரை நடத்தும் என்றும் 2019-2022 வரை கடவுளின் ராஜ்ஜியத்தை அமைப்பது குறித்து ஒத்திகைகள் நடத்தும் என்றும் 2023-ஆம் ஆண்டு இந்து ராஜ்யம் அமையும் என்று உறுதியாக அறிவிக்கிறது.

சிறு தெய்வங்களை, உருவமற்ற கடவுளர்களை வணங்கிய மக்களை ‘இந்து’க்களாக மாற்றிய வழியைப் பின்பற்றி இந்த ஸ்லோகம் சொன்னால் மனநிம்மதி கிடைக்கும், இந்த ஸ்லோகம் சொன்னால் பொன்னும் பொருளும் கிடைக்கும். இந்த யாகம் செய்தால் பிள்ளைகள் படிப்பில் கொடிகட்டிப் பறப்பார்கள்’ என்கிற ஆரம்பக்கட்ட வலையை வீசி, படிப்படியாக இந்து, பாரதம், இந்துராஷ்டிரம் போன்றவற்றை தேசப்பற்றுடன் தொடர்புபடுத்தி பக்தர்களை மூளைச் சலவை செய்யும் பணிகளைச் செய்துவருகிறது இந்த அமைப்பு. இந்த ஆசிரமத்துக்குள் முன் அனுமதி இல்லாமல் யாரும் செல்ல முடியாது.

sanatan-sanstha

சனாதன் சன்ஸ்தா வெளியீடுகளைப் படிப்பவர்கள் யார் தங்களுடைய எதிரிகள் என்று அறிவார்கள் என்று தன்னுடைய எதிரிகள் என கைக்காட்டுவது கடவுள் மறுப்பு பேசுகிறவர்கள், சிறுபான்மையினர். வெள்ளை காலர் கொலைகள் என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் கைத் தேர்ந்த கொலையாளிகளைப்போல் செயல்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவா, மகாராஷ்டிராவில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ளதாகக்கூறி 2011-ஆம் ஆண்டு இந்த அமைப்பைத் தடை செய்ய பரிந்துரைத்தது காங்கிரஸ் தலைமையிலான மகாராஷ்டிர அரசு. ஆனால், அப்போது உள்துறைச் செயலாளராக இருந்த ஆர்.கே.சிங் இதை நிராகரித்தார். அரசு பணியில் இருந்த ஆர்.கே.சிங், தற்போது பாஜக எம்பியாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அதுபோல, கோவா ஆளும் பாஜக முதல்வர் இந்த அமைப்பை தடை செய்ய முடியாது என தெரிவித்திருந்தார். மகாராஷ்டிர மாநில முதல் பட்னாவிஸும் கோவாவின் முன்னாள் முதல்வரும் தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கரும் இந்த அமைப்புக்கு நெருக்கமானவர்கள்.