கீட்சவன்

சில அற்புதமான நாள் உருவாக்கப்படுவதில்லை; அது, தானாய் அமைந்துவிடும். அதுபோலவே இந்த ‘தி லஞ்ச்பாக்ஸ்’ படம் பார்த்த தருணமும்.

ஒரு பரபரப்பான அம்மா தன் பெண்ணை ஸ்கூலுக்குக் கிளப்புவதே படத்தின் முதல் காட்சி. அந்த உரையாடல் சொல்லிவிடும், அந்தத் தாய் வேலைக்கு போகாத ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவி என்பதை. மும்பையில் தீப்பெட்டி அடுக்குமாடி குடியிருப்புகளுள் ஒன்று அது. சமையல் அறைக் காட்சிகள்தான் அதிகம் என்றாலும், சமையல் அறையை இறுதிவரை முழுமையாகக் காட்டாதது சிறப்புக் குறிப்பு.

இலா… இதுதான் அந்தப் பெண்ணின் பெயர் (நிர்மத் கவுர்). எந்த அலங்காரமும் இல்லாமல் வீட்டில் அழுக்கு உடையில் இருக்கும் பெண்கள்கூட ஓர் அழகு என்பதற்கு எடுத்துக்காட்டு. யதார்த்த நடிப்பிலும் நம்மை வசியபடுத்துபவர். மும்பையின் மிகப் பெரிய அடையாளமாய் உலக அளவில் தெரிந்த ஒன்று ‘டப்பா வாலா’. அதன் பின்னணியில், ‘ஓர் உணர்வுபூர்வ உண(ர்)வுப் பரிமாற்றத்தின் கதை’ இது.

தன் மீது பெரிதும் நாட்டம் கொள்ளாத கணவனை, வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போட்டு வசியம் செய்யும் முயற்சியில் ஆரம்பிக்க, அந்த லஞ்ச்பாக்ஸ் தவறான நபர் கையில் கிடைக்கிறது. வாழ்க்கையில் எந்தப் பிடிப்புமே இல்லாத – உறவில் யாரும் இல்லாத – பணி ஓய்வை எதிர்நோக்கும் ஓர் அரசு அலுவலர் சாஜன் (இர்ஃபான் கான்) வசம்தான் கிடைக்கிறது அந்த லஞ்ச்பாக்ஸ். அந்த உணவை அவர் ருசித்து உண்ணும் கட்சி புதுவித ஆச்சரியத்தை ஏற்படுத்தும். வெறும் டப்பா திரும்பி வந்து இருப்பதை பார்க்கும் மனைவி, இரவில் கணவனின் பாராட்டுக்காக காத்திருப்பதும், அவன் அதை சாப்பிடவே இல்லை என்று தெரியவரும்போது அவள் காட்டும் தவிப்பும் குழப்பமும் ரசிக்கத்தக்கது.

மறுநாள் அதே நபருக்காக சமைத்து அனுப்பும் இலா, நன்றி சொல்லி சாப்பாட்டுடன் முதல் கடிதம் அனுப்புகிறார். அதைப் பார்த்த பிறகுதான் சாஜனுக்கு தெரிகிறது, நேற்று தனக்கு வந்த லஞ்ச்பாக்ஸ் வேறு விலாசத்தில் இருந்து வந்தது என்று. மறுநாள் முதல் கடிதம் சுமந்து வரும் அந்த ருசியான உணவுக்காக காத்திருக்கும் உணர்வை வெளிகாட்டாமல் வெளிப்படுத்தும் விதத்தில் இஃர்பான் கான் நம் மனதில் தங்கி விடுகின்றார்.

பின்னர், தினமும் தொடரும் கடிதப் போக்குவரத்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதை படிப்படியாய காட்டப்படுவது இயல்பு. தன் கணவனுக்கு தன் மீது ஈடுபாடு வராததற்கு காரணம் – வேறு ஒரு பெண்ணுடன் ஈடுபட்டு வருவதை இலா கண்டறிந்து கலங்கும் இலா கலங்கும் இடம் அதிர்வு.

தன் கடித உறவை நேரில் சந்திக்கக் கேட்க, அவளை பார்க்கப் போக கிளம்பும்போது, தன் வயதையும் தன் உடல் தோற்றத்தில் வந்துள்ள முதுமை அடையாளத்தையும் கண்டு தன்னைத் தானே தாழ்வாகக் கருதி, அவளை பார்த்தும் சந்திக்காமல் சாஜன் திரும்புகிறார். அந்த ஓட்டலில் வருகைக்காக காத்திருந்து இலா தவித்ததை, மறுநாள் சாஜனிடம் வந்து சேரும் வெற்று லஞ்ச்பாக்ஸ் வெளிப்படுத்துவது கவிதை மொழி.

அவள் அழகை எட்ட நின்று ரசித்து, தன் இயாலாமையை பதிலாய் அனுப்பிவிட்டு, தன் புறவழி நல்லுறவைத் தொடர விரும்பாமல் பணியில் இருந்து விடுபட்டு சொந்த ஊரான நாசிக் கிளம்பி செல்லும சாஜன் கதாபாத்திரம், இலா உடனான உறவுக்குப் பின் ஒட்டுமொத்தமாக மாற்றம் காண்பதை நாம் சிலிர்ப்புடன் உணரலாம்.

சாஜனின் அலுவலகம் சென்று பார்க்க முயற்சிக்கிறாள் இலா. ஆனால், அவர் ஏற்கெனவே கிளம்பிவிட்டதை அறிகிறாள். அதன்பின் தனியாய் வாழ்க்கையைத் தொடர முடிவு செய்கிறாள். வீட்டில் முடங்கிக் கிடந்த அவளுக்கு, புது வாழ்க்கையைத் தெரிவு செய்ய உத்வேகம் தந்தது சாஜன் உடனான உறவுதான் என்பது அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கலாம்.

“தவறான ரயிலில் நான் பயணித்து, உங்களைச் சந்திக்கும் ஒருநாள் வரலாம்” என்று சாஜனுக்கு இலா எழுதி வாசித்த அந்தக் கடிதம் நமக்குத் தரும் உணர்வு எளிதில் விவரிக்க முடியாதது.

இந்தப் படத்தில் வரும் மாடி வீட்டு பாட்டி, வெறும் குரல் வடிவில் மட்டுமே நமக்கு காட்டப்படுகிறார். அந்தப் பாட்டியுடன் படுத்தப் படுக்கையாக ஒரு தாத்தா இருப்பதை நம்மையும் நம்பவைக்கும் விதம் இயக்குனரின் திரை மொழிக்கு சான்று.

அதேபோல் தன் கணவனுக்கு இருக்கும் வேறு பெண்ணுடனான உறவைக் காட்ட அவனது சட்டையில் இருந்து வாசம் மூலம் இலா கண்டுபிடிக்கும் விதம், சாஜன் தனிமையில் உறவுக்கும் பாசத்துகும் ஏங்குவதை காட்ட – எதிர்வீட்டில் குடும்பமாய் இரவு உணவை சாப்பிடுவதை தன் வீட்டு பால்கனியில் இருந்து பார்ப்பதைக் காட்சிப்படுத்திய விதம், கடைசி வரை அவர்கள் இடையிலான உறவை நட்பு – காதல் என்று சமூகம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பெயர் வைக்காத முடிவை முன்வைத்தது என எதையும் தோல் உரித்து காட்டாமல் நம் மனதில் பதியவைத்த ‘தி லஞ்ச்பாக்ஸ்’ நமக்கான ஆரோக்கிய சுவைமிகு உண(ர்)வு.

பெண்களை வீட்டில் வேலை செய்யும் இயந்திரமாகவே ஆண்கள் பலரும் பார்க்கின்றனர். பல பெண்களின் கனவை திருமண பந்தம் முதல் வருடம் அல்லது முதல் குழந்தை முடித்து விடுகிறது. அவர்களை விசாரிப்பதற்கும், ஆறுதலாய் பேசுவதற்கும் கூட கவனிப்பாரற்று, நாம் அன்புக்குத்தான் ஏங்குகிறோம் என்று கூட புரிய முடியாதவர்களாய் பரிதாப நிலைக்கு தள்ளி விட்டுவிட்டு, ‘கள்ளக் காதல் – கள்ளத் தொடர்பு’ என்று கலாய்த்தும் காரித் துப்பியும் வருகிறோம். ஓர் ஆணும் ஒரு பெணும் பழகினால், அது காதலாக மட்டும்தான் இருக்க முடியும் என்று ஏனோ நம் மரபணுவில் யாரோ பதியவைத்த தவறான தகவல் என்றைக்கு மனித மனதை விட்டுப் பறந்து போகுதோ அன்றைய தினம் வரை இந்த ‘லஞ்ச்பாக்ஸ்’ உணவு நிச்சயம் தேவையானது.

சாஜன் – இலா உறவை உறவைத் தொடங்கி வைப்பது, ஒரு சுவையான உணவு. ஒவ்வொரு நாளும் அது அவளிடம் இருந்து வந்த டப்பா தானா என்பதை அவன் திறக்காமல் முகர்த்து பார்க்கும் விதம் சொல்லும், உணவுக்கு ருசி மட்டுமல்ல; மணமும் உண்டு என்று. இன்னும் நம்மில் பலருக்கும் அம்மா வைத்த மீன்குழம்பு, வத்தக்குழம்பு என்று நினைக்கும்போதே நாக்கில் எச்சில் ஊரும். உலகம் முழுவதும் அன்று முதல் நவநாகரிக காலம் வரை மனித உறவை மேம்படுத்த உணவு விருந்துக்கு முக்கியப் பங்கு உண்டு. உணவை ருசியோடு சமைத்து, அன்போடு பரிமாறும்போது உணரலாம், ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்று. ‘ஒருவரின் மனதில் இடம்பெற, முதலில் அவரது வயிற்றைத் தொட்டு ஆழமாக பதிந்துகொள்வது என்பது பெண்களுக்கு கை வந்த கலை’ என்பதையும் லஞ்ச்பாக்ஸ் குறிப்பால் சொல்கிறது.

– கீட்சவள்

| இது, சாஜன் – இலா உறவை உலகுக்குச் சொல்லவே எழுதப்பட்டது. இப்படத்தில் சாஜனுக்கும் அவரது அலுவலக ஜூனியர் நவாசுதீன் கதாபாத்திரத்துக்கும் இடையிலான உறவையும், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இந்தப் பதிவில் எதுவும் சொல்லவில்லை. அந்தப் போர்ஷனைப் படம் பார்த்து அனுபவிக்கவும். |

கீட்சவன், திரை எழுத்தாளர்.